மாநிலங்களவையில் ஜெயலலிதாவின் முதல் பேச்சு

ஜெயலலிதா, 1984 மார்ச் 4ல், அ.தி.மு.க., சார்பில் ராஜ்ய சபா எம்.பி., ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1984 ஏப்., 23ம் தேதி ராஜ்யசபாவில் பதவியேற்ற அவர் தனது முதல் கன்னி உரையை மிக கம்பீரமாகவும், அழகான உச்சரிப்புடனும் ஆங்கிலத்தில் பேசினார். இவரது பேச்சை பல்வேறு தலைவர்களும் பாராட்டினர்.அவரது உரை: எனக்கு பேச வாய்ப்பளித்த துணைத்தலைவருக்கு வாழ்த்துக்கள். எனக்கு முன்பு பேசிய உறுப்பினர், 30 நிமிடம் பேசினார். நான் முதன்முறையாக பேச உள்ளதால் எனக்கு குறைந்தது, 15 நிமிடம் வாய்ப்பளிக்க வேண்டும். நீங்கள் வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன் என உரையை தொடங்குகிறேன்.நாட்டின் உயரிய இந்த சபையின் மாண்பினை பற்றி நான் அறிவேன். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் இருக்கும் இந்த அவையில் நான் பேசுவதை பெருமையாக கருதுகிறேன்.
சில நாட்களாக ஊடகங்களில் மூத்தவர்கள் இருக்கும் சபையில் இளம் ரத்தம் பங்கேற்கிறது என எழுதப்படுகிறது. அவர்கள் வாழ்ந்த இந்த சபையில் எனக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடம், 22 ஆண்டுகளுக்கு முன், 1962ல் எங்கள் மறைந்த தலைவர் அண்ணாதுரை, எம்.பி.,யாக இருந்தபோது அவருக்கு ஒதுக்கப்பட்ட இடம். அண்ணாதுரை முதல்முதலாக பேசிய இடத்தில் இருந்தே எனது முதல்பேச்சும் தொடங்குகிறது.இதை எனக்கு கிடைத்துள்ள பெரும் பாக்கியமாக கருதுகிறேன். அண்ணாதுரை இந்த சபையில் முதன்முதலாக பேசும் போது, தமிழகத்துக்கு கூடுதல் அதிகாரம் பற்றியும், தமிழகத்தின் மின்சார பற்றாக்குறை பற்றியும் பேசினார்.
எனது கோரிக்கையும் தமிழகத்தின் மின்சார பற்றாக்குறை பற்றிதான் உள்ளது. தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மின்சார பற்றாக்குறை இருந்து வருகிறது. அதை சமாளிப்பதற்காக 1971ல் தமிழக அரசு, 25 சதவீதம் முதல், 100 சதவீதம் வரை மின்வெட்டை அமல்படுத்த வேண்டிய கட்டாய நிலை இருந்து வருகிறது. தமிழகத்தில் நீர் மின்சார உற்பத்தி அதிகம் இல்லை.
ஆந்திரா, பீகார், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து நிலக்கரியை கொண்டு வர காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் அணுமின்சார நிலையம் வேண்டுமென்ற கோரிக்கையின் அடிப்படையில் கல்பாக்கம் அணுமின் நிலையம் 1967 (முதல் பிரிவு) அமைக்கப்பட்டது.நான்காவது ஐந்தாண்டு திட்டத்தில் 2வது பிரிவும் அனுமதிக்கப்பட்டது. அப்போது கல்பாக்கத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும் தமிழகத்துக்கே வேண்டு மென்ற கோரிக்கை விடப்பட்டது. இதுபற்றிய கேள்வி 1971ம் ஆண்டு இதே சபையில் கேட்கப்பட்டபோது பிரதமர் இந்திரா பதிலளிக்கையில் முதல்பிரிவு முழுவதும் தமிழகத்துக்கும், 2வது பிரிவில் பாதி தமிழகத்துக்கும் வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்த நிலையில் தமிழக அரசு கடம்பாறை திட்டத்தை தயாரித்து வருகிறது.அந்த திட்டத்துக்கு கல்பாக்கத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் பயன்படுத்திகொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. ஆகையால் கல்பாக்கம் மின்சாரம் முழுவதும் தமிழகத்துக்கு கிடைக்காவிட்டால் கடம்பாறை திட்டத்திற்காக செலவிடப்பட்டுள்ள பணம் நஷ்டமாகி விடும். எனவே கல்பாக்கம் மின்சாரம் முழுவதும் தமிழகத்துக்கே தர வேண்டும். தமிழக அரசு அனுப்பியுள்ள புதிய திட்டங்களுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என மத்திய மின்சாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதுபற்றிய உண்மையை சொல்ல வேண்டிய நிலை உள்ளது. 6வது ஐந்தாண்டு திட்டத்தில் தமிழக அரசுக்கு 630 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் குறைவு. இதற்கு காரணம் தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்காமல் இருப்பதுதான்.
கல்பாக்கம் அணுமின்சார நிலையத்திற்கு பின் இதுவரை 27 புதிய திட்டங்களை தமிழக அரசு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியது.அதில், 11 திட்டங்களுக்குத்தான் திட்டக்கமிஷன் அனுமதி வழங்கியது. இவ்வளவு திட்டங்களுக்கு அனுமதி கிடைத்தாலும் தமிழகத்தின் மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. அதனால் வடசென்னையில் 1,050 மெகாவாட் அனல்மின்சார நிலையத்துக்கும், துாத்துக்குடி அனல் மின்சார நிலையத்தை விரிவுபடுத்தி மேலும் 420மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யும் 2வது பிரிவு அமைக்கவும் மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் போதுமான நிலக்கரி சப்ளை இல்லாததால் இந்த திட்டங்கள் மேற்கொள்ளப்படவில்லை.கடந்த 1978ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட கொள்கைப்படி தேசிய அனல்மின் கார்ப்பரேஷன் கீழ் மத்திய அரசின் மின்சார உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் எல்லா மாநிலங்களுக்கும் சமமாகவும், அந்த மின்சார நிலையம் அமைந்துள்ள மாநிலங்களுக்கு 10 சதவீதம் கூடுதலாகவும் வழங்கப்படும் என்ற முறையும் உள்ளது.
இது தவறான பங்கீடு ஆகும். இதனால் மின்சார பற்றாக்குறை உள்ள மாநிலங்கள் தொடர்ந்து பற்றாக்குறை மாநிலங்களாகவே இருக்கும். குறிப்பாக தமிழகம் எப்போதும் பற்றாக்குறையுள்ள மாநிலமாகவே உள்ளது. தனது மின்சார தேவைக்கு அண்டை மாநிலங்களிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் பெற வேண்டிய நிலை இருக்கிறது.
எனவே தமிழகத்தின் மின்சார தேவையை பூர்த்தி செய்ய கல்பாக்கம், நெய்வேலி மின்சார நிலையங்களில் இருந்து அதிக மின்சாரம் வழங்க வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.