சசிகலாவின் முதல்வர் கனவு: வேகம் விவேகம் அல்ல

முதல்வராகும் முடிவை எடுத்தால் அவர் பொதுச்செயலர் பதவிக்கும், ஆட்சிக்கும், கட்சிக்கும் ஒருசேர ஆபத்தைக் கூவி அழைக்கிறார் என்று பொருள்!

’வேண்டுகோளை ஏற்று’ சசிகலா அதிமுக பொதுச்செயலரானது போலவே இப்போது அவர் ’முதல்வர் ஆக வேண்டும் என்ற வேண்டுகோளும்’ வைக்கப்படலாம். அவரும் அதை ஏற்கலாம். இவை நடப்பதில் தடை ஏதுமில்லை.

கட்சியின் பொதுச்செயலர் ஆவதற்கும் மாநில முதல்வராவதற்கும் சிறு வேறுபாடு உள்ளது. கட்சி ஏற்றுக்கொண்டால் பொதுச்செயலர் ஆகலாம். கட்சியை தனது கட்டுப்பாட்டில் காலம் முழுவதும் வைத்திருக்கலாம். முதல்வர் ஆவதற்கு கட்சி எம்எல்ஏ-க்கள் மட்டுமின்றி மக்கள் ஆதரவும் தேவை.

பதவியேற்ற ஆறு மாதத்துக்குள் அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாக வேண்டும். எம்எல்ஏ-க்கள் பலரும் போட்டிபோட்டுக்கொண்டு பதவி விலகி, பொதுச்செயலர் போட்டியிட இடம் ஒதுக்க தயாராக இருப்பார்கள். ஆனால் வாக்களிக்கப் போவது மக்கள்.

மக்கள் சசிகலாவுக்கு வாக்களிக்க மாட்டார்களா? சொந்தங்கள் உள்ள தொகுதியாக பார்த்து நின்றால் என்ன ?என்று தோன்றும். ஆனால் சசிகலா மீது, மக்களுக்கு மட்டுமல்ல, தொண்டர்களுக்கும்கூட நீறுபூத்த வெறுப்பு இருக்கிறது. எம்எல்ஏ-க்கள் அனைவரும் சசிகலாவின் பயனாளிகள். அவர்கள் முழு ஆதரவு தெரிவிப்பார்கள். ஆனால் கட்சித் தொண்டனுக்கு அந்தக் கட்டாயம் கிடையாது. மக்களுக்கும் கிடையாது.

ஜெயலலிதா சமாதிக்கு எப்படி கட்டுக்கடங்காத கூட்டம் வந்துகொண்டே இருந்ததோ அதேபோன்று சசிகலா மீதான கசப்புணர்வும் இருந்தே வருகிறது. அதற்கான காரணங்கள் என பொதுவெளியில் பேசப்படுபவை–

1. 75 நாள்கள் அம்மாவின் முகத்தைக்கூட காட்டாமல் மறைத்தார்
2. அம்மாவை கேஸ்ல மாட்டிவுட்டதே இவுங்கதான்
3. Jaya was an intellectual, out spoken lady. But Sasi…?!!!
4. தோழி என்பதால் வேதா நிலையத்தை இவரே ஆக்கிரமிக்கலாமா?

இதுபோன்ற இன்னும் பல கேள்விகளும் மக்களிடம் உள்ளன. இத்தனை சந்தேகங்களையும் சசிகலா போக்கியாக வேண்டும். அதை இடைப்பட்ட இந்த நாள்களுக்குள் அவர் செய்திருக்க வேண்டும். இல்லையென்றாலும், இனியாகிலும் இதைச் செய்தாக வேண்டும். அவ்வாறு செய்யாத நிலையில், அவர் தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்புகள் மிகமிகக் குறைவு.

சசிகலா தன் மீது பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் கொண்டுள்ள வெறுப்பை நீக்கியாக வேண்டும். ஆனால் அதை 6 மாதத்தில் செய்ய முடியாது. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு பொறுமை காத்தால் ஒருவேளை அது சாத்தியமாகலாம்!

சசிகலா தேர்தலில் தோல்வியடைந்தால் அவர் முதல்வர் பதவியை மட்டுமல்ல, அதிமுகவையும் இழக்க நேரிடும். அவர் மீதான மக்கள் அதிருப்தி அப்பட்டமாக வெளிப்படும்போது, கட்சி கட்டுக்குள் அடங்காமல் உடையும். விலைபேசப்படாமல், சுயவிருப்பத்தின் அடிப்படையிலேயே குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அதிமுக எம்எல்ஏ-க்கள், கட்சித் தாவல் தடைச் சட்டத்தை மீறாதபடிக்கு பிளந்து செல்வார்கள்.
ஆனால் அவர்களது ஆதரவை திமுக ஏற்காது என்பதை இப்போதே சொல்லிவிடலாம். பின்வாசல் வழியாக நாங்கள் ஆட்சியைப் பிடிக்க மாட்டோம் என்று ஒரே வார்த்தையில் அரசைக் கலைத்து தேர்தலுக்கு வழிவகுப்பார் ஸ்டாலின். அந்த நிலையில் ஆட்சியும் பறிபோகும். மீண்டும் பொதுச் செயலாளர் பதவிக்கு ஆபத்து வரும். வளர்த்த கடா முட்ட வரும். வச்ச செடி முள்ளாகும்…

மேலும், உச்சநீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டில் தீர்ப்பு அளிக்கப்படாத நிலையில், அவர் முதல்வர் பதவியை ஏற்பது சரியான முடிவாக இருக்காது. தீர்ப்பு வேறு மாதிரியாக அமைந்தாலும், கட்சிப் பொதுச் செயலராக நீடிப்பதில் தடை இருக்க முடியாது. சிறையிலிருந்தும் கட்சியை நடத்த முடியும். ஆனால் முதல்வர் பதவியை இழந்தால், மக்களுடன் அதிமுக தொண்டர்களும் புறக்கணிப்பார்கள். கட்சி உடையும்.

முதல்வராகும் முடிவை எடுத்தால் அவர் பொதுச்செயலர் பதவிக்கும், ஆட்சிக்கும், கட்சிக்கும் ஒருசேர ஆபத்தைக் கூவி அழைக்கிறார் என்று பொருள்!

தலையங்கக் கட்டுரை: ஆர்.சோமசுந்தரம்