சம்ஸ்கிருதமா… தமிழா… எது மூத்த மொழி?

சம்ஸ்கிருதத்தின் மேன்மையை உணர்ந்தவர்களும் மொழி அரசியல்வாதி களின் பிற மலினங்களை எதிர்ப்பவர்களும் ஆங்கிலத்தை ஒரு பாடமாகவே படியுங்கள் என்று சொல்லும் ஆங்கிலேயர்களும் ஒன்று சேரவேண்டும்.

சம்ஸ்கிருதமா… தமிழா… எது மூத்த மொழி? நாம் பேச வேண்டிய விஷயம் இதுவே அல்ல.

சம்ஸ்கிருதமும் தமிழும் ஒரு மொழி என்ற அளவில் ஆங்கிலத்தைவிட மூத்த மொழிகள். சம்ஸ்கிருத இலக்கியமும் தமிழ் இலக்கியமும் ஆங்கிலத்தை விடச் செழுமையானது.

சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் எழுதப்பட்டிருக்கும் பழம் பெரும் படைப்புகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பவற்றைவிட பரந்து விரிந்தவை.

அந்தக் காலகட்ட விஞ்ஞான சாதனைகளை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் உலக மொழிகளிலேயே சம்ஸ்கிருதமும் தமிழும் முன்னணியில் இருந்த இரு மொழிகள்.
*
பழம்பெரும் மொழிகளான தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய இரண்டில் இன்றும் பேசு மொழியாக இருப்பது தமிழே (சம்ஸ்கிருதம் ஒருபோதும் பாரதத்தின் அனைத்து மக்களாலும் பேசப்பட்ட மொழியாக இருந்ததில்லை என்றும் சொல்லப்படுகிறது)

சம்ஸ்கிருதத்துக்கு இணையாக பாரத மொழிகளில் செழுமை மிகுந்த ஒரே மொழி தமிழே. எது உயர்ந்தது என்று சொல்லவேண்டுமென்றால் ஒரு நபரின் இரண்டு கண்களில் எது உயர்ந்தது என்ற கேள்வியையே பதிலாகச் சொல்லமுடியும். அந்த அளவுக்கு இரண்டும் உயர்ந்தவையே.

பாரத மொழிகளிலேயே சம்ஸ்கிருதத்தின் எழுத்துகளில் இருந்து பெரிதும் மாறுபட்டது தமிழ் மொழியே.

இவை தமிழின் தனித்தன்மையைப் பறைசாற்றுபவை

அதே நேரம் தமிழும் சம்ஸ்கிருதமும் பகை மொழிகள் அல்ல; சகோதர மொழிகள். தமிழின் கணிசமான காப்பியங்கள் சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டவையே.

சம்ஸ்கிருதம் இறை வழிபாட்டுக்கான மொழி மட்டுமல்ல. சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருக்கும் படைப்புகளில் இறை வழிபாடு சம்பந்தப்பட்டவை 10% மட்டுமே. தத்துவம், தர்க்கம், கணிதம், சிற்பம், வானசாஸ்திரம், மருத்துவம், கட்டுமானக்கலை, அரசியல், பொருளாதாரம், வியாபாரம், நடனம், நாட்டியம், நாடகம், பாடல் மற்றும் கடந்த காலத்தில் இருந்த ஆய கலைகள் 64ம் சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருக்கின்றன.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் இறை வழிபாட்டு மொழி இன்றும் சம்ஸ்கிருதமே. சம்ஸ்கிருதம் பாரதத்தின் மட்டுமல்லாமல் பழங்காலத் தமிழக ஆட்சியாளர்களின் பேராதரவு பெற்ற மொழியாகவே இருந்திருக்கிறது.

சம்ஸ்கிருதம் அரசப் பேராதரவும், அறிவுத்துறை, கலைத்துறை சார்ந்த களஞ்சிய மொழியாகவும் இருந்த காலகட்டங்களில் தமிழுக்கு எந்த இழப்பும் ஏற்பட்டிருக்கவில்லை. அனைவருக்கும் அடிப்படைக் கல்வி தரப்பட்ட அந்தப் பழங்காலகட்டத்தில் தமிழகத்தின் பயிற்று மொழியாக தமிழே இருந்துவந்திருக்கிறது. பாதிரிகளின் ஆங்கிலம் காலடி வைத்த பிறகே பள்ளிகளில் தமிழ் பயிற்றுமொழி அந்தஸ்தை இழந்தது. அந்தவகையில் தமிழ்க் கல்வியின் பின்னடைவுக்கு சம்ஸ்கிருதமல்ல; ஆங்கிலமே காரணம்.

ஆங்கிலத்தை எதிர்த்து தமிழும் சம்ஸ்கிருதமும் போராடுவதே சரியான செயல். ஆனால், ஆங்கிலம் உலக மொழியாக ஆகிவிட்டிருக்கும் இன்றைய நிலையில் அதை அரவணைத்துக்கொள்வதில் எந்தப் பிழையும் இல்லை. தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் எதிரி மொழிகளாகக் கட்டமைத்துப் போராடுவதுதான் மிகப் பெரிய பிழை. மலின அரசியல் சக்திகளே அதை முன்னெடுத்துவருகின்றன.

இன்றும் அனைத்து ஜாதியினரும் கும்பிட முடிந்ததும் பெருமளவிலான கூட்டம் கூடக்கூடியதுமான தமிழகக் கோவில்களின் கருவறையில் சம்ஸ்கிருதம் கம்பீரமாக முழங்கிவரும் நிலையில் அரசியல் களத்தில் அதை எதிர்க்கும் சக்திகளை அந்த மக்களே நல்வழிப்படுத்தவேண்டும்.

ஒருவேளை மக்கள் இந்த விஷயத்தில் படு தெளிவாக நடந்து கொள்கிறார்களா..?

லீவ் இட் டு எக்ஸ்பர்ட் என்பதற்கு ஏற்ப பூஜை வழிபாடு முறைகளில் அதில் நிபுணர்களான பிராமணர்களின் சொல் கேட்டு சம்ஸ்கிருதத்தை முன்னிலைப்படுத்தியும், அரசியல் சார்ந்த விஷயங்களில் பிராமணரல்லாதார் சொல் கேட்டும் தமிழை முன்னிறுத்தியும் கல்வி சார்ந்த விஷயங்களில் உலக மொழியை முன்னிறுத்தியும் தெளிவாகவே நடந்துகொள்கிறார்களா?

சம்ஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளின் ஆதிக்க சக்திகளின் போட்டி பொறாமையை மக்கள், நல்ல பொழுதுபோக்கு என்று தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிறார்களா?

மொழி அரசியல் தளத்தில் இருந்து பார்த்தால் இது ஓரளவுக்கு சரியானது தான். ஆனால், தமிழ் மொழிக்குத் தரும் அரசியல் முக்கியத்துவமானது அந்த அரசியல் சக்திகளின் பிற அனைத்து மலினங்களுக்கும் ஆதரவு தருவதாக ஆகிவிடுவதை உணரத் தவறிவிடுகிறார்கள்.

அதுபோல் ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கற்றுக்கொள்வதே போதுமானதாக இருக்கும் நிலையில் அதைப் பயிற்று மொழியாக ஆக்கிக்கொள்ளும் தவறையும் செய்கிறார்கள்.

சம்ஸ்கிருதத்துக்குத் தரும் முக்கியத்துவத்தைப் பொறுத்தவரையில் நாட்டின் 80% கோவில்களில் இன்றும் தாய்மொழி வழியிலான வழிபாட்டையே பின்பற்றுவதால் மற்ற இரண்டில் இருக்கும் அளவுக்கு எந்தவொரு தீமையும் இதில் இல்லை. எனவே கோவில், பக்தி விஷயத்தில் தமிழக மக்களுக்கு இருக்கும் தெளிவு அரசியல் தளத்திலும் கல்வித் தளத்திலும் வந்தாகவேண்டும்.

சம்ஸ்கிருதத்தின் மேன்மையை உணர்ந்தவர்களும் மொழி அரசியல்வாதி களின் பிற மலினங்களை எதிர்ப்பவர்களும் ஆங்கிலத்தை ஒரு பாடமாகவே படியுங்கள் என்று சொல்லும் ஆங்கிலேயர்களும் ஒன்று சேரவேண்டும்.

  • பி.ஆர்.மகாதேவன்
-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...