பாம்பாற்றின் குறுக்கே தடுப்பணை: தடுத்து நிறுத்த அன்புமணி கோரிக்கை

  பாம்பாற்றின் குறுக்கே மீண்டும் தடுப்பணை கட்டப்படுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக., அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.
  இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
  தமிழ்நாட்டில் திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களின் பாசன ஆதாரமாக விளங்கும் பாம்பாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு மீண்டும் தொடங்கியிருக்கிறது. இரு மாநில உறவுகளை பாதிக்கும் வகையிலான கேரள அரசின் இந்த செயல் கண்டிக்கத்தக்கதாகும்.
  திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகில் உள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அமராவதி அணையிலிருது தான் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த அணையின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது பாம்பாறு ஆகும். கேரளத்தின் மலைப்பகுதியில் உருவாகும் இந்த ஆறு கிழக்கு நோக்கி பாய்ந்து தமிழகத்திற்குள் வருகிறது. இந்த ஆற்றின் குறுக்கே பட்டுச்சேரி என்ற இடத்தில் தடுப்பணை கட்டும் பணிகளை கடந்த 2014-ஆம் ஆண்டு இறுதியில் கேரள அரசு தொடங்கியது. அப்போது தமிழகத்தில் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக இத்திட்டத்தை கேரளம் கைவிட்டது. கடந்த 2 ஆண்டுகளாக பாம்பாறு தடுப்பணை பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது அப்பணிகள் ரூ.26 கோடி செலவில் தொடங்கப்பட்டு தீவிரமாக நடந்து வருகின்றன.
  பாம்பாற்றில் தடுப்பணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறையும். இதனால் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன ஆதாரத்தை இழந்து பாலைவனமாக மாறும். குடிநீர் திட்டங்களும் பாதிக்கப்படும். மாநிலம் விட்டு மாநிலம் பாயும் ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்றால், கடைமடை பாசன மாநிலத்திடம் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமலும், தமிழக விவசாயிகளின் உணர்வுகளை மதிக்காமலும் கேரளம் தடுப்பணை கட்டுவது ஏற்க முடியாதது ஆகும். தமிழகத்துடனான நல்லுறவை பாதிக்கும் செயல்களில் கேரளம் ஈடுபடக்கூடாது.
  ஏற்கனவே பவானி ஆற்றில் 6 தடுப்பணைகளை கட்ட்ட முடிவு செய்து அவற்றில் இரு தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளை தடுத்து நிறுத்தும்படி பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே வலியுறுத்திய நிலையில், அதுகுறித்து தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தான் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படும் போதெல்லாம் அதுபற்றி பிரதமருக்கு கடிதம் எழுவதுடன் கடமை முடிந்ததாக நினைத்து முதலமைச்சர் ஒதுங்கி விடக் கூடாது. பிரதமரையோ மத்திய நீர்வளத்துறை அமைச்சரையோ நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும். இப்போது பாம்பாற்றிலும் தடுப்பணை கட்டப்பட்டு வரும் நிலையில், பவானி மற்றும் பாம்பாற்றில் தடுப்பணை கட்டும் பணிகளை தடுத்து நிறுத்தும்படி பிரதமரை முதலமைச்சர் பன்னீர் செல்வம் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.