spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?காந்தியின் பெயரில் புறக்கணிக்கப்பட்ட ‘அந்த’ தியாகங்களுக்கும் வலிகளுக்கும் கண்ணீர் அஞ்சலி!

காந்தியின் பெயரில் புறக்கணிக்கப்பட்ட ‘அந்த’ தியாகங்களுக்கும் வலிகளுக்கும் கண்ணீர் அஞ்சலி!

- Advertisement -

மஹாத்மா காந்தி சுதந்தரப் போராட்டப் பெருமரத்தின் உச்சிக் கிளையில் பூத்து, காய்த்து, பழுத்த கனி. அந்தக் கனியின் வசீகரத்துக்கும் சுவைக்கும் நறுமணத்துக்கும் பின்னால் லட்சக்கணக்கான இலைகளின் உயிர் சுவாசம் இருக்கிறது. ஆயிரக்கணக்கான கிளைகளின் நரம்புகள் துடித்திருக்கின்றன. கண்ணுக்குத் தெரியாத கணக்கற்ற சல்லிவேர்கள் உயிர்த்திரவம் உறிஞ்சிக் கொடுத்திருக்கின்றன.

பிரிட்டிஷ் காலச் சிறைகள் என்பவை நரகத்தின் பூலோக மாதிரிகள்.பத்து பேர் நிற்கவே முடியாத சின்னஞ்சிறிய சிறைக்குள் நூறு பேரை அடைத்த கொடூரம்…நிரம்பிவழியின் கழிப்பறையின் நடுவே இரவையும் பகலையும் நின்றபடியே கழிக்க வேண்டிய அவலம்.கண்காணாத தீவுகளுக்குக் கடத்தப்பட்டு கசையடி வாங்கிச் சாக வேண்டியிருந்த கொடூரம்.

வ.உ.சி. காயடிக்கப்பட்ட மாடால்கூட இழுக்க முடியாத கல் செக்கை இழுக்க வைக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். திருப்பூர் குமரன் பிரிட்டிஷ் கொடுங்கோலர்களால் தடியாலேயே அடித்துக் கொல்லப்பட்டார். இந்த வேதனையை ஒரு நிமிடம் நிதானமாக நினைத்துப் பார்த்தால், அஹிம்சையின் சுயரூபம் தெரியவரும்.

வீட்டுக் காவலில் உட்கார்ந்துகொண்டு வேர்க்கடலையும் ஆட்டுப்பாலும் சாப்பிட்டபடியே மவுன விரதம் இருப்பது போன்றதல்ல இது; விருப்பத்துக்குரிய சுருட்டை, பற்றவைப்பதற்கான ஆளுடனும் சேர்த்துப் பெற்று அனுபவிக்கும் சிறைவாசம் போன்றது அல்ல இது.

அது நெருப்புக்குள் ஆடைக் கவசத்தைகூடக் கழற்றிவிட்டு இறங்குவது போன்றது. மயிர்க்கால்கள், தோல், சதை, நரம்பு, எலும்பு என உயிரின் ஒவ்வொரு அடுக்கிலும் வெம்மை படரும் பெரும் துயரம்.

பிரிட்டிஷ் கொடுங்கோலன் காந்தியை மயிலிறகால் கூட அடிக்கவில்லை. தொண்டர்களை மரத் தடியால் துவம்சம் செய்தான். குதிரைகளைவிட்டு மிதிக்க வைத்தான். இருட்டுக் கொட்டில்களில் அடைத்தான்.

வன்முறையில் ஈடுபட்டவர்களை தூக்கிலிட்டுக் கொன்றான். அதையாவது மிகுந்த தயக்கத்துடன் ஏற்றுக்கொள்ளலாம்.
ஒன்றுமே செய்யாத நிராயுதபாணிகளாக இருந்த காந்தியவாதிகளை எதற்காக இப்படியெல்லாம் வாட்டினான். அவன் அப்படிச் செய்ததைப் பற்றிக்கூட நமக்குப் பெரிய விமர்சனம் இல்லை. அந்தத் தியாகத்தைச் செய்த நம் முன்னோர்களை நாம் எப்படி நடத்திவந்திருக்கிறோம்.

அந்த எளிய காந்தியவாதிகள் பட்ட வேதனைக்கு முன்னால் காந்தி பட்டவை ஒன்றுமே இல்லை. அதிலும் நேரு போன்ற சீமான்கள் காந்தி அளவுக்குக் கூட வேதனை அனுபவித்திருக்கவில்லை.

இன்று அந்த மேட்டுக்குடி காங்கிரஸின் கொள்ளுப்பேரன் பேத்திகள் அனுபவிக்கும் புகழ், அதிகாரம், செல்வச் செழிப்பு இவற்றையும் உண்மையான தியாகிகளின் குடும்பங்கள் இருக்கும் நிலையையும் ஒரு நிமிடம் இன்றாவது நினைத்துப் பார்க்கவேண்டும்.

இந்துப் பரம்பரியத்தில் ஆயுதப் போராட்டத்துக்கும் வேர்கள் உண்டு. அஹிம்சைப் போராடத்துக்கும் வேர்கள் உண்டு. காந்தி அந்த அஹிம்சை நரம்பை தூண்டிவிட்டு உச்சிக்கிளைக்குச் சென்றுவிட்டார்.

அதிகார வர்க்கத்தை எதிர்த்து வன்முறையைக் கையில் எடுக்காதீர்கள் என்று எளிய மக்களிடம் வண்டி வண்டியாகப் பேசிய காந்தி என்றேனும் பிரிடிட்ஷாரிடம் கைதிகளை அதே அஹிம்சையுடன் அன்புடன் நடத்தும்படிக் கேட்டுக் கொண்டிருக்கிறாரா..? மனித உரிமை சார்ந்து என்றேனும் அந்தப் போராளிகளை கண்ணியமாக நடத்தும்படிக் கேட்டுகொண்டிருப்பாரா… ஒரே ஒரு நாள் உண்ணாவிரதமாவது அதற்காக இருந்திருப்பாரா..?

கொடியுடன் நின்றவர் தலையில் விழுந்த முதல் அடி எப்படி வலித்திருக்கும் தெரியுமா… ஒட்டு மொத்த மூளையும் கலங்கியிருக்கும். ஒவ்வொரு நரம்பிலும் ஒவ்வொரு அணுவிலும் அந்தப் பேரதிர்ச்சி இடிபோல் இறங்கியிருக்கும். கண்கள் இருட்டிக் கொண்டு வந்து கை கால்கள் நடுங்கி துடி துடித்து அணு அணுவாக சீக்கிரம் உயிர் போய்விடாதா என்று கதறும் அளவுக்கு வலி அதிகரித்து இத்தனை நடக்கும்போதும் தொடர்ந்து அடிக்கப்பட்டுக்கொண்டே இருப்பதென்பது எத்தனை பெரிய கொடூரம் தெரியுமா?

காந்தி ஆரம்பித்த அமைதிப் போராட்டத்தில் எங்கேனும் வன்முறை நிகழ்ந்தால் உடனே போராட்டத்தை நிறுத்தினா. ஏனென்றால் அஹிம்சையே அவருடைய போராட்ட வடிவம். ஆனால், பிரிடிட்ஷார் ஒவ்வொரு போராட்டத்தையும் புதிய புதிய வன்முறைகளால் ஒடுக்கியபோது அவர் காட்டிய எதிர்ப்பு போதுமானதாக இருந்ததா?

பிரிட்டிஷார் தாமாக மனமுவந்து அல்லது வேறி வழியின்றி கொடுக்கும்போது வாங்கிக் கொண்டால் போதும் என்று சுதந்தரத்தை படிப்படியாகத் தள்ளிப்போட்ட அவருடைய ஒருபக்க அஹிம்சை உண்மையிலேயே சரியானதுதானா?

கத்தியின்றி ரத்தமின்றி என்ற ஒரு காந்தியவாதியின் முத்திரை வாக்கியத்தின் படி போரில் நிச்சயம் நம் கையில் கத்தியை ஏந்தியிருக்கவில்லை. எதிரியை ரத்தம் சிந்த வைத்திருக்கவே இல்லை. ஆனால், எதிரியோ கடைசி வரையில் தன் கையில் இருந்த கத்தியைக் கீழே போடவே இல்லையே… நம் தேசத்தின் வரைபடத்தில் அவன் அதே கத்தியால் கீறிய கோட்டில் இருந்து இன்றும் ரத்தம் வழிந்துகொண்டுதானே இருக்கிறது.

நாமும் ஆயுதத்தை ஏந்தியிருந்தால் நிச்சயம் இழப்பு இன்னும் அதிகமாகவே இருந்திருக்கும் என்று சொல்வது உண்மையே. ஆனால், இப்போதும் நம் ரத்தம் சிந்தலுக்குக் குறைவே இல்லையே.

காந்தியின் தலைமையில் போராட்டம் இருந்ததனால் பிரிட்டிஷார் உடம்பில் ஒரு கீறல் கூட விழுந்திருக்கவில்லை. அதுபோல் பிரிட்டிஷ் ஆட்சியில் காந்தியின் மேலும் ஒரு கீறலும் விழுந்திருக்கவில்லை. இந்தப் போராட்டம் இப்படியே வெல்லப் பட்டிருந்தால் எத்தனை நன்றாக இருந்திருக்கும்.

அஹிம்சையை ஏன் இரு தரப்புக்கும் வலியுறுத்தவில்லை மஹாத்மா… அவர் மேல் அது ஒருநாளும் பிரயோகிக்கப்படவில்லை என்பதாலா?

காந்தியாக வாழ்ந்தது எளிது. காந்தியத்துக்காக வாழ்ந்தது அப்படி இருந்திருக்கவில்லை. காந்தியின் பெயரில் புறக்கணிக்கப்பட்ட அந்தத் தியாகங்களுக்கும் வலிகளுக்கும் கண்ணீர் அஞ்சலி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe