spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாநீர் இன்றி அமையாது உலகு! பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை.!

நீர் இன்றி அமையாது உலகு! பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை.!

- Advertisement -

modi

ஹிந்துஸ்தானத்தின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப் படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, தில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.

முன்னதாக, பாரத நாட்டின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

தில்லி செங்கோட்டையில் தொடர்ந்து 6வது முறையாக தேசியக் கொடி ஏற்றும் காங்கிரஸ் அல்லாத 2 வது பிரதமராக மோடி சிறப்பிடம் பெற்றுள்ளார். முன்னதாக, பாஜக.,வின் அடல் பிஹாரி வாஜ்பாய் மட்டுமே தொடர்ந்து 6 முறை தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றிவைத்து உரை நிகழ்த்தினார்.

இன்று காலை மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, பின்னர் செங்கோட்டைக்கு வந்தார். அவருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

செங்கோட்டையின் லாஹோரி கேட் வழியாக வந்து, காலை 7.30க்கு பிரதமர் மோடி மூவர்ணக் கொடி ஏற்றினார். பின்னர் தில்லி செங்கோட்டையில் சுதந்திர தின உரையை நிகழ்த்தினார் பிரதமர் மோடி.
அவரது உரையில்…

சுதந்திரத்திற்காக உயிர்த் தியாகம் செய்த அந்த தியாகிகளுக்கு எனது வணக்கங்கள். நாட்டின் சுதந்திரத்திற்காக பலர் தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்தனர். பலர் தங்கள் இளமைக்காலம் முழுவதும் சிறையில் கழித்தனர். இன்று அந்த தியாகிகளின் நினைவுகளை வணங்குகிறேன். விடுதலைக்காகப் போராடியவர்களுக்கு எனது வணக்கங்கள்.

இன்று ரக்‌ஷா பந்தனும் கொண்டாடப்படுகிறது. சகோதர சகோதரிகளின் அன்பு பந்தத்தை உணர்த்தும் இந்நாளில் நாட்டின் அனைத்து சகோதரர் சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துகள்

modi independence5புதிய அரசு அமைந்த பிறகு மீண்டும் உங்கள் கௌரவத்தை ஏற்கும் வாய்ப்பு கிடைத்தது. புதிய அரசு அமைத்து 10 வாரங்கள் கூட ஆகவில்லை. ஆனால் நாட்டின் அனைத்து மக்களுக்கும் புதிய பலம் கிடைத்துள்ளது. மக்கள் சேவை செய்வதற்கு அளித்த வாய்ப்புகளில் ஒரு இழையைக் கூட விட்டுவிடாமல் பணியாற்ற உறுதியளிப்போம்.

முஸ்லீம் தாய்மார்கள், சகோதரிகளின் உரிமைகளுக்காக முத்தலாக் முறை நீக்கப்பட்டது. விவசாயிகளுக்காக 90 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கும் ஓய்வூதியம் கிடைக்கும் என்று விவசாயிகள் கனவுகூட கண்டிருக்க மாட்டார்கள். அவர்கள் 60 வயதுக்குப் பின்னர் கௌரவமாக வாழ்வதற்கு இது உதவியாக இருக்கும்!

நாட்டின் நதி நீர்ப் பிரச்னைகளைத் தீர்க்க ஜலசக்தி அமைச்சகம் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு புதிய சட்டங்கள், புதிய சிந்தனை தேவை. குழந்தைகள் நலனுக்காகவும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராகவும் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

modi independence2சாமான்ய மக்களின் கனவுகள் அவர்களின் சங்கல்பங்களுடன் இணைந்துள்ளன. எனது தேசம் மாறும் என்ற நம்பிக்கையும் புதிய பலமும் கிடைத்திருக்கிறது.

அனைவரையும் அரவணைத்துச் செல்லும் கொள்கையுடன் செல்கிறோம். கடந்த 5 ஆண்டுகளில் இந்த நம்பிக்கை பலம் பெற்றுள்ளது. 130 கோடி இந்தியர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்காக எனக்கு இந்த வாய்ப்பை அளித்துள்ளனர்.

2019 தேர்தலில் போட்டியிட்டது மோடி அல்ல…இந்திய மக்கள்தான்.. நமது முஸ்லீம் மகள்கள், சகோதரிகள் முத்தலாக் அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருந்தனர்! இஸ்லாமிய நாடுகளும்கூட முத்தலாக் முறையை நீக்கிவிட்டன. ஏனோ இந்தியாவில் பல காலங்களாக அது சாத்தியமில்லாமல் போய்விட்டது.

இப்போது சட்டப் பிரிவு 370, 35 ஏ ஆகியவை நீக்கப்பட்டன. கடந்த 70 ஆண்டுகளாக நடைபெறாத மாற்றம் புதிய அரசு அமைத்த 70 நாட்களுக்குள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர், லடாக் மக்களுக்கு புதிய சிறகுகள் கிடைக்க இந்தப் பொறுப்பை 130 கோடி மக்களும் ஏற்க வேண்டும்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் வேரூன்றியது. ஒருசில குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக ராஜபோகம் கண்டனர். ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அவர்களின் உரிமையும் வாழ்வும் கிடைக்க வேண்டும். 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது அனைத்து ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு பலனைத் தரும். 370 சட்டப்பிரிவை நீக்க முந்தைய ஆட்சிகளுக்கு துணிவு இல்லை. 35 ஏ நிரந்தரமாக்காமல் தற்காலிகமாகவே வைக்கப்பட்டிருந்தது!

ஒரே நாடு ஒரே அரசியல் சட்டம் என்ற கனவு நனவாகியுள்ளது. உண்மையில் ஒன்றிணைந்த நாடாக இந்தியா உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையும் இங்கு தேவை.

modi independence4கடந்த 5 ஆண்டுகளில் வறுமை ஒழிப்பு மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது! கடந்த கால அரசுகள் ஏழை மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. ஏழைகளின் வீடுகளில் மின்சாரம் இல்லை, கழிவறை இல்லை என்ற நிலை இருந்தது. ஏழைகளுக்கு குடிக்கக் குடிநீர்கூட கிடைக்காத நிலை இருந்தது. ஒவ்வொரு வீட்டுக்கும் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்று நான் யோசித்தேன்! வரும் நாட்களில் ஜல் ஜீவன் மிஷன் அமல்படுத்தப்படும்.

மூன்றரை லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை குடிநீருக்காக செலவிடப்படும். விவசாயிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் கிடைக்க வழி வகுக்கப்படும். நீர் ஆதாரங்களை பாதுகாப்பதற்காகவும் நதிகள், குளங்களை தூர் வாரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

திருவள்ளுவர் என்ற மகான் தண்ணீர் பிரச்னையைப் பற்றி யாரும் சிந்திக்காத காலத்திலேயே சிந்தித்தார்! ‘நீரின்றி அமையாது உலகு’ என்றார் திருவள்ளுவர்! 70 ஆண்டுகளில் செய்யாததை 4 ஆண்டுகளில் செயல்படுத்துவோம். விவசாயம், குடிநீர் திட்டங்களுக்காக ரூ.3.5 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இளைஞர்களிடையே தண்ணீரின் அவசியம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்களின் ஆதரவைப் பெற்று பயணிக்க வேண்டிய நேரம் இது!

modi independence3நூறு ஆண்டுகளுக்கு முன் ஜெயின் முனிவர் ஒருவர் கூறினார் தண்ணீர் பல சரக்கு கடைகளில் விற்கப்படும் என்று… இன்று நாம் அந்த நாளைக் காண்கிறோம்..! தூய பாரதம் என்ற இயக்கத்தைப் போல் தண்ணீருக்காகவும் ஒரு இயக்கம் தொடங்குவோம்.

மக்கள்தொகைப் பெருக்கம் என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது! குழந்தை பிறக்கும் முன்பே நாம் அதன் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும்! எந்த ஒரு பெற்றோரும் குழந்தைகளைப் பற்றி சிந்திக்காமல் இருக்கக் கூடாது!

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது குறித்து நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.! சுதந்திர நாடு என்பதன் பொருள் மெள்ள மெள்ள அவர்கள் வாழ்விலிருந்து அரசு விலகிப் போவதுதான்! மக்கள் தங்கள் வாழ்வின் மீது அரசின் அழுத்தத்தை உணரக் கூடாது! ஆபத்துக் காலங்களில் அரசு விலகியிருக்கவும் கூடாது! ஒரு தோழனைப் போல் அரசு மக்களுடன் அவர்கள் வாழ்வுடன் இணைந்திருக்க வேண்டும்!

14 ஆயிரம் பழைய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு மக்கள் மீதான சுமைகள் குறைக்கப்பட்டுள்ளன. தொழில் செய்வதற்கான நடைமுறைகள் எளிமைப் படுத்தப்பட்டுள்ளன. தொழில் துறை வளர்ச்சிக்காக எளிமையான முறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

நமது நாடு முன்னேற வேண்டும் என்பதற்காக ஒரு ஹை ஜம்ப் செய்ய வேண்டும். நாம் நமது சிந்தனையை மாற்றிக் கொள்ள வேண்டும். சாதாரண மக்களின் கனவுகள் நிறைவேற வேண்டும். 100 லட்சம் கோடி ரூபாய் நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள், வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த ஒதுக்கப்படும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை முன்னேற்றுவோம்!

5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு கடினமானதாகத் தோன்றுகிறது. ஆனால் கடினமான இலக்குகள் இல்லாமல் பயணிப்பது எவ்வாறு?! 70 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு 2 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது. 5 ஆண்டுகளில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நாம் உயர்த்தி 3 டிரில்லியன் டாலர் ஆக்கியுள்ளோம்! அடுத்த 5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் இலக்கை அடைந்தே தீருவோம்!

modi independence1நமது நாடு சுற்றுலாவுக்கான சிறந்த நாடாக இருக்கிறது. ஏதேதோ காரணங்களால் சுற்றுலாத் துறை வளர்ச்சி பெறவில்லை. சுற்றுலா மூலம் பல்லாயிரம் பேருக்கு அன்றாட வாழ்க்கைக்கு வழி கிடைக்கும்.

சர்வதேச சந்தைகளை இந்தியாவின் பொருட்கள் கைப்பற்ற வேண்டும். ஏற்றுமதிகளை அதிகரிக்க வேண்டும். உலகில் எந்த ஒரு நாட்டிலும் இந்தியாவில் இருந்து ஏதாவது ஒரு பொருள் விற்பனையாக வேண்டும்.

நமது நாட்டில் தவறான கருத்துருவாக்கங்கள் உருவாக்கப் பட்டன. அவற்றில் இ\ருந்து நாம் வெளியேற வேண்டும். நாட்டின் செல்வத்தை உருவாக்குபவர்களும் சம அளவில் மதிக்கப்பட வேண்டும்.

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா உறுதியுடன் போராடி வருகிறது. பயங்கரவாதத்திற்கு அடைக்கலம் கொடுப்பவர்கள், பயங்கரவாதத்திற்கு நிதி கொடுப்பவர்கள், அவர்களைத் தூண்டி விடுபவர்களை சர்வதேச அளவில் அம்பலப்படுத்தி வருகிறோம். நமது அண்டை நாடுகளும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இலங்கை, ஆப்கான், வங்காளதேசம் போன்ற நாடுகளும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா ஒரு தொடர் யுத்தத்தை நடத்தி வருகிறது!

தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. யுத்தத்தின் முறைகளும் மாறி வருகின்றன. முப்படைகளை ஒருங்கிணைத்து சீஃப் ஆஃப் டிபன்ஸ் ஸ்டாப் என ஒரு குடையின் கீழ் கொண்டு வருவோம். முப்படைகளை சீரமைக்கவும் பலப்படுத்தவும் புதிய தலைமை உருவாக்குவோம்.

பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்காக நாம் உறுதி கொண்டுள்ளோம்.! பிளாஸ்டிக்கை மறு சுழற்சி செய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம்.! நெடுஞ்சாலைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தப் படக் கூடியது! கடைகளில் பிளாஸ்டிக் பைகள் கிடையாது என்ற அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட வேண்டும். துணிப்பை கொண்டு வாருங்கள். அல்லது அதையும் நாங்களே விற்கிறோம் என்று கூறுங்கள்.

தொழில்நுட்ப வளர்ச்சியால் செல்போன், வாட்ஸ் ஆப் ,பேஸ்புக் போன்றவற்றை விரும்புகிறோம். இதனை ஏன் பொருளாதார மேன்மைக்கும் பயன்படுத்தக்கூடாது! டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை ஊக்கப்படுத்துங்கள்! பிளாஸ்டிக்கைப் போல் ரொக்கப் பரிமாற்றங்களுக்கு மறுப்பு தெரிவித்து டிஜிட்டல் பரிமாற்றங்களை வளரச் செய்யுங்கள்.

2022ம் ஆண்டு சுதந்திர தினத்தின் 75வது ஆண்டுகள் கொண்டாட்டத்திற்கு முன் ஒரு செயலை நிறைவேற்றுங்கள். இந்தியாவின் 15 சுற்றுலாத் தலங்களுக்கு செல்லுங்கள், வசதிகள் குறைவாக இருந்தாலும் வடகிழக்கு மாநிலங்களுக்குச் செல்லுங்கள். இந்தியாவைப் பற்றி முதலில் நாம் அறிந்துகொள்ள வேண்டும். வெளிநாட்டவரை இந்தியா குறிந்து அறிந்து கொள்ளச் செய்யுங்கள்!

ஒரு நோயைப் போல் நாடு முழுவதும் பரவி இருக்கும் ஊழலை ஒழிப்போம். தற்போது உலகம் இந்தியாவின் ஆற்றலை தெரிந்து கொண்டுள்ளது. 75 சுதந்திர தினம் கொண்டாடும் போது நாட்டில் ஊழல் இருக்கக் கூடாது ,… என்று தனது உரையில் குறிப்பிட்டார் பிரதமர் மோடி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe