பத்திரிகையாளனுக்கு பூணூல் போட்ட சாதீய அநாகரீகம் கருணாநிதியோடு ஒழியட்டும்!

பத்திரிகையாளனுக்கு பூணூல் போட்டுவிட்ட அநாகரீகம் கருணாநிதியோடு ஒழியட்டும்... டாக்டர் கிருஷ்ணசாமிக்கு வேண்டாம்!

பத்திரிகையாளனுக்கு பூணூல் போட்டுவிட்ட அநாகரீகம் கருணாநிதியோடு ஒழியட்டும்… டாக்டர் கிருஷ்ணசாமிக்கு வேண்டாம்!

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, திமுக., வேட்பாளரிடம் தோற்றுப் போனார். தென்காசி தொகுதியில் மீண்டும் மீண்டும் தோல்வியைத் தழுவும் டாக்டர் கிருஷ்ணசாமி, தற்போதைய தேர்தல் குறித்த தனது கருத்துகளைப் பகிர்வதற்காக செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்.

இன்று சென்னையில் புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், செய்தியாளர்கள் கேள்வி- பதில் போல் அமையாமல், கடும் வாக்குவாதம் போல் செய்தியாளர் சந்திப்பு அமைந்துவிட்டது. செய்தி தொலைக்காட்சியில் குறிப்பிட்ட கட்சித் தலைவர்களை நேர்காணல் செய்யும் ஊடக செய்தி ஆசிரியர் அல்லது தொகுப்பாளர் போல் தங்களைக் கருதிக் கொண்டு, நிருபர்கள் கேள்வி கேட்டதாக புதிய தமிழகம் கட்சியினர் கூறுகின்றனர்.

இதற்குக் காரணம், ஒரு கட்டத்தில் எரிச்சலுற்று அமைதி இழந்த கிருஷ்ணசாமி, செய்தியாளர் ஒருவரைப் பார்த்து நீ என்ன சாதி என்று ஒருமையில் கேட்டு, சாதியை இழுத்ததுதான்!

ஒரு சாதீயக் கட்சியாகத்தான் புதிய தமிழகம் பார்க்கப் படுகிறது என்ற வெளிப் பார்வை விமர்சனத்தை உண்மையாக்கும் விதத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி நடந்து கொண்டது வருந்தத் தக்கது. இதற்காக செய்தியாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

செய்தியாளர்களுக்கு ஜாதி, மதம், இனம், மொழி கிடையாது. டாக்டர் கிருஷ்ணசாமி நிலப் பிரபுத்துவ மனப்பான்மையுடன் அவரது கட்சியாளர்களை அணுகலாம், பத்திரிகையாளர்களை அணுகுவது கண்டிக்கத்தக்கது. கையுறை அணிந்து சொந்தக் கட்சிக்காரர்களுடன் கைகுலுக்கும் கிருஷ்ணசாமி, காலம் மாறிக்கொண்டு வருகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். செய்தியாளர் சந்திப்பில் பல கேள்விகள் வரும் உண்மையான அரசியல் தலைவர்கள் அதை எதிர்கொள்வார்கள், அல்லது வேறு கேள்வி என தவிர்ப்பார்கள். ஆனால் செய்தியாளர்களை ஒருமையில் அழைப்பது, ஜாதி என்ன, எந்த ஊர், இந்தச்சானல் இப்படித்தான் கேட்பாய் என்று பழைய பாணியில் செயல்பட்டால் இன்னும் கடைக் கோடிக்கு அவர் செல்வது நிச்சயம்.

கேள்வி கேட்டால் பதில் சொல்லவேண்டியது பிரஸ்மீட் நடத்துபவர் கடமை, சாதாரண கேள்வியைக்கூட எதிர்கொள்ள முடியாமல் ஜாதி, மொழி, மத அடையாளங்களுக்குள் பத்திரிகையாளர்களை திணிக்க முயற்சி செய்யும் போக்கு, ஆபத்தானது; அறுவறுக்கத்தக்கது..!

அண்மைக் காலமாக செய்தியாளர் சந்திப்புகளில் சில அரசியல் தலைவர்கள் , செய்தியாளர்களிடம் எந்த சானல் ? எந்த ஊர்? என்றெல்லாம் மிரட்டும் போக்கும் அதிகரித்து வருகிறது. பத்திரிகையாளர் என்ற அடையாளம் தான் பத்திரிகையாளர்களுக்கே தவிர அவர்கள் மீது வேறு எந்த அடையாளங்களை திணித்திடவோ, மிரட்டிடவோ நினைக்க வேண்டாம் .. என்று இன்று பத்திரிகையாளர் சங்கங்கள் அறிக்கை வெளியிட்டிருக்கின்றன.

அரசியல்வாதிகளின் இத்தகைய விபரீதப் போக்குக்கு  முன்னோடி திமுக., தலைவராக இருந்த கருணாநிதியே. மவுண்டு ரோடு மகாவிஷ்ணு என்று ஒரு பத்திரிகையை சாடினார். இன்று அந்தப் பத்திரிகை தொழிற்சங்கத்தில் தலைமைப் பதவியில் அமர்ந்துள்ளார் அவரது மகள். மவுண்டு ரோடில் பூணூல் அணிந்த பத்திரிகைகள் என்று சாதியைக் குறிப்பிட்டு கட்டம் கட்டினார்.

பத்திரிகையாளர் சந்திப்புகளின் போது, நீ எந்த பத்திரிகை என்று கேள்வி கேட்டார். வீட்டுக்கு ஆட்டோ வரும் ஜாக்கிரதை என்று எச்சரித்தார்கள் அடிவருடிகள். கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், திசை திருப்ப அவர் கையாண்ட உத்திதான் தனிப்பட்ட அடையாளங்களைக் கேட்டு அசிங்கப் படுத்துவது. .

ஆனால் அதே கருணாநிதியால் வாங்கப்பட்டு, வளர்க்கப் பட்டு, ஊட்டச் சத்து கொடுக்கப்பட்ட பத்திரிகைகள், தனது ஊடகத்திலேயே பணிக்கு அமர்த்தப் பட்ட பத்திரிகையாளர்கள் எவரும் இதே போல் பத்திரிகையாள சங்கங்கள்  என்ற பெயரில் அவரிடம் கேள்வி கேட்டிருக்கவோ, கண்டனம் தெரிவித்திருக்கவோ வாய்ப்பில்லை தான்!

முன்னாள் முதல்வர் பக்தவத்சலத்தால் அடையாளம் காட்டப்பட்ட விஷக்கிருமிகள் பரவத் தொடங்கி அனைத்து இடங்களிலும் ஊன்றப்பட்டு இன்று விஷ விருட்சங்களாகி நிற்கின்றன. அது ஊடகத்தையும் விட்டு வைக்கவில்லை! தமிழகத்தின் இந்தப் போக்கை சரி செய்ய ஊடகங்களே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம்!

இல்லாவிட்டால், இதே செய்தியாளர் சந்திப்பில் கிருஷ்ணசாமி கேட்டது போல்… இந்தக் கதையெல்லாம் இங்கே வேணாம்.. சாதி இல்லாம, மதம் இல்லாம, மொழி இல்லாமலா நீங்க எல்லாம் பிரஸ் வெச்சிக்கீங்க.. போங்க… என்று எழுந்து சென்றதை ஆமோதிப்பது போலாகிவிடும்.

பூணூல் என்ற சாதீய வட்டத்துக்குள் கருணாநிதியைப் போல் அடக்குவது சரியென்றால் நீ என்ன சாதீ என்று கேட்ட கிருஷ்ணசாமியின் கேள்வியும் சரி என்றாகும். ஆனால் நாகரீகம் கொண்டவர்களாக…  நாம் இரண்டையும் கண்டிக்கிறோம்!

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...