Home உரத்த சிந்தனை காவியில் இருந்து பச்சைக்கு! நிறம் மாறிய சேனா!

காவியில் இருந்து பச்சைக்கு! நிறம் மாறிய சேனா!

இந்துத்துவா… வீர சாவர்க்கர்… அயோத்தி கோவில்… இந்து மகா சபா… பேரிலேயே சிவபெருமான்.. இப்படி இருந்ததுதான் சிவசேனா! சிவனின் சேனைகள்! அப்படித்தான் கட்சியைக் கட்டமைத்தார் பால் தாக்கரே!

சொல்லப் போனால், ஹிந்துத்துவ சிந்தனைகளை பெருமளவில் கைவிட்டு, மற்ற கட்சிகளைப் போல் சிறுபான்மை வாக்கு வங்கியைக் குறிவைத்து இயங்கிக் கொண்டிருப்பது பாஜக., ஆனால் பாஜகவை விட மிகுந்த ஹிந்துத்துவப் பிடிப்புள்ள கட்சியாக இருந்ததும் சிவசேனாதான். அதன் நிறம் காவி. காவி ஒன்றே! பாஜக.,வோ தனது கட்சிக் கொடியிலேயே பச்சையை இச்சையுடன் கலந்து கொண்டது. ஆனால், காவி சிவசேனை இன்று கிறிஸ்துவப் பின்னணி கொண்டது என்று இதுகாறும் தம்மால் வசை பாடப்பட்ட, இஸ்லாமியர்களுக்கான கட்சி என்று குற்றம்சாட்டபட்ட காங்கிரஸுடன் கைகோத்து… தன்னை பச்சையாக மாற்றிக் கொண்டிருக்கிறது சிவசேனா. நிறம் மாறிய பூக்களாக தடம் மாறிப் போயுள்ளது சிவசேனா!

இதனால்தான் பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, இரு கட்சிகளும் முதல்வர் பதவியில் சமரசம் செய்து கொண்டு, ஹிந்துத்துவ சித்தனைகளை தோற்கடிக்காமல் இருக்க வேண்டும் என்று கெஞ்சிக் கொண்டிருந்தார்.

பால் தாக்கரே – பேரச்சொன்னாலே சும்மா அதிருதில்லே… என்று சொல்லுமளவுக்கு அதிரடி அரசியலில் ஆர்வம் காட்டியவர். மராட்டியச் சிங்கம் என்று பேர் வாங்கினார். வீரசிவாஜி, வீரசாவர்க்கர் என்று மராட்டிய மண்ணின் வீரம் விளைந்த போராளிகளின் வரிசையில் பால்தாக்கரேவும்கடந்த நூற்றாண்டில் மக்கள் மனத்தில் இடம் பிடித்தார்.

மராட்டியம் பேசியவர். ஹிந்தி எதிர்ப்பையும் அவ்வப்போது கைக்கொண்டவர். மராட்டியம் மராட்டியர்களுக்கே என்று முழக்கமிட்டவர். தமிழர்கள் உள்ளிட்ட நாட்டின் வேற்று மாநிலத்தவர் ஆதிக்கம் மும்பையில் அதிகரித்த போது, தேசத்தின் ஒற்றுமை என்பதையும் கவனியாமல், மாநிலத்தின் நலன் என்ற மராட்டியத்தின் குறுகிய வட்டத்திலேயே நின்று அரசியல் செய்தவர்.

அயோத்தி ராமர் கோயிலா… காஷ்மீர பண்டிதர்கள் பால் இரக்கம் காட்டுவதா… பாகிஸ்தானியர்களை வசை பாடுவதா… எல்லாவற்றிலும் பால் தாக்கரே தனித்து நின்றார்.

மும்பைக்கு வந்து பாகிஸ்தானியர்கள் கிரிக்கெட் ஆடுவதைக் கூட முன்னணியில் நின்று எதிர்த்தவர். அவரது கட்சியினர் ஒரு படி மேலே போய்… அப்போது மும்பை வாங்க்டே மைதானத்தின் ஆடுகளத்தையும் சேதப் படுத்தினர். அதையும் சிவசேனை தனது சாதனையாகப் பார்த்தது.

எந்தக் காலகட்டத்திலும் நானோ எனது வாரிசுகளோ ஆட்சிப் பொறுப்பில் அமர மாட்டோம் என்று சூளுரைத்தவர் பால் தாக்கரே!

இந்துத்துவப் போராளியான பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரேதான் மகாராஷ்டிரத்தின் முதல்வர் நாற்காலியில் கனவு கண்டு, இந்துத்துவக் கூட்டணிக் கரமான பாஜக.,வை உதறினார். பச்சை காங்கிஸுடன் கை கோத்து, காவிச் சாயத்தில் இச்சையுடன் இப்போது பச்சையைக் கலந்து விட்டார் என்று வருத்தப் படுகின்றனர் மகாராஷ்டிரத்து இந்துத்துவ சிந்தனையாளர்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version