Home கிரைம் நியூஸ் திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக் கொள்ளை… திருவாரூரில் ஒருவன் சிக்கினான்!

திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக் கொள்ளை… திருவாரூரில் ஒருவன் சிக்கினான்!

திருச்சி மெயின்கார்டுகேட் பகுதியில் அமைந்திருக்கும் லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், திருவாரூர் மாவட்டத்தில் ஒருவன் நகைகளுடன் சிக்கியுள்ளான். அவனிடமிருந்து அந்தக் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 5 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சியில் மெயின்கார்டுகேட் – சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த புதன் கிழமை இரவு சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் 2 பேர் தங்கம் மற்றும் வைர நகைகளை அள்ளிச் சென்றனர். இது குறித்து தகவல் அறிந்து கடைப் பகுதியை அலசிய போலீஸார், கொள்ளையர்கள் குறித்து விசாரித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், அந்தக் கடையில் ரூ.13 கோடிமதிப்புள்ள 28 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து, கடையில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது சினிமா பாணியில் கோமாளித்தனமான முகமூடிகளை அணிந்து கொண்டு, நகைகளை அவர்கள் கொள்ளை அடித்தது தெரியவந்தது. எவர் முகமும் தெளிவாகத் தெரியாத நிலையில், விசாரணையில் தொய்வு ஏற்பட்டது.

இந்நிலையில், இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. முதலில் இந்தக் கொள்ளையில் வடமாநிலங்களைச் சேர்ந்த கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப் பட்டது. தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் சிலரைப் பிடித்து போலீசார் விசாரித்து வந்தனர்.

இந் நிலையில் திருவாரூர் மாவட்டம் மடப்புரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட முயன்றனர். அப்போது அந்த வாகனத்தில் அமர்ந்திருந்த ஒருவன் ஆற்றங்கரை வழியாக ஓடிக் குதித்து தப்பிச் சென்றுவிட்டார். வாகனத்தில் இருந்த மற்றொருவன் போலீசாரின் பிடியில் சிக்கினான். அவன் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது அதில் ஏராளமான தங்கநகைகள் இருந்ததைக் கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து அந்த நகைகளை சோதித்தனர். நகைகளில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்களில் இருந்த பார் கோடை வைத்து அடையாளம் காண முற்பட்டனர். அவை, லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்டவை என்பது தெரியவந்தது.

தொடர்ந்து, பிடிபட்டவனிடம் நடத்திய விசாரணையில் அவன் மடப்புரத்தைச் செர்ந்த மணிகண்டன் என்பதும், தப்பி ஓடியவன் சீராத்தோப்பு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பதும் தெரியவந்தது!

மணிகண்டனிடம் இருந்து 5 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, கொள்ளையன் சிக்கியது குறித்து திருச்சி தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து திருச்சி போலீசார் திருவாரூர் சென்று மணிகண்டனை திருச்சிக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய சுரேஷ், ஏடிஎம் கொள்ளையன் முருகனின் தம்பி என்று தெரியவந்தது.

இந்தச் சம்பவத்தில், மீதமுள்ள நகைகளை சீராத்தோப்பில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் மணிகண்டன் கொடுத்து வைத்திருப்பதாகக் கூறியதை அடுத்து 50க்கும் மேற்பட்ட போலீசார் சீராத்தோப்பில் முகாமிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version