spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

HomeReporters Diaryஐநா., மனித உரிமை ஆணையக் கூட்டத் தொடரும், அழைப்புக் கடிதமும்!

ஐநா., மனித உரிமை ஆணையக் கூட்டத் தொடரும், அழைப்புக் கடிதமும்!

- Advertisement -

உலகின் எந்தப் பகுதியில் மனித உரிமை பாதிக்கப்பட்டாலும்,ஏன் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டாலும் கூடத் தீர்வை எட்ட ஐ.நா.மனித உரிமை ஆணையத்திடம் முறையிடலாம்.

கிட்டத் தட்ட எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழர் பிரச்சினை அங்கு நிலுவையில் உள்ளது. ஈழத் தமிழர்களுக்கான நீதி கிடைக்க வாய்ப்புக் கிடைக்காமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.

இலங்கையில் ராஜபக்சே ஆட்சி வரை .அதாவது 2009 இறுதிப்போர் வரை நடந்த இனப்படுகொலைகளையும், மனித உரிமை மீறல்களையும் விசாரிக்கச் சர்வதேச சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டும், இலங்கை அரசால் இந்த ஆணையத்தில் இந்தப் பிரச்சினைக்கு நியாயமாக தீர்வு எட்டாமல் போய்க் கொண்டே இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச்- செப்டம்பரில் நடக்கும் ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் 42 ஆவது கூட்டத் தொடர் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதியன்று- ஜெனீவாவில் துவங்க இருக்கிறது.

இந்தக் கூட்டத் தொடரில், குறிப்பாக ஈழத்தமிழர் பிரச்சினை குறித்துப் பேச வேண்டும் என்ற நோக்கில், உலக அளவில் வாழும் ஈ.ழத்தமிழர்கள் பல்வேறு அரசியல் தலைவர்களை அழைப்பது வாடிக்கை. ஈழத்தமிழ் சகோதரர்களே மனித உரிமை ஆணையத்தை அணுகி அந்த அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வதை முறைப்படுத்தி அதற்கான அனுமதிக் கடிதத்தை ஐ.நா.மனித உரிமை ஆணையத்திலிருந்து பெற்று அனுப்பவர்கள். அதுவே முறையான அழைப்பிதழ் ஆகும். அந்தக் கடிதத்தின் படி ஐ.நா. ஆணைத்தில் நமக்கான உரிமைப் பிரச்சினைகளைப் பேச அதிகபட்சம் பத்து நிமிடங்கள் கிடைக்கும்.

ஐ.நா,மனித உரிமை ஆணையத்தின் இலச்சினை பொறிக்கப்பட்ட கடிதத்தில் அழைக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்கும். ‘ தாங்கள் இந்தக் கூட்டத் தொடரில் பங்கேற்க தங்களுடைய பெயரைப் பதிவு செய்துள்ளோம் ’- என்று அழைப்பிதழில் கூறுவது ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை மரபு.

ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் அம்மாதிரியான கடிதத்தை தி.மு.கழகத் தலைவர் அவர்களுக்கும்,எனக்கும் அனுப்பட்டுள்ளது. ஈழத்தமிழ்ச் சகோதரர்கள் முன்வந்து அனுப்பி வைத்த கடிதம் தான் இது.

கழகத் தலைவரோ,கழகத் தலைமையோ இந்தக் கடிதம் பெற எந்தக் கோரிக்கையையும் வைக்க வில்லை. போஸ்கோ,பாலா, ரவி போன்ற நண்பர்கள் மனித உரிமை ஆணையத்தில் கழகத் தலைவர் எம்.கே.எஸ் அவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தார்கள். அதன்படி 2017 ல் கழகத் தலைவர் அவர்களுக்கு இதே மாதிரியான அழைப்பிதழை அனுப்பியதும் உண்டு.

வைகோ போன்றவர்கள் இதே மாதிரியான அழைப்பிதழைப் பெற்றுத் தான் ஐ.நா.மனித உரிமைக் கூட்டத்தில் பங்கேற்றார்கள். கூட்டத்தில் பங்கேற்பவர்களுடைய பெயர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்று தான் ஐ.நா.மனித உரிமை ஆணையம் எல்லோருக்கும் கடிதம் வழங்கியுள்ளது.

அந்த வகையில் கழகத் தலைவர் அவர்களை மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்புவிடுத்து ஈழச் சகோதர்களே, அவரகளின் விருப்பத்தின் படி ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் பெற்று அனுப்பிய கடிதம் தான் இது. இதை மற்றவர்களுடைய புரிதலுக்காகப் பதிவு செய்கிறேன்.

ஈழப் பிரச்சனையில் இன்றைக்குள்ள சூழலில் என்ன செய்ய வேண்டும் இந்த பிரச்சனையில் என்ன செய்ய வேண்டும் என்பது தான் கவனிக்க வேண்டிய விடயமாகும்.

அவை, இன அழிப்பை செய்த ராஜபக்சேவை சர்வதேச மன்றத்தில் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் லைபீரியா அதிபர் சார்லஸ் டெயிலரை இனஅழிப்பு குற்றத்திற்க்காக தண்டிக்கப்பட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், செர்பிய குடியரசுத் தலைவராக இருந்த மிலோசேவிக், அப்பாவி மக்களைக் கொன்று குவித்தார். இதற்காக 2006ஆம் ஆண்டு அவர் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு நான்கு ஆண்டு காலமாக விசாரணை நடைபெற்று வந்தவேளையில், அவர் சிறையிலேயே இறந்தார். சூடான் அதிபரான ஓமர் அல் பஷீர் கைது செய்யப்பட்டு, அவர் மீது சர்வதேச நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது. இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும்.

முதலில் ராஜபக்சே மீது சர்வதேச சுதந்திரமான புலனாய்வு செய்து அவரை பன்னாட்டு நீதிமன்ற பொறிமுறையில் சுதந்திரமான, நம்பகமான விசாரனை நடத்தி தண்டிக்கப்பட வேண்டும்.

அந்த விசாரனையில் ஈழத்தில் இன அழிப்பு நடந்தது என்று நிரூபிக்கப்படும். அந்த சூழலில் தான் தனிவாழ்வு என்ற தந்தை செல்வாவின் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு மேலும் சர்வதேச அளவில் வலு சேர்க்கும்.

சர்வதேச கண்காணிப்பில் ஈழத்தமிழர் விரும்பும் தீர்வான தனி வாழ்வா, சக வாழ்வா, தனி நாடா, சுயநிர்ணய உரிமை, ஒரு நாடு இருதேசங்கள் என்ற பிரச்சனைகள் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

இது நடைமுறைக்கு வரவேண்டுமெனில் சர்வதேச அளவில் ஆதரவு தேவை. மேற்குறிப்பிட்ட ராஜபக்சே மீது விசாரனை நடத்தி இனஅழிப்பு ஈழத்தில் நடந்தது என்று நிரூபிக்கப்பட்டால் இந்த பொது வாக்கெடுப்பு நடத்துவது மிகவும் எளிதாகிவிடும். இது தான் அடிப்படையாக செய்ய வேண்டிய பணிகள்.

  1. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களை பீதியில் ஆழ்த்தும் சிங்கள ராணுவத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
  2. இறுதிப் போர் 2009 ல் நடந்தபோது கைது செய்யப்பட்டவர்கள், காணாமல் போனவர்களை உடனடியாக விடுவித்து அவருடைய உறவினர்களிடம் அவர்களை சேர்க்க வேண்டும்.
  3. தமிழர்களுடைய விவசாய நிலங்களையும், வீடுகளையும் சிங்களர்கள் கபளீகரம் செய்துவிட்டனர். அதை முறையாக தமிழர்களிடம் திரும்பி ஒப்படைக்க வேண்டும்.
  4. ஒப்புக்காக ஏமாற்றும் அதிகாரமற்ற மாகாண கவுன்சில்களுக்கு நில நிர்வாகம், நில வருவாய், காவல் துறை, மீன்பிடி நிர்வாகம் என முக்கிய் அதிகாரங்களை வழங்காமல் இருப்பது தமிழர்களை வஞ்சிக்கின்ற நடவடிக்கையாகும். மாகாண கவுன்சில் என்பது ஏற்புடைய வாதமில்லை என்றாலும் நிர்வாகம் என்று ஒப்புக்கு ஏற்றுக்கொண்ட வகையில் இதன் உரிமைகளை பெற வேண்டிய கட்டாயத்தில் ஈழத்தமிழர்கள் உள்ளனர். இப்படியான அடிப்படையான விடயங்களை கவனம் செலுத்துவது முக்கியமான கடமை. இது அவசரமும் அவசியமும் ஆகும். சொல்ல வேண்டிய அவசியத்தினால் இதை வலியுறுத்துகிறேன். ஆக்கப்பூர்வமான எண்ணங்களம் நடவடிக்கைகளும் தான் இன்றைக்கு ஈழப்பிரச்சனைகளுக்கான தீர்வை வழங்கும்.
  • கே.எஸ்.இராதாகிருஷ்ணன் (வழக்கறிஞர், செய்தி தொடர்பாளர், திமுக.,)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe