அடுத்து நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், இடைக்கால பட்ஜெட்டில் சலுகைகளும் அறிவிப்புகளும் தாராளமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இது தேர்தல் கால பட்ஜெட் என்பதால், அருண் ஜேட்லி இல்லாமல், நல்ல முறையில் கவர்ச்சிகரமான பட்ஜெட்டாக தயாரித்தளிக்க மோடி விரும்பியிருக்கக் கூடும் என்றும், அதற்கு சரியான நபராக பியூஷ் கோயலை மோடி தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2014ல் மோடி பிரதமர் ஆன பின்னர், நாட்டின் பொருளாதாரம் கிடுகிடுவென உயர்ந்தது. வலிமையான ஆட்சி, உறுதியான முடிவுகள், ஊழலற்ற நிர்வாகம், வெளிப்படையான பரிவர்த்தனைகள் என மோடி உருவாக்கிய நம்பிக்கையால் பங்குச் சந்தைகள் தொடங்கி, வர்த்தகம் உச்சத்தை எட்டியது. ஆனால், தொழில்துறையில் சில தேக்கங்கள் ஏற்பட்டன. அதற்கு நிதி அமைச்சகத்தின் சில நடவடிக்கைகள் காரணமாகப் பார்க்கப் பட்டன.

வங்கித் துறையில் ஏற்பட்ட இழப்பு, கடன் வாங்கி ஏமாற்றிவிட்டு ஓடிச் சென்றவர்களால் வராக் கடன் அதிகரிப்பு என பல அம்சங்கள் பின்னோக்கி இழுத்தன. குறிப்பாக காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் செய்தவர்களுக்கு தகுந்த தண்டனை பெற்றுத் தராமல், இழுத்தடிப்பதும், ப.சிதம்பரம் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களுக்கு அருண் ஜேட்லி நெருக்கம் என்பதால் அவர்கள் தப்பித்து வந்தார்கள் என்றும் பரவலாக விமர்சனங்கள் எழுந்தன.

அருண்ஜேட்லியால் வரிசெலுத்துவோருக்கான நலன்களை சரியாகக் கொண்டு சேர்க்க முடியவில்லை. பொருளாதாரம் உயர்ந்தும், வேலை வாய்ப்புகளை அதிக அளவில் உருவாக்க சரியான திட்டங்களை முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்நிலையில், பியூஷ் கோயல் நிதி அமைச்சகப் பொறுப்பை ஏற்றிருக்கிறார். வழக்கம் போல் பட்ஜெட்டுக்கு முன்னர் அல்வா கிண்டும் வேலையை இந்த முறை பியூஷ் கோயல் மேற்கொள்ளக் கூடும்!

பிரதமர் நரேந்திர மோடியுடன் பலமுறை பயணப் பட்டிருக்கிறார். வெளிநாடு சென்றிருக்கிறார். ஆனால், 51 வயதாகும் பியூஷ் கோயலுக்கு அடித்தட்டு அரசியலும், தேர்தல் அரசியலும் தெரியாது என்ற விமர்சனமும் உள்ளது. மேதைத்தனத்தால் நிர்வாகத்தை சிறந்த முறையில் செய்து வரும் பியூஷ் கோயலுக்கு அடித்தட்டு மக்களின் மனதைப் புரிந்து கொண்டு சலுகைகள் வழங்க வேண்டிய தேர்தல் காலச் சூழலில் தாம் நிதி அமைச்சகப் பொறுப்பில் இருந்து பட்ஜெட்டைத் தயாரிக்கிறோம் என்ற உள்ளுணர்வு இருக்க வேண்டுமே என்று பாஜக.,வினர் கூறுகின்றனர்.

இந்நிலையில், மோடியின் ஏழைகளுக்கான அரசியல் என்ற கனவுகளை நிறைவேற்றும் விதமாக பியூஷ் கோயல் தேர்தல் பட்ஜெட்டைத் தயாரிக்க வேண்டிய கட்டாயச் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...