September 28, 2021, 2:08 pm
More

  ARTICLE - SECTIONS

  கருணா., போல் கதை பேசும் திருமா.,! லண்டனில் விடுதலைப் புலிகள் பற்றி விபரீதமாய்ச் சொல்லக் காரணம் என்ன?!

  இத்தகைய ட்ராக் ரெக்கார்டுகளை முதுகில் சுமந்து கொண்டிருக்கும் திருமாவளவன், லண்டன் சென்று ஈழத் தமிழர்களிடம் விடுதலைப்புலிகள் சொல்லித்தான் காங்கிரஸுடன் நான் கூட்டணி வைத்தேன் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

  thirumavalavan london - 1

  பணம்தானே வேணும்… இந்தா பொறுக்கிக்கோ! என்று பணத்தை விட்டெறிந்து திருமாவளவனை விரட்டி அடித்த ஈழத் தமிழர்கள் என்று ஒரு தகவல் நேற்று சமூகத் தளங்களிலும் இணையத்திலும் வைரலானது.

  அதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த திருமாவளவன் லண்டன் சுற்றுலா சென்றிருக்கிறார். தமிழ் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக லண்டன் சென்றிருந்த திருமாவளவனுக்கு விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த ஜோசப் மெக்கேலா என்பவர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

  அப்போது கூட்டத்தில் சுமார் 100 தமிழர்கள் இலங்கை தமிழர்கள் உட்பட அனைவரும் பங்கேற்றனர். கூட்டத்தில் பேச தொடங்கிய திருமாவளவன் இந்துயாவில் மதவாத சக்திகள் அதிகரித்து விட்டார்கள். தொடர்ந்து பல்வேறு இன்னல்களை அவர்களால் அனுபவித்து வருகிறோம். இதற்கு முடிவு கட்டி தமிழர்களின் கலாச்சாரத்தை, பண்பாட்டை காக்க விடுதலை சிறுத்தை கட்சிக்கு நிதி உதவி அளியுங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

  அப்போது கூட்டத்திற்கு வந்திருந்த இலங்கையை சேர்ந்த ஆறுமுகம் என்ற ஈழதமிழர், உன்னை போன்ற ஆட்களால்தான் தமிழ் இனமே அழிந்தது. எங்கள் மக்கள் அழிவிற்கு காரணமான தி.மு.க, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்த துரோகி நீ, நிச்சயம் உன்னை போன்ற ஆட்கள் இருப்பதால்தான் இலங்கையில் நாங்கள் அழிந்தோம். இனி, இந்தியாவில் உள்ள தமிழர்களையாவது விட்டுவை. பணம்தானே உனக்கு வேணும்? பொறுக்கிக்கொள் என்று பணத்தை விட்டெறிந்தார்.

  மேலும் தமிழர்களை இனி ஏமாற்றி உங்களால் மதமாற்றம் செய்ய முடியாது. ஒழுங்காக ஓடிவிடு என்று திட்டி தீர்த்துவிட்டார். இந்த வீடியோ பிரத்தியேகமாக கிடைத்தது. தற்போது தமிழர்கள் அனைவரும் தீவிரமாக மதமாற்றத்தை எதிர்க்க துணிந்துவிட்டார்கள்… என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

  உண்மையில் அப்படி அங்கு என்ன தான் நடந்தது.? இந்தக் காணொளி அந்த விவகாரத்தை சற்றே கோடிட்டுக் காட்டும்..

  அமைப்பாய்த் திரள்வோம் நூல் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்க #லண்டன் சென்றுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்பி.,யுமான தொல்.திருமாவளவன். London???????? | #Thiru#London???????? | #ThirumavalavanMP???????? | Thol.Thirumavalavan

  இந்த இகழ்ச்சியின் போதுதான் மேற்கண்ட விதத்தில் பணத்தை தூக்கி வீசி எறிந்துவிட்டு ஒரு தமிழர் வீரத்துடன் சென்றார் என்று குறிப்பிடுகிறார்கள்.

  ஆனால், அந்த நிகழ்வுக்குப் பின்னர் திருமாவளவன் பேசியவை மிகவும் அபாயகரமானவை என்பதுதான் இப்போது பரவலாக விமர்சிக்கப் படும் செய்தீ.

  thirumavalavan2 - 2

  லண்டனில் உண்மையிலே திருமாவளவன் என்ன பேசினார்..? அங்கே நடந்தது என்ன?!

  இறுதி யுத்த நேரத்தில் விடுதலைப்புலிகள், திருமாவளவனிடம் ஒரு தகவலை கூறினராம்! அவர்கள் கூறியதாக திருமாவளவன் சொன்ன தகவல்கள்தான் மிகவும் அபாயகரமானவையாக இப்போது பேசப் படுகின்றன.

  “எதற்காக காங்கிரசை எதிர்த்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் பேசப் பேச எங்கள் மீதுதான் எக்ஸ்ட்ரா குண்டுகளை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்று விடுதலைப் புலிகளின் முக்கியப் பிரமுகர்கள் இறுதி யுத்த நேரத்தில் தன்னிடம் தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் லண்டன் நிகழ்ச்சியில் பரபரப்பாக பேசியுள்ளார்!

  இங்கிலாந்து நாட்டில் பிம்பம் கலை இலக்கிய திரைப்பட மற்றும் கலாச்சார அமைப்பின் ஏற்பாட்டில் லண்டனில் நடைபெற்ற ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் பேசிய போது திருமாவளவன் இதனைக் கூறியுள்ளார்.

  விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா நடேசன், நிதர்சனம், நிறுவன பொறுப்பாளர் சேரலாதன் ஆகியோர் இவ்வாறு தன்னிடம் தெரிவித்ததாக திருமாவளவன் கூறியுள்ளார்!

  வன்னி யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் காங்கிரஸ் அரசைக் கண்டித்து தான் போராட்டம் நடத்தியதாகவும், அதை அவர்கள் கண்டித்ததாகவும், இந்திய அரசை எதிர்த்து தம்மால் தீர்வைப் பெற முடியாது என்றும், காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும் என்றால் அவர்களுடன் இணைந்து, பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றும் புலிகள் குறிப்பிட்டார்கள் என திருமாவளவன் பேசியுள்ளார்.

  2009 இந்திய நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் விடுதலைப்புலிகளின் சேரலாதன் என்னை தொலைபேசியில் அழைத்து. ”எல்லோரும் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? எதற்காக காங்கிரசை எதிர்த்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் பேசப் பேச எங்கள் மேல் எக்ஸ்ட்ராவாக குண்டுகளை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்..”

  “நீங்கள் ஓட்டு வாங்க நாங்கள் பலியாக வேண்டுமா? எனக் கேட்டு திட்டிவிட்டு தொலைபேசியை புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன் இடம் கொடுத்தார். நடேசன், பிரபாகரன் என்னிடம் சொல்லச் சொன்னதாக ஒரு செய்தியை தெரிவித்தார்.

  “நீங்கள் காங்கிரசை எதிர்க்க வேண்டாம்; உடனடியாகச் சென்று காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்தியுங்கள்…” என்றார்.

  thirumavalavan srilanka rajapakshe - 3

  தலைவர் பிரபாகரனின் அந்தச் செய்தியை கேட்டதும்தான் நான் உடனடியாக அறிவாலயம் சென்று காங்கிரஸ் திமுக கூட்டணியில் இணைந்து கொண்டேன்” – என்று திருமாவளவன் அந்தக் கூட்டத்தில் பேசியுள்ளார்!

  அவரது இந்தப் பேச்சு அங்கே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! உண்மையில் விடுதலைப் புலிகள் இயக்கம் அவ்வாறு இவருக்குக் கட்டளை இட்டதா என்ற விவாதத்தை திருமாவளவன் ஏற்படுத்தியிருக்கிறார்.

  திருமாவளவன் குறிப்பிடும் விடுதலைப் புலிகளின் நான்கு பேருமே இப்போது இல்லை! பிரபாகரன், நடேசன், நிதர்சனம், சேரலாதன் என யாருமே இப்போது திருமாவளவன் சொன்னது உண்மைதானா என்று சாட்சி சொல்வதற்கு இல்லை.

  இதுதான் திமுக., தலைவர் கருணாநிதியின் பாணி அரசியல்! இறந்தவர்கள் இப்படிச் சொன்னார்கள் என்று தனக்கு சாதகமாக கருத்துகளைச் சொல்லி அதனைப் பரப்பி விடுவது. .. அல்லது அண்ணா கனவில் வந்தார், பெரியார் கனவில் வந்து கைத்தடியைத் தட்டினார் என்று சொல்லிக் கொள்வது…! அதையும் நம்பிக்கொண்டு பெருமிதத்தின் உச்சியில் திளைக்கும் தமிழர் சமூகம் !

  இப்போது இந்த அரசியலை திருமாவளவனும் கையில் எடுத்திருப்பதாகவே தோன்றுகிறது! ஒருபுறம் வைகோ..! 2009 இறுதி யுத்தத்துக்கு முன்னர், யுத்தத்தின் தீவிரத்தை குறைத்தாக வேண்டும் என்று விடுதலைப் புலிகள் பெரும் பாடு பட்டார்கள். அதற்காக, வைகோ.,வை அணுகி, ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்டார்களாம்!

  அந்த நேரம் 2009 தேர்தல். மத்தியில் வாஜ்பாய் மீது பெரும் நம்பிக்கை கொண்டிருந்தார்கள் விடுதலைப் புலிகள். ஜார்ஜ் பெர்னாண்டஸ், வைகோ ஆகியோர் மூலம், இலங்கைக்கு ராணுவத் தளவாடங்கள் அதிக அளவில் குவிவதைத் தடுக்க முயன்றார்கள். வாஜ்பாய் அதில் உதவியதால், பிரபாகரனுக்கு அடல் பிஹாரி வாஜ்பாய் மீது பெருமதிப்பு இருந்தது.

  பின்னாளில் வாஜ்பாய் அரசியலில் இருந்து முற்றிலும் ஒதுங்க, அத்வானி தலைமையில் 2009ல் தேர்தலை சந்தித்தது தே.ஜ.கூட்டணி. அந்தத் தேர்தலில் தே.ஜ.கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று விடுதலைப் புலிகள் விரும்பினர். அதற்கான தூதுவராகவும் பாலமாகவும் தாம் திகழ்ந்ததாக வைகோ ஒரு முறை கூறினார். தேர்தல் முடிவுக்காக புலிகள் காத்திருந்ததாகவும், ஆனால் அந்தத் தேர்தலில் திமுக., தாங்கள் விரும்பியதற்கு மாறாக, தே.ஜ.கூட்டணியில் சேராமல் காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்து திமுக., தேர்தலை சந்தித்ததாகவும் புலிகள் கூறியுள்ளனர்.

  dailythanthi front page on prabakaran and mk - 4

  அதற்கு ஏற்ப, தேர்தல் முடிவு வெளியான அதே நாளில், விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப் பட்டார். இயக்கமும் முள்ளிவாய்க்காலில் பேரழிவைச் சந்தித்தது. இந்தச் சதியின் பின்னே திமுக., காங்கிரஸ் கூட்டணி இருந்தது என்பது அன்றைய வைகோவின் பகிரங்கக் குற்றச்சாட்டு.

  காரணம், விடுதலைப் புலிகள் அந்தக் கால கட்டத்தில் தமிழகத்தில் அதிகம் தொடர்பில் இருந்தது வைகோ., பழ.நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன், வைகோ.,வுடன் இருந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மத்தியில் ஆளும் கூட்டணியில் இருந்த மற்றும் தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்த திமுக.,வின் தலைவர் கருணாநிதியின் மகள் என்ற நிலையில் கனிமொழி என வெகு சிலருடன் தான்!

  அந்தக் கால கட்டத்தில், சாதி அரசியல் வட்டத்தைத் தாண்டியிராத திருமாவளவன், ஆமைக்கறி ஸ்பெஷல் திரைக்கதையாளர் சீமான், சர்ச்சுகளின் செல்ல வளர்ப்பு டேனியல் என்ற திருமுருகன் காந்தி எவரும் விடுதலைப் புலிகளுடன் நெருங்கியவர்கள் என்றோ, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கணக்கில் எடுத்துக் கொண்டு பேசும் அளவுக்கு கவனிக்கப் பட்டவர்கள் என்றோ இருந்ததில்லை!

  இப்போது திருமாவளவன் பேசியது, உண்மையா? பொய்யா? என்ற விவாதம் களை கட்டியிருக்கிறது. விடுதலை புலிகளின் கோரிக்கைப்படிதான் திருமாவளவன் காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்தார் என்றால், அதனால் போரில் ஏற்பட்ட தாக்கம் என்ன? திமுக – காங்கிரஸ் – திருமாவளவன் இணைந்த கூட்டணியின் வெற்றி முடிவில் விடுதலைப்புலிகள் முழுமையாக அழிக்கப் பட்டனர்.

  அன்றைய செய்தித்தாளின் முதல் பக்கத்தை தமிழன் என்ற உணர்வு உள்ள எவரும் மறந்து விட முடியாது. மேலே விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணச் செய்தி, தொடர்ந்து காங்கிரஸின் வெற்றி, கீழே கருணாநிதி தன் குடும்ப உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி கேட்டு சென்ற நிகழ்வு என்பதற்கு சாட்சியாக இன்றும் 2009ம் வருட செய்தித் தாள்கள் காணக் கிடைக்கின்றன. அந்த வரலாற்றை அப்படி ஒன்றும் தன்மானத் தமிழன் மறந்துவிட முடியாது. பத்து ஆண்டுகளுக்குள் பழக்கப்பட்ட வரலாற்றை மறந்து போகும் அளவுக்கு இன்று தமிழகத்தில் வாக்குச் சீட்டை செலுத்தும் டாஸ்மாக் தமிழன் நிறைந்திருக்கிறான் என்பதுதான் தமிழகத்தைப் பீடித்துள்ள சாபக்கேடு!

  விடுதலைப்புலிகள் சொல்லித்தான் திருமாவளவன், திமுக., காங்கிரஸுடன் கூட்டணி வைதாரா? இப்படிக் கேட்டால், இல்லவே இல்லை என்கின்றனர் தமிழக வரலாற்று நிகழ்வுகளைத் தங்களுடன் சுமந்தவர்கள்.

  2009 தேர்தலுக்கு முன்பே சிங்கப்பூர் சென்றிருந்த திருமாவளவன் அங்கிருந்தவர்களிடம், தாம் அடுத்து இணையப் போவது நிச்சயமாக திமுக காங்கிரஸ் கூட்டணியில் தான் என்று கூறியுள்ளார்.

  எனவே திமுக.,-காங்கிரஸுடன் கூட்டணி என்பது அவர் முன்னரேயே எடுத்த முடிவு! ஆனால் இப்போது அந்தப் பழியை விடுதலைப் புலிகளின் மரித்த தலைவர்களின் மீது சுமத்தி பித்தலாட்ட அரசியலைச் செய்யத் துணிந்திருக்கிறார் திருமாவளவன்!

  m karunanidhi beach fasting - 5

  உண்மையில், காலை சிற்றுண்டிக்கும், மதிய நேரச் சாப்பாட்டுக்குமான மூன்று மணி நேர இடைவெளியில் ஓர் உண்ணாவிரத நாடகத்தை நடத்திய திமுக., தலைவர் கருணாநிதியின் பச்சைத் துரோகத்தை, உடம்பில் தமிழ் ரத்தம் ஓடும் எந்தத் தமிழனும் மன்னிக்கவும் மாட்டான்; மறக்கவும் மாட்டான்! ப.சிதம்பரம் சொன்னார், மன்மோகன் சொன்னார், போர் நிறுத்தம் அறிவிக்கப் பட்டுவிட்டது என்றெல்லாம் அறிக்கைகளை விட்டுக் கொண்டு மாய்மாலம் செய்த திமுக., தலைவர் கருணாநிதியின் துரோக அரசியலை உணரும் எந்தத் தமிழனும் திமுக,.வுக்கு வக்காலத்து வாங்க மாட்டான். எந்த விடுதலைப் புலிகள் பெருமளவு மலை போல் தமிழர் தலைவர் என்று நம்பினார்களோ, அந்தத் தமிழர் தலைவர்தான் மத்தியில் தன் வாரிசுகளுக்காக சோனியாவுக்குப் பூச்செண்டு கொடுத்து, இலங்கைத் தமிழர்களை முள்காட்டில் சிக்கித் தவிக்க வைத்தவர் என்பதும் பத்தாண்டுகளுக்கு முந்தைய வரலாற்று நிகழ்வு!

  மேடைகளில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிவிட்டு, கனிமொழி, டி.ஆர்.பாலு என திமுக.,வினர் அடங்கிய கூட்டத்தினருடன் திருமாவளவன் சென்று, ராஜபட்சவிடம் பரிசுப் பெட்டியை பல்லிளித்துக் கொண்டு வாங்கிய தருணத்தையும் எவரும் மறந்துவிட முடியாது!

  இத்தகைய ட்ராக் ரெக்கார்டுகளை முதுகில் சுமந்து கொண்டிருக்கும் திருமாவளவன், லண்டன் சென்று ஈழத் தமிழர்களிடம் விடுதலைப்புலிகள் சொல்லித்தான் காங்கிரஸுடன் நான் கூட்டணி வைத்தேன் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

  இந்த நிகழ்வில் அந்த ஒரே ஒரு மறத் தமிழர் வீசி எறிந்ததாகச் சொல்லப்படும் பணம்தான் காரணமா?

  இந்த நிகழ்ச்சி தொடங்கும் முன்பே, பணப் பிரச்னை, நிதிக் கேட்பு, மதமாற்றம் என்றெல்லாம் குரல் எழுப்பி அந்தக் கூட்ட அரங்கில் இருந்து வெளியேற்றப் பட்ட உண்மைத் தமிழர்கள் மட்டும், திருமாவளவன் இவ்வாறெல்லாம் பேசிய போது அங்கே இருந்திருந்தார்கள் என்றால்… நிலைமை வேறு மாதிரி ஆகி, தமிழகம் இன்று பெரும் விபரீதத்தைச் சந்தித்திருக்கும் என்று சமூகத் தளங்களில் பகிரப் படும் கருத்துகள் சிந்திக்கத் தக்கவை!

  • செங்கோட்டை ஸ்ரீராம்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,482FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-