மதுரை : நீட் விவகாரத்தில் சிபிஎஸ்இ.,க்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ”நீட் தேர்வை தமிழ் வழியில் எழுதியபோது, அதில் 49 வினா-விடைகள் தவறாக இருந்தன. இதனால் 196 மதிப்பெண் குறைவாகக் கிடைப்பதால், தமிழில் தேர்வு எழுதியவர்களுக்கு மருத்துவ இடங்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவர்களின் நலன் கருதி தவறான 49 வினா-விடைகளுக்குரிய 196 மதிப்பெண்களை வழங்கவும், நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது எனவும் உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் முன்னிலையில் வந்தது. சிபிஎஸ்இ., தரப்பில், அறிவியல் பாடத்திலுள்ள ஆங்கில வார்த்தைகளை மொழிமாற்றம் செய்தபோது சரியான தமிழ் வார்த்தையைக் கண்டறிந்து அவற்றை பயன்படுத்த என்ன முயற்சி மேற்கொள்ளப்பட்டது, என்ன மொழி அகராதி பயன்படுத்தப்பட்டது என்பது பற்றி சிபிஎஸ்இ விளக்கம் தரவேண்டுமென்று உத்தரவிட்டனர்.
இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிபிஎஸ்இ., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்வு எழுதிய மாணவர்கள் வழக்கு தொடராத நிலையில், இந்த வழக்கை பெரிதாக எடுக்க வேண்டாம் என்று கூறினார். அவரது இந்தக் கருத்துக்கு நீதிபதிகள் கோபப் பட்டனர். நீங்கள் தவறு செய்தாலும், அதை எதிர்த்து யாரும் வழக்கு தொடர கூடாது என்கிறீர்களா? நீட் விஷயத்தில் சிபிஎஸ்இ அமைப்பு சர்வாதிகாரி போல செயல்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினர்.
பீகாரில் தேர்வு எழுதியவர்களைவிட தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறதே எப்படி? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதய நாளங்கள் என்பதற்கு பதிலாக இருதய நலங்கள் என்றும், வவ்வால் என்பதற்கு பதில் வாவால் என்றும், கடை நிலை, இடை நிலை போன்ற வார்த்தைகள் மாற்றி, மாற்றியும் கேட்கப்பட்டுள்ளதே, இதை எப்படி மாணவர்கள் சரியாகப் புரிந்து கொள்வார்கள். இதற்காக கருணை மதிப்பெண் தர முடியாதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதை அடுத்து இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்ததாகக் கூறிய நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.