சபரிமலை விவகாரம் தீர்ந்தால் மட்டுமே கேரளம் அமைதி பெறும்!

சபரிமலை ஒரு தனித்துவமான தலம். இங்கே பெண்கள் வந்துதான் ஆகவேண்டும் என்ற அவசியம் இல்லை! இந்தத் தலத்துக்கு என்றே சில விதிகளை வகுத்து வைத்திருக்கிறார்கள்! அப்படி இருக்க, இதை மட்டும் ஏன் குறிவைத்து கேரள அரசு இயங்க வேண்டும்!

பாலின சமத்துவம் என்பது, சபரிமலைக்கு பெண்களை அனுப்புவது மட்டுமா என்பதை கேரள கம்யூனிஸ்ட் அரசுக்கு கேள்வி கேட்கவேண்டியுள்ளது. சபரிமலை ஐயப்பன் சந்நிதிக்கு பெண்கள் போகலாம் ஆனால், அடுத்துள்ள வாபர் சமாதிக்கு பெண்கள் அனுமதிக்கப் படமாட்டார்கள், அது அவர்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம் என்று பிரித்துப் பார்த்ததிலேயே பிணராயி விஜயனின் உள்நோக்கம் தெளிவாகிவிட்டது.

பல்வேறு தகிடுதத்தங்கள் செய்து கடவுள் நம்பிக்கை அற்ற கம்யூனிஸ பின்னணியில் வந்த இரு பெண்களை எவருக்கும் தெரியாமல், சன்னிதானத்தின் முன் நிற்க வைத்து, கேரளத்தை அமைதியின்மையில் ஆழ்த்திவிட்டார் பிணராயி விஜயன். சபரிமலை மரபுகளை உடைத்தெறியவேண்டும் என்ற வெறி அவரிடம் இருப்பதையே இவை எல்லாம் காட்டுகின்றது.

உச்ச நீதிமன்றம் மரபுகளைக் கணக்கில் கொள்ளாமல், ஏன் பெண்களும் சென்றால் என்ன தவறு என்ற நவீனக் கல்வி மேலேறிய அடிப்படையில் ஒரு தீர்ப்பை சொல்லிவிட்டது. ஆனால், இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகள் எங்கிலும், மதம் என்ற நம்பிக்கை சார்ந்த கட்டமைப்பில் அந்த அந்த அரசுகள் நம்பிக்கையாளர்களுக்குக் கட்டுப்பட்டே இதுவரை நடந்து வந்துள்ளன. அவை மீறப் படும் போது, அங்கே ரத்தகளறியும் கொந்தளிப்பும் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

சபரிமலைக்கு பெண்கள் வரலாமா என்பது குறித்து பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் முன்வைக்கப் பட்டு விட்டன. இருப்பினும், சபரிமலைக்கு பெண்கள் வந்தது குறித்த தகவல்கள் உண்டு.

சிலவற்றை சட்டம் போட்டு சொல்ல வேண்டிய தேவையில்லை. செருப்பு காலுடன் கோயிலுக்குள் வரக்கூடாது என்பது அடிப்படை உணர்வு. அதை எழுதி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் கோயில் நடைமுறை தெரியாதவர்களுக்குத்தான், குறிப்பாக வெளிநாட்டினர் என்று வரும்போது, அவர்களுக்காக எழுதிவைத்து சட்டத்தை புகுத்த வேண்டியுள்ளது.

சபரிமலைக்கு பெண்கள் செல்லக் கூடாது என்பது நம்பிக்கை சார்ந்த எழுதப் படாத விதியாகவே இருந்தது. 1820ல் வெளியான ஒரு கேரள அரசு சர்வே குறிப்பில்,வார்ட் அன்ட் குன்னுர் எனும் ஆங்கிலேய அதிகாரிகள் இருவர் வெளியிட்ட அரசு வெளியீட்டில், பூப்படைந்த பெண்களும் மாதவிடாய் நிற்காத பெண்களும் சபரிமலை ஏறத் தடை இருப்பதாகக் கூறுகிறது. ஆங்கிலேயர்கள் இந்த நடைமுறைக்கு மதிப்பளித்து, அப்படியே கடைப்பிடித்தனர்.

1950கள் வரையில் பெண்கள் ஓரிருவர் கூட சென்றதாக எந்தக் குறிப்பும் இல்லை. சபரிமலை ஒரு யோகபீடம் என்பது ஒரு காரணம். பெண்கள் அதற்கு மதிப்பளித்து அமைதியாக இருந்தார்கள். திருவிதாங்கூர் அரசுக்கு சொந்தமாக சபரிமலைக் கோவில் இருந்தபோதும், திருவிதாங்கூர் மஹாராணி அங்கு செல்ல எண்ணவில்லை. ராணி பார்வதி பாய், கோவில் விதிகளை அனுசரித்து, 1942ல் தனது கருப்பை நீக்கப்பட்ட பின்பே சபரிமலை வந்தார்.

சபரிமலை வழிப்பாதை பெரிய பாதை எனும் 45 மைல் நடந்து செல்லும் கடினமான பாதை. அதில் பெண்கள் எவரும் வந்ததில்லை. ஆனால், 1960களில் சிறிய வழிப் பாதை எனும் பம்பை வழியே பாதை உருவாக்கப் பட்ட பின்னர், வயதான பெண்கள் சபரிமலைக்கு வரத் தொடங்கினர். சிறிய வயதினர் எவரும் வர முயற்சி செய்யவில்லை. ஆன்மிகப் பாடகி பெங்களூர் ரமணியம்மாள் தனது 55 வயதுக்குப் பின்னர் சபரிமலை யாத்திரை மேற்கொண்டார். தன்னுடன் ஒரு குழுவையும் அழைத்து வந்தார்.

சபரிமலையுடன் தொடர்புடைய தாழமன் இல்லம், கம்பங்குடியார், பந்தளம் ராஜ குடும்பம், ஆலங்காடு, அம்பலப்புழை சங்கம் என இவர்களின் குடும்பங்களில் எவரும் விதியை மீறி தங்கள் குடும்பப் பெண்களை மலைக்கு அழைத்து வந்ததில்லை! வருடம் ஒரு முறை மட்டுமே திறந்த கோயில், பின்னர் இருமாதத்தில் ஒருமுறை (சம்வத்சரம்) பின்னர் மாதந்தோறும் முதல் நாள் என்று திறக்கப் பட்ட பின்னர், வசதிகள் பெருகின.

பம்பா வழிப்பாதை உருவானதால், சிறுமிகள், வயதான பெண்கள் வரத் துவங்கினர். 1975-80களில் ஆந்திர கர்நாடக பக்தர்கள் அதிகம் வந்தனர். அவர்கள் குடும்பத்துடன் வந்து, பம்பையில் பெண்களை விட்டுவிட்டு, தாங்கள் மட்டும் மேலே சென்று தரிசனம் செய்து வரும் பழக்கத்தை உருவாக்கினர்.

இந்நிலையில்தான் எம்.என்,நம்பியார் நடித்த ஐயனின் புகழ்பாடும் கதைகளைக் கொண்ட ‘நம்பினார் கெடுவதில்லை’ திரைப்படத்தை சபரிமலையிலேயே படமாக்க எண்ணினர். 1986ல் இளம் நடிகைகளான சுதாசந்திரன், ஜெயஸ்ரீ உள்ளிட்டோருடன் படக்குழுவினர் வந்து படமாக்கப் பட்டது. இதுதான் சபரிமலைக்கு பெண்கள் வருவது குறித்த பிரச்னையை பூதாகாரமாக்கி, நீதிமன்றத்துக்குச் சென்றது.

கேரள நீதிமன்றம் தலையீட்டில், 1991ல் பூப்பெய்திய பெண்கள், மாதவிடாய் நிற்காத பெண்கள் என்றெல்லாம் விதியில் எழுத முடியாத காரணத்தால், நாகரீகமாக 10 வயதுக்கும் குறைவான, 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே சபரிமலையில் அனுமதிக்கப்படுவர் என்ற விதி அமல் படுத்தப் பட்டது.

1972ல் ஆன்மிக எழுத்தாளர் பரணீதரன் கேரள விஜயம் என்ற தொடர் கட்டுரையில் குறிப்பிடும் ஒரு சம்பவம்… சபரிமலையில் பெரியவர் ஒருவர் தேவஸ்தான அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார். அங்கிருந்த தகவல் பலகையைச் சுட்டிக் காட்டி, “இங்கே குழந்தைகளுக்கு அன்னப்ராசனம் நடத்த கட்டணம் என்று போட்டிருக்கிறீர்கள், அம்மா இல்லாமல் கைக்குழந்தை எப்படி வரும்? நீங்களே இங்கே இளம் பெண்கள் வருவதை ஊக்குவிக்கிறீர்களா?” என்று சண்டை போட்டதாகவும், பின்னர் அது நீக்கப் பட்டதாகவும் தகவல் உண்டு.

1994ல் ஐ.ஏ.எஸ் அதிகாரி வத்சலா குமாரி, தனது 42வது வயதில், பணியின் காரணமாக சபரிமலை செல்ல அனுமதி வேண்டி நீதிமன்றத்தை அணுகினார். பணிக்காக அனுமதி அளித்த நீதிமன்றம், ஆலய சம்ப்ரதாயத்தில் தலையிடக்கூடாது என்று சொல்லி, பதினெட்டாம்படி ஏறவோ, சன்னிதானம் செல்லவோ அனுமதி அளிக்கவில்லை!

அப்போதும் பக்தர்கள் இது ஆலய சம்ப்ரதாயத்துக்கு எதிரானது என்றுணர்ந்து அதை கடைப்பிடிக்கவே செய்தனர். மீற நினைத்தவர்களை எதிர்த்துள்ளனர்.

இப்படிப் பட்ட பின்னணிகள் சில இருக்கும் போது, கேரள முதல்வர் பிணரயி விஜயன் வலுக்கட்டாயமாக இரு பெண்களை நிற்க வைக்க நினைத்தது உள்நோக்கம் கொண்டதுதான்! அதே நேரம், மறு நாள் இலங்கையில் இருந்து வந்த பெண் பக்தை சசிகலா என்பவரை போலீஸார் வயது காரணம் மாட்டி, அனுமதி மறுத்துள்ளனர். ஆனால் அரசோ பொய்யாக அந்தப் பெண் தரிசனம் செய்தார் என்று வீடியோ வெளியிட்டது. அதில் வேறு ஒரு வயதான பெண்மணி தரிசனம் செய்தது ஊடகங்களில் அம்பலமானது.

தொடர்ந்து, ஒரு பெண் தன்னை வயதான கோலத்தில் தலைமுடிக்கு வெள்ளை டை அடித்துக் கொண்டு, மாறு வேடம் பூண்டு சபரிமலைக்குச் சென்றதாக ஊடகங்களில் பேட்டி அளித்தார். அவரது செயல் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சபரிமலை பாதுகாப்பு விஷயத்தில் போலீஸார் கோட்டை விட்டுள்ளதாக பொருமித் தள்ளினர் பக்தர்கள். போலீஸாரும் அந்தப் பெண் மீது, ஏமாற்றுதல், மாறு வேடம் போட்டு ஆள்மாறாட்டம் செய்தல் என சில பிரிவுகளில் கிரிமினல் வழக்கு பதிவு செய்தது.

சபரிமலை விவகாரத்தில் ஆசாரங்கள் காப்பாற்றப் பட வேண்டும் என்று பெண்கள் சாலைகளில் விளக்கு ஏற்றும் போராட்டம் நடத்தினால், பதிலுக்கு, கம்யூனிஸ, இஸ்லாமிய, கிறிஸ்துவ பெண்களைக் கொண்டு, மகளிர் சுவர் என ஒரு அரசு சார் நிகழ்ச்சி நடத்தி அதன் மூலமும் பிணராயி விஜயன் தன் உள்நோக்கத்தை வெளிப்படுத்தி விட்டார்.

எனவே, பக்தை தரிசனம் செய்வதற்கு மறுப்பு, நம்பிக்கையற்ற நாத்திக கம்யூனிஸ்ட் பெண்கள் வலுக்கட்டாயமாக தரிசனத்துக்கு திணிப்பு என்று அரசியல் செய்யும் பிணராயி விஜயன் அரசு முழுக்க முழுக்க இந்து மத நெறிமுறைகளை அழிக்கும் செயலில் மட்டுமே கவனம் கொண்டுள்ளது என்பதும், பெண்கள் தரிசனம் என்பதோ, பாலின சமத்துவம் என்பதோ ஒரு பொருட்டல்ல என்பதும் நன்றாகத் தெரிகிறது!

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.