Home இந்தியா தொடரும் திஹார் வாசம்! நாற்காலி இல்லை என்று முறையிட்ட சிதம்பரம்!

தொடரும் திஹார் வாசம்! நாற்காலி இல்லை என்று முறையிட்ட சிதம்பரம்!

சிதம்பரத்தின் திஹார் வாசம் தொடர்கிறது: மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிப்பு!

தாம் கைது செய்யப் படுவதில் இருந்து தப்பிப்பதற்காக முன்ஜாமீன் மனு தாக்கல் செய்து எத்தனை முறை முன் ஜாமீன் பெற்றாரோ அத்தனை முறை தற்போது சிதம்பரம் சிறைவாச நீட்டிப்பு பெற்றுவிடுவாரோ என்று சமூக ஊடகங்களில் கிசுகிசுக்கிறார்கள்.

ஐ.என்.எக்ஸ். மீடியா நிதி முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா நிதி முறைகேடு வழக்கில் கடந்த மாதம் ஆக.21ஆம் தேதி இரவு ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப் பட்டார். அவரைக் காவலில் எடுத்து விசாரித்த சிபிஐ அதிகாரிகள் விசாரணை முடிந்து, செப்டம்பர் 5ஆம் தேதி தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

தில்லி சிறப்பு நீதிமன்றம், ப.சிதம்பரத்தை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. ப.சிதபரத்தின் காவல் வியாழக்கிழமை இன்றுடன் நிறைவடைந்த நிலையில், மீண்டும் நீதிமன்றத்தில் அவர் ஆஜர் படுத்தப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற போது, தனது இயலாமையை நீதிபதியிடம் முறையிட்டார் ப.சிதம்பரம். அப்போது, தனது அறையில் இருக்கை மற்றும் தலையணை இல்லாத காரணத்தினால், தனக்கு முதுகு வலி அதிகமாகி விட்டது என்றார். மேலும், தனது அறைக்கு வெளியே சில இருக்கைகள் இருந்ததன என்பதால், தாம் அவற்றில் சென்று அமர்ந்ததாகவும், அதனாலேயே அவற்றை அதிகாரிகள் அப்புறப் படுத்தி விட்டதாகவும் முறையிட்டார் ப.சிதம்பரம்! மேலும், தற்போது அங்கே சிறைக் காவலர்களுக்குக் கூட இருக்கை இல்லை என்று புகார் தெரிவித்தார் ப.சிதம்பரம்.

ஆனால், ப.சிதம்பரம் புகார் கூறிய போது குறுக்கிட்டுப் பேசிய மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இது ஒரு சிறிய பிரச்னை! தொடக்கத்தில் இருந்தே சிதம்பரத்தின் அறையில் இருக்கை இல்லை என்றார்.

அந்நிலையில், ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்குமாறு நீதிபதி அஜய் குமார் குஹாரிடம் சிபிஐ கோரியது.

ஆனால் சிபிஐ.,யின் கோரிக்கைக்கு சிதம்பரத்தின் வழக்கறிஞர் கபில் சிபல் எதிர்ப்பு தெரிவித்தார். சிதம்பரத்துக்கு பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் இருப்பதை சுட்டிக் காட்டி சிபிஐ.,யின் கோரிக்கையை நிராகரிக்கக் கோரினார். ஆனால் இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை அடுத்த மாதம் 3ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதனால் சிதம்பரம் மீண்டும் திகார் சிறைக்கே கொண்டு செல்லப்பட்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version