பிரிவினை சக்திகளை அடையாளம் கண்டு அரசு ஒடுக்க வேண்டும்: ராம.கோபாலன்

பின்புலத்தில் அரசியல் கட்சிகளில் சிலவும், தேச விரோத, பிரிவினை வாதிகளும் இருந்தனர் என்பது வெட்டவெளிச்சமாக தெரிந்தது. அவர்கள் பெண்கள், குழந்தைகள், அப்பாவி ஏழை குடிசை மக்களை தூண்டிவிட்டு, கேடயமாக பயன்படுத்தியது

சென்னை:
மாணவர்களின் பண்பாட்டு காக்கும் போராட்டத்தில் ஊடுறுவிய பிரிவினைவாத, தேசவிரோத சக்திகளை அடையாளம் கண்டு மத்திய, மாநில அரசுகள் ஒடுக்க வேண்டும்.. என்று இந்து முன்னணி நிறுவுனர் ராம.கோபாலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் அரசியல்சாராமல் பண்பாடு, கலாச்சாரம் காத்திட முதல் முறையாக மாணவர்கள் நடத்திய போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ஜல்லிக்கட்டிற்கான தடையை நீக்கிட சட்டப்பூர்வமான நடவடிக்கையை விரைந்து எடுத்த மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி, மாண்புமிகு தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோருக்கு இந்து முன்னணி பாராட்டு தெரிவித்துக்கொள்கிறது. இந்தப் பிரச்னையை காவல்துறை கையாண்டவிதம் கண்ணியமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மாணவர்கள் போராட்டத்தை சீர்குலைக்கவும், வன்முறையை தூண்டவும், தங்களின் தேசவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த சமூகவிரோத, தேசவிரோத, பிரிவினைவாத சக்திகள் ஊடுறுவி, வன்முறையை தூண்டி வருவதை இந்து முன்னணி காவல்துறை தலைவர் (டி.ஜி.பி) அவர்களிடம் விளக்கி மனு ஒன்றை 19.1.2017 அன்று வழங்கியது.

சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜ் அவர்கள், இந்தப் போராட்ட களத்தில் சமூக விரோதிகள் உள்ளே புகுந்துள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார். அப்படி உட்புகுந்த போராட்டத்தை திசைத்திருப்பிய அமைப்புகள் எவை எவை என வெளிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

நேற்று தமிழக சட்டசபையில் ஒருமனதாக சட்டம் இயற்றப்பட இருந்த நிலையில், வேண்டுமென்றே வன்முறையை ஏற்படுத்தி, கலவரச் சூழலை உருவாக்கினர். இதற்கெல்லாம் பின்புலத்தில் அரசியல் கட்சிகளில் சிலவும், தேச விரோத, பிரிவினை வாதிகளும் இருந்தனர் என்பது வெட்டவெளிச்சமாக தெரிந்தது. அவர்கள் பெண்கள், குழந்தைகள், அப்பாவி ஏழை குடிசை மக்களை தூண்டிவிட்டு, கேடயமாக பயன்படுத்தியது வெட்ககரமான செயல்.

தமிழக அரசு பாராபட்சமின்றி, உடனடியாக தேசவிரோதிகளையும் அவர்களுக்கு உதவி செய்து வன்முறையை கட்டவழித்து விட காரணமானவர்களையும் தண்டிக்கும் வகையில் நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. காலதாமதப்படுத்தி, சமூக விரோதிகளை விட்டுவிட்டால், நாளை பெரிய அளவில் தமிழகம் இதற்கு விலை கொடுக்க வேண்டி வரும் என எச்சரிக்கிறோம். – என்று கூறியுள்ளார்.