December 3, 2021, 12:48 pm
More

  பிகிலு எப்படியாவது ஓடியாகணும்! அரசியல் விஜய் ஏற்படுத்திய திகிலு!

  நேற்று பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசிய பேச்சு இப்போது பரவலாக விமர்சிக்கப் பட்டு வருகிறது.

  vijay bigil - 1

  நேற்று பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசிய பேச்சு இப்போது பரவலாக விமர்சிக்கப் பட்டு வருகிறது.

  தமிழகத்தின் சாபக்கேடு… ஒரு டப்பா நடிகர்கூட நான்கு வெற்றிப் படங்களைக் கொடுத்துவிட்டாலே போதும்.. உடனே ரசிகர்கள் மூலம் கேட்கப் படும் கேள்வி… அடுத்த படம் எப்போ என்பதாக அல்ல… எப்போது அரசியலில் குதிக்கப் போகிறீர்கள் என்பதாகத்தான் இருக்கிறது.

  கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் அவ்வாறு அரசியலுக்கு என்றே திட்டமிடப்பட்டு, கட்டம் கட்டமாக காய் நகர்த்தி நடித்து வரும் எஸ்.ஏ. சந்திரசேகர், தாம் எழுதிய திரைக்கதையை தனது மகனின் நிஜவாழ்வில் பார்த்துவிட ஆசைகொண்டு… ஒரு பிம்பத்தைக் கட்டமைத்து வருகிறார்.

  சினிமா நடவடிக்கைகளைக் காட்டிலும், சமூகம் சார்ந்த அரசியல் நடவடிக்கைகளிலேயே விஜய் அதிகம் கவனம் செலுத்தி வந்திருக்கிறார். அதற்கான நிகழ்வுகளின் பட்டியல் ஏராளம்தான்! இத்தனை காலங்களில், அவ்வப்போது தனது அரசியல் நிலைப்பாட்டையும் சினிமா மற்றும், சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளின் மூலம் வெளிப்படுத்தியே வந்திருக்கிறார்.

  pekel vijiay - 2

  விஜயின் பின்னணியில் ஒரு திட்டமிடல் இருந்திருக்கிறது. பெரும்பாலும் மாநில அரசைத் தொட மாட்டார். ஜெயலலிதா இருந்தவரை! மத்திய அரசைத் தொடமாட்டார், சோனியா தலைமையிலான காங்கிரஸ் அரசு இருந்தவரை! முன்னதில் பயம். பின்னதில் பாசம்.

  தற்போது மத்திய மாநில அரசுகளை எதிர்த்து திரைக் கலைஞன் என்ற புகழைப் பின்னணியில் கொண்டு, அரசியல் நடவடிக்கைகளில் தாராளம் காட்டி வருகிறார்.

  விஜய் அவ்வப்போது திமுக., பக்கம் சாய்வதாக கருத்துகள் பகிரப் பட்டு வந்திருக்கின்றன. ஆனால், திமுக.,வின் வரலாறோ, விஜய்யின் புகழையும் ரசிகர்களையும் வேண்டுமானால் ஆதரவுக்காக உள்ளிழுத்துக் கொள்ளுமே தவிர, விஜய்யை ஒரு போதும் முதல்வர் நாற்காலிக்கு முன்னிறுத்தாது என்பது வாயில் விரல் வைத்து சூப்பிக் கொண்டிருக்கும் சிறு குழந்தைக்குக் கூட தெரிந்த ஒன்றுதான்!

  vijay - 3

  சிவாஜி, எம்.ஜி.ஆர்., எம்.ஆர்.ராதா என திரைப்பட கதாநாயகர்களின் மூலமே திமுக., மக்கள் மத்தியில் சென்று சேர்ந்தாலும், இவர்களில் எவரும் தலைமைப் பதவியிலோ, ஆட்சிப் பொறுப்புகளிலோ அமர்ந்திருக்கவில்லை. அவர்களின் புகழ் வெளிச்சம் திமுக.,வுக்கு வளர்ச்சிக்குத் தேவைப்பட்டது, ஆனால் ஒரு கட்டத்தில் தூக்கி எறியப் பட்டார்கள்.

  கருணாநிதி, தொடர்ந்து ஸ்டாலின், தொடர்ந்து மூன்றாம் கலைஞர் உதயநிதி, தொடர்ந்து நான்காம் கலைஞர் என்று பட்டியல் எப்போதோ திமுக., வின் தலை எழுத்தாய் எழுதப் பட்டுவிட்ட நிலையில், விஜய்யின் ரசிகர்களும் ஆதரவும்தான் திமுக.,வுக்குத் தேவையே தவிர, தலைமைப் பீடத்துக்கு தயாராகியுள்ளவர்… அதே சினிமாத் துறையில் ஒரு காலத்தில் கருணாநிதி களம் இறக்கி விட்டு வேடிக்கை பார்த்த மு.க.முத்து போல் இப்போது நடிப்புக் களத்தில் இறக்கிவிடப் பட்டுள்ள உதயநிதி !

  அதனால்தான் விஜய்யின் தனி டிராக் அவ்வப்போது காட்டப்பட்டும் வந்திருக்கிறது.

  பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட போது, ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நிலையில், விஜய் எதிர்த்து நின்றார். பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிராத விஜய் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேல் உள்ள தனது விமர்சனத்தை பத்திரிகையாளர்களைச் சந்தித்தே கூறினார்.

  ஜல்லிக்கட்டு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம், நீட் விவகாரம், இவற்றில் எல்லாம் களத்தில் இறங்கி அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்ட விஜய்யின் செயல்கள் மத்திய மாநில அரசுகளுக்கு எதிரானதாகவே பார்க்கப்பட்டது.

  ஜெயலலிதாவுக்குப் பின், தற்போதைய அதிமுக., அரசுக்கும் விஜய் தரப்புக்குமான மோதல் சர்கார் படத்தின் போது வெடித்தது. ஜெயலலிதாவின் இயற்பெயரை வில்லி கதாபாத்திரத்திற்கு வைத்தது, அரசின் விலையில்லா பொருள்களை தீயிட்டு கொளுத்துவது போன்ற காட்சிகள் ஆளும் கட்சியினரை சூடேற்றியது.

  அப்போது திரையரங்குகள் முன் பிரமாண்ட அளவில் வைக்கப் பட்ட பேனர்கள் கட் அவுட்களை அதிமுக.,வினர் பதம் பார்த்தனர். இதனால் விஜய் ரசிகர்களுக்கும் அதிமுகவினருக்குமான மோதலையே சர்க்கார் உருவாக்கியது. இதனால் இயல்பாக எதிர்ப்பு மனோபாவத்தை மக்களிடம் ஏற்படுத்தி, வசூலை வாரிக் கொண்டார் விஜய்.

  அதுமட்டுமின்றி, நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக.,வுக்கு எதிரான மனநிலையை மக்களிடம் ஏற்படுத்தி, திமுக.,வுக்கு சாதகமாக, “இது விஜய் ரசிகர் வீடு; அதிமுக.,வுக்கு ஓட்டு கேட்டு வராதீர்கள்” போன்ற போஸ்டர்களை அடித்து, சமூகத் தளத்தில் பகிர்ந்து கொண்டார்கள் விஜய் ரசிகர்கள். அந்தத் தேர்தலில் அதிமுக., கூட்டணி தோல்வி அடைந்த போது, அதை தங்களின் வெற்றி போல் கொண்டாடினார்கள்.

  தற்போது விஜய் பிகில் படத்தில் நடித்துள்ளார். தீபாவளியை ஒட்டி படம் வெளியாகிறது. இந்தப் படத்தையும் ஓட்டியாக வேண்டும். கடந்த காலங்களில் தன் படத்துக்குக் கிடைத்த எதிர்ப்பு அரசியல் விளம்பரம் போல், இந்தப் படத்துக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக அதிமுக.,வினரை சீண்டுவதற்கு நேரம் பார்த்திருந்தார். அதற்கு ஏற்ப, அதிமுக.,வைச் சேர்ந்த பிரமுகரின் இல்லத் திருமண பேனர் கட்டி, அதன் மூலம் ஓர் இளம்பெண் உயிரிழந்த வேதனைச் சம்பவம் வகையாக மாட்டிக் கொண்டது. அதையே தனது பிரசாரக் களத்துக்கான உத்தியாக எடுத்துக் கொண்டுள்ளார் விஜய்.

  விஜய்யின் பேச்சு மீண்டும் அதிமுகவை குறிவைத்துள்ளது. பிகில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், “யாரை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ அவரை அங்கே உட்கார வைத்தீர்கள் என்றால் எல்லாம் சரியாக இருக்கும்” என்றார்.

  “சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி ஓட்டுநர் மீதும், பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழிபோடுகிறார்கள். யார் மீது பழி போட வேண்டுமோ அதைச் செய்யாமல் லாரி ஓட்டுநர் மீது பழிபோடுகிறார்கள்” என்று வெளிப்படையாகவே அதிமுக அரசை அவர் விமர்சித்துள்ளார்.

  மேலும் சர்கார் பிரச்சினையையும் தொட்டுக் காட்டினார். “என் படத்தை உடையுங்கள்; பேனர்களை கிழியுங்கள்; ஆனால் என் ரசிகன் மீது கை வைக்காதீர்கள்” என்று அவர் பேச… ரசிகர்கள் பெரும் ஆரவாரம் செய்தனர்.

  அதே நேரம் சமூகத் தளங்களில் விஜய்யின் இந்தப் பேச்சுக்கு பெரும் விமர்சனங்களும் வலுத்து வருகின்றன. டிவிட்டர் பதிவுகளில் பதிவான கருத்துகளில் சில…

  • * #bigil, #BigilAudioLaunch நாளைய தீர்ப்பு படம் வந்தப்ப குமுதமும் இதான் சொன்னான்
  • “இவர் அப்பா இயக்குநராக உள்ளதால் இந்த மாதிரியான முகத்தை எல்லாம் திரையில் பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது” என்று அதே குமுதம் கட்டுரை எழுதியது.
  • குலத்தொழிலுக்கு வித்திடுகிறார். கூத்தாடி பிள்ளை கூத்தாடி.
  • நாம #கோல் போடுறத தடுக்க ஒரு கூட்டமே இருக்கும் – விஜய்ண்ணா
  • // எக்கோ இல்லாம இன்னொரு தடவ சொல்லுடா., வேற மாதிரி கேக்குது..// சூப்பர் விஜய்.. சுடலைக்கும், கமலகா சனுக்கும் தானே இந்த செருப்படி..
  • கலர் ஜெராக்ஸ் டிக்கெட்டை கொண்டு அத்து மீறி நுழைய ஆயிரம் கிமீ கடந்து வந்த அந்த ஈரோட்டு ரசிகர் க்கு அடி உதை..#Bigil
  • சுபஸ்ரீ மரணத்திற்கு குரல் கொடுக்கனும்- விஜய்
   31.10.17 திருப்போரூரில் #மெர்சல் படத்துக்கு உன் ரசிகர்கள் கட்டியிருந்த 30 அடி பேனர் சரிஞ்சு ஒரு குடும்பமே காயப்பட்டு மயிரிழையில் உயிர்தப்பிய போது வாயில் வாழைப்பழம் வெச்சிருந்தியா?

  பாடல் வெளியீட்டு விழாவில் வந்து அரசியல் பேசணும் பிறகு படம் வெளியாவதில் சிக்கல் வந்தால் முதல்வர் முன்னால் கை கட்டி பவ்யமாக உட்கார்ந்து கெஞ்சணும்… ஏன் இப்படி? – என்று சர்க்காருக்குப் பிந்தைய விஜய்யின் நடிப்பை ஒருவர் இவ்வாறு சிலாகித்துப் பாராட்டியுள்ளார்.

  பொதுவாக, தற்போது தமிழ் சினிமா தள்ளாடிக் கொண்டிருக்கிறது. தியேட்டர்கள் பல காத்தாடுகின்றன. இளைஞர்கள் கைகளில் ஸ்மார்ட்போன்கள். எல்லாக் காட்சிகளையும் பார்த்துவிடுகிறார்கள். இசையைக் கேட்டு விடுகிறார்கள்! தியேட்டர் பக்கம் வருவதற்கே நேரமின்றி திண்டாடுகிறார்கள்… வீட்டில் இருக்கும் பெண்மணிகளோ சீரியல்களில் முடங்கிக் கிடக்கிறார்கள்… இந்த நிலையில் கொஞ்சம் பித்துப் பிடித்த மனிதர்களை நம்பித்தான் படத்தை ஓட்டியாகணும் என்ற நிலையில், இது போன்று அரசியல் விமர்சனங்களைக் கிளப்பி விட்டு குளிர்காயத்தான் தமிழ்த் திரையுலகத்தினர் முயற்சி செய்து வருகின்றனர். அதற்கு விஜய்யும் விதிவிலக்கல்ல!

  பாஜக.,வினரோ தயவு செய்து யாரும் விஜய் பேச்சை ஒரு பொருட்டாக எண்ணி பதில் கொடுத்து விடாதீர்கள் என்று கெஞ்சிக் கொண்டிருக்கின்றனர். ஜிஎஸ்டி., நீட், பண மதிப்பிழப்பு என நாட்டின் முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகளை மிகவும் கீழ்த்தரமாகவும் கேவலமான முறையிலும் அவற்றின் புரிந்துணர்வு சிறிதுமின்றி காட்சிகளாக வைத்த விஜய்யின் முந்தைய படங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவற்றை ஓட வைத்தது போல், இப்போது எதுவும் செய்து விடாதீர்கள் என்று கெஞ்சுகின்றனர் பாஜக., ஆதரவாளர்கள்.

  ஆக… ஆக… பிகிலு மூலம் திகிலு கிளப்பி விடலாம் என்று விஜய் காத்திருக்க, திகிலு கிளப்பப் போவது யார் என்பதில் இருக்கிறது பிகிலு படத்தின் வெளியீடும் அதன் வரவேற்பும்!

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,105FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,779FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-