விவேகானந்த நவராத்திரி பிப்.6ல் துவங்குகிறது!: ராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் விமூர்த்தானந்தர்

சுவாமி விவேகானந்தர் அந்த இல்லத்தில் தங்கிய தினத்தை ஒட்டி, இந்த விழா அங்கே நடத்தப் படுகிறது. வரும் 2017 பிப். 6-14ஆம் தேதிகளில் ஒன்பது நாட்கள் கொண்டாடப் படுகிறது.

குரு என்ற சொல்லுக்கு இருளை நீக்குபவர் என்று பொருள். அறியாமை இருளகற்றும் ஞானாசிரியரை குரு என்போம். ஆசான், ஆசிரியர், ஆசார்யர் என்றெல்லாம் சொல்லி வணங்கும் குருவுக்கு முற்காலத்தில் தகுந்த தட்சிணை கொடுத்து மரியாதை செய்து காத்தும் வந்தார்கள், குரு தட்சிணை என்ற பெயரில்! அந்த குருவின் ஒரு உருவாகவே புத்தகங்கள் திகழ்கின்றன. நல்ல நூல்கள், நம் அறிவுக் கண் திறப்பவை மட்டுமல்ல, நம் வாழ்க்கையை செப்பனிடும் பணியையும் செய்பவை!

சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்து புத்தகங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். நல்ல அச்சு. தெளிவான உரு. விரும்பிப் படிக்கும் தலைப்புகள். அவற்றில் சில மொழிபெயர்ப்புகளாக இருந்தாலும் எளிய நடை! அத்துடன், ஸ்ரீராமகிருஷ்ணர், சாரதா தேவி, விவேகானந்தர், ராமகிருஷ்ணானந்தர் ஆகியோரின் பிறந்த நாள்களில் 40% தள்ளுபடி விலையில் மடத்தின் புத்தகங்களை அளித்து, எளியோருக்கும் அவை சென்று சேர வகை செய்வது. மடத்தின் பெரும்பாலான நூல்கள் என் இல்லத்து நூலகத்தில் இடம் பெற்றிருக்கும்.

வழக்கம்போல் மயிலாப்பூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்துக்குச் சென்றுவிட்டு, மடத்தின் மேலாளர் சுவாமி விமூர்த்தானந்தரிடம் பேசிக் கொண்டிருந்தேன். இன்றைய பேப்பர், அச்சு மை விலையேற்றம் எல்லாவற்றையும் தாக்குப்பிடித்து, மடத்தால் மட்டும் எப்படி இவ்வளவு மலிவாகவும் தள்ளுபடியிலும் புத்தகங்களைத் தரமுடிகிறது என்று கேட்டேன். அதற்கு இப்போது புதிய திட்டம் ஒன்றை முன்வைத் திருக்கிறோம் என்றார்.

“புத்தகப் பிரிவுக்கு என்று ஒரு வைப்புநிதி, கார்பஸ் ஃபண்ட் துவங்க யோசித்திருக்கிறோம். ரூ. 6.5 கோடி அளவுக்கு நன்கொடை திரட்டி, அதன் மூலம் வரும் வருவாயைக் கொண்டு இந்தப் பணியை தொடர்ந்து செய்ய திட்டம். மடத்தின் வெளியீடுகளை விலை ஏற்றாமல் தொடர்ந்து இப்பணி நடக்க வேண்டும். குறைந்தது ரூ.5 ஆயிரம், அல்லது நூறு டாலர் அளவில் நன்கொடையாளர்களிடம் பெற்று, வைப்பு நிதியில் சேர்க்க வேண்டும். அதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறோம்.” என்றார்.

மடத்து நூல்கள் தொடர்பாக பேச்சு சென்றது. அப்போது ஒரு தகவலைச் சொன்னார் சுவாமிஜி. ஒருமுறை, வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர், இந்திய தத்துவங்கள், மரபு மற்றும் இந்தியாவைக் குறித்து அறிந்து கொள்ள வேண்டும், அதற்கு எந்த புத்தகத்தைப் படிப்பது என்று ராஜாஜியிடம் கேட்டாராம். அதற்கு ராஜாஜி, ஸ்ரீராமகிருஷ்ண மடத்துக்குச் செல்லுங்கள். அங்கே, ராமகிருஷ்ணரின் உபதேச மொழிகள் என்று ஒரு புத்தகம் உள்ளது. அதனைப் படியுங்கள் என்று அவருக்கு வழிகாட்டினாராம்.

இதைச் சொல்லிவிட்டு, அமரர் கல்கி ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மீதும் குருமார்கள் மீதும் பெரும் மதிப்பு வைத்திருந்தார். அதனால்தானோ, அவர் தாம் ஆசிரியராக இருந்து வெளியிட்ட கடைசி இதழின் அட்டைப்படமும் சாரதா தேவியாரின் படமாகவே இருந்தது என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.

மடத்தில் வெளியான நூல்களில் மிகவும் பிடித்த நூல் என ஸ்ரீராமானுஜர் நூலைக் குறிப்பிடுவேன். அந்த நூலின் பின்னணி குறித்துக் கேட்டேன். “வங்கத்தில் சுவாமி ராமகிருஷ்ணானந்தர் தொடராக எழுதினார். வங்க மக்களுக்கு ராமானுஜரை அறிமுகம் செய்வதுபோல் அமைந்த அந்த நூலை கா.ஸ்ரீ.ஸ்ரீ. தமிழாக்கினார். அது, வங்கத்துக்கு மட்டுமல்லாமல், தமிழகத்துக்கே ராமானுஜரின் வாழ்க்கையை பரவலாக அறிமுகம் செய்தது போல் ஆனது” என்றார் சுவாமி.

விமூர்த்தானந்தர் ராமகிருஷ்ணவிஜயம் ஆசிரியராக இருந்தபோது, இலக்கியம், ஆன்மீகம் இணைந்து, அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளை உள்ளடக்கிய, ‘கரு உண்மை, உரு கற்பனை’ என நவீன கண்ணோட் டத்தில் சிறுகதைகளை எழுதினார். அது குறித்து கருத்து கேட்பார். என் விமர்சனத்தை அவரிடம் முன்வைப்பேன். அதுகுறித்து நினைவூட்டிய போது, அவை 5 தொகுதிகளாக நூல்களாகியுள்ளன என்றார்.

பேசிக் கொண்டிருந்ததில் அவர் தெரிவித்தவை…விவேகானந்தர் வந்தார் இந்து மதம் காக்கப் பட்டது என்றார் ராஜாஜி. மடத்தின் நூல் பிரிவு இந்து தர்ம பாரம்பரிய நூல்களைப் பதிப்பித்து அவற்றைக் காத்து வருகிறது. சுமார் ஆயிரம் தலைப்புகளுக்கு மேல் நூல்கள் உள்ளன. பாரம்பரிய நூல்கள், ஆங்கிலம், தமிழில் பல உள்ளன. சுவாமி தபஸ்யானந்தர் வேத உபநிடத விளக்கங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 63 நூல்கள் எழுதியுள்ளார். உபநிடதங்கள், ருத்ரம், தேவீ பாகவதம், விஷ்ணு சஹஸ்ரநாமம், வேத மந்திரங்கள், உபநிஷத் சாரம் என பல சம்ஸ்க்ருத நூல்களை ஆதார பூர்வமாக மொழி பெயர்த்தவர் அண்ணா சுப்ரமணியம். அண்ணா என்ற பெயரில் அவர் மொழி பெயர்த்தவை இன்றும் மடத்தின் நூல்களில் பளிச்செனத் தெரிபவை.

ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் முதல் துறவி ஆசிரியராக இருந்தவர் விபுலானந்தர். அவர் பல புத்தகங்கள் எழுதியுள்ளார். நம் பாரதப் பண்பாடு, பாரம்பரியப் பெருமைகளை நூல்களாக்கினார். யோகா தியானம் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

இளைஞர்களுக்கு மட்டுமேயான நூல்களே சுமார் நூற்றுக்கும் மேல் உள்ளன. சுய முன்னேற்றம், ஊக்கம், உற்சாகமூட்டும் கட்டுரைகளின் தொகுப்பு ஆகியவற்றுடன், சுவாமி விவேகானந்தர் இளைஞர் களுக்குக் கூறும் செய்திகள், விடுக்கும் அறைகூவல்கள், வாழ்க்கையை வெற்றிகரமாகக் கட்டமைக்கும் வழிகள் ஆகியவற்றைத் தாங்கிய நூல்கள் இளைஞர்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றவை. ‘வாழக் கற்றுக் கொள்’ என்ற நூல் நிறைய விற்பனையாகியுள்ளது.

இதுமட்டுமல்லாமல், சிறுகதைகள் தொகுப்பும் உண்டு. சிறுகதைகளின் வழியே நல்ல பண்புகளைப் பதியவைக்கும் முயற்சியை சுவாமி கமலாத்மானந்தர் மேற்கொண்டார். ஆன்மீகம், பக்தி, தெய்வீகக் கதைகள், அருள் நெறியாளர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள் என பலவற்றை அவர் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்தில் தொடராக எழுதியிருந்தார். அவை தொகுக்கப் பட்டு நூல்களாக வந்துள்ளன.

இன்றைய நவீன உலகில், பெரும் அழுத்தத்துக்கு ஆட்பட்ட மனிதர்கள் அன்றாட வாழ்க்கையில் காணும் பிரச்னைகளுக்கு பாரம்பரிய முறையிலும் ஆன்மிக வழியிலும் தீர்வுகளைச் சொல்லும் புத்தகங்கள் பல உள்ளன.

ரா.கணபதியின் 3 நூல்கள் மிகவும் பிரபலமானவை. ‘அறிவுக் கடலே அருட்புனலே’, ‘சுவாமி விவேகானந்தர்’, ‘அம்மா’ ஆகிய மூன்றும் ரா.கணபதியின் பிரபலமான நூல்கள். அதுபோல், அப்துல் கலாமின் ‘வளர்ந்த பாரதத்தில் வாழ்வோம்!’ என்ற நூல் மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்று!

சைவ, வைணவ பேதமின்றி நூல்கள் வெளியா கின்றன. வைணவக் கருத்துகளை உள்ளடக்கிய நூல்களும் பல உண்டு என்று சொல்லிக் கொண்டிருந்தபோது, நண்பரும் நாடக ஆசிரியருமான் விவேக் சங்கர் அப்போது உள்ளே வந்தார். அவரை சுட்டிக் காட்டிய சுவாமிஜி, இந்த வருடம் சகோதரி நிவேதிதையின் 150வது ஆண்டு என்பதால் சிறப்பாகக் கொண்டாடத் திட்டம் உள்ளது. ‘நிவேதிதை 150 என்ற நூல்’ வெளியிடுகிறோம். வங்காளத்தில் மேடை நாடகங்கள், தமிழில் சினிமா எடுப்பது, பெண்களுக் கான நிகழ்ச்சிகள் என திட்டமிட்டிருக்கிறோம். விவேக் சங்கர் நிவேதிதை வாழ்க்கை குறித்த நாடகம் எழுதியுள்ளார். ஊர் ஊராகச் சென்று அதனை மேடையேற்றி வருகிறோம் என்றார்.

சரி சுவாமிஜி, புத்தகக் காட்சிக்கு என்ன செய்யப் போகிறீர்கள், ஏதாவது சிறப்பு திட்டம் உள்ளதா என்று கேட்டேன்.

இந்த வருட புத்தகக் கண்காட்சியில் வழக்கம்போல் பங்குபெறுகிறோம். தவிர தெய்வீக புத்தகத் திருவிழா, விவேகானந்த நவராத்திரி கொண்டாட்டத்தின் போது நடத்தப் படுகிறது. விவேகானந்தர் இல்லத்தில், தொடர்ந்து 9 நாட்கள் இது நடத்தப் படுகிறது. இதில் தனியாக மடத்து நூல்களை விற்பனைக்கு வைத்து ஒரு தனி புத்தகக் காட்சியாகவே நடத்துகிறோம்.

சுவாமி விவேகானந்தர் அந்த இல்லத்தில் தங்கிய தினத்தை ஒட்டி, இந்த விழா அங்கே நடத்தப் படுகிறது. வரும் 2017 பிப். 6-14ஆம் தேதிகளில் ஒன்பது நாட்கள் கொண்டாடப் படுகிறது. இந்த முறை இவ்விழாவுக்கு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவை அழைத்திருக்கிறோம் என்றார் சுவாமி விமூர்த்தானந்தர்.

செங்கோட்டை ஸ்ரீராம்
(கல்கியில் வெளியானது)