ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., விவகாரம்! ‘பொறுப்பற்ற’ ஜெயக்குமார்!

விசாரிக்க வேண்டிய முறையில் போலீஸ் விசாரித்தால் ராதாகிருஷ்ணன் ஐ ஏ எஸ் உண்மையைச் சொல்வார் என்று ஜெயக்குமார் அளித்த பேட்டி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளிடம் கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐஏஎஸ் சங்கத்தின் செயற்குழு, அதன் தலைவர் டிவி சோமநாதன் தலைமையில் எடப்பாடி பழனிசாமியை அவரது அறையில் சந்தித்து அமைச்சர்களுக்கு கடிவாளம் போடுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன் சர்ச்சையில் இது மேலும் ஒரு முக்கிய திருப்பம் என்று கருதப் படுகிறது.

அண்மைக் காலமாக, தினந்தோறும் ஊடகத்தைச் சந்தித்து தனது முகம் டிவி பெட்டிகளில் வரவேண்டும் என்று விரும்பிக் கொண்டிருக்கும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் பொறுப்பற்ற பேட்டிகள் தமிழ்நாடு அரசுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே பெரிய பிளவை ஏற்படுத்தி உள்ளது என்கிறார்கள்..

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்தும், சிகிச்சைக்கான தரம் குறித்தும் இப்போது அமைச்சர்கள் வெளிப்படையாக பேசி வருகிறார்கள். இரு வருடங்களுக்கு முன்னர், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த போது வாய் திறவாமல் சசிகலாவுக்கு சேவகம் செய்து கொண்டிருந்த அதிமுக.,வினர் இப்போது அரசியலுக்காக வாய் திறந்திருப்பது, முதல்வர் எடப்பாடிக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டுக் களவாணிகள் என்று மக்களிடையே பெயர் பெற்றுவிட்ட தமிழக அமைச்சர்கள், இப்போது தாங்கள் அப்பாவிகள், குற்றமற்றவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக வாய் திறப்பது, இந்த விவகாரத்தில் தாங்களும் குற்றவாளிகளே என்று ஒப்புக் கொள்ளும் விதத்தில் அமைந்துள்ளதையே காட்டுகிறது!

இந்நிலையில், தாங்கள் செய்த தவறுகளுக்கு அதிகாரிகளை பலிகடா ஆக்கும் முயற்சியை அமைச்சர்கள் மேற்கொண்டிருப்பது நிர்வாகச் சிக்கலை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணரவேண்டியது அவசியம்!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...