பிரஸ்மீட்டுக்கு ஏற்பாடு செய்தது அரசுதான்! : லண்டன் மருத்துவர் பளீர்!

அதேநேரம் வேறொரு கேள்வியின்போது ரிச்சர்ட் பீலே, இந்த பிரஸ் மீட் தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதே தவிர, அப்பல்லோவால் கிடையாது என்று பேச்சின் இடையே திடீரெனப் போட்டுடைத்தார்.

சென்னை:
அரசுத் தரப்புதான் அப்பல்லோ பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்தது என்று கூறினார், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கிய லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே.

சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்பதாக அறிவிக்கப்பட்ட மறு நாளே, அவர் மீது விழுந்துள்ள சந்தேக நிழலைப் போக்குவதற்காக ஒரு பிரஸ்மீட் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை மேலும் கிளப்பியுள்ளது. இந்த திடீர் பிரஸ் மீட் குறித்து கருத்து தெரிவித்த அப்பலோ மருத்துவர்கள், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட்டுக்கு சென்னையில் வேலை இருந்ததாகவும் அதனால்தான் அவர் வந்ததாகவும் ஒரு தகவலைக் கூறி, குழப்பத்தை ஏற்படுத்தினார்.

ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கும் நிலையில், அப்பல்லோ மருத்துவமனை சார்பில் இந்த பிரஸ் மீட்டுக்கு மருத்துவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, டாக்டர் பாலாஜி, டாக்டர் பாபு உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் பேசினர்.

அப்போது ஏன் இவ்வளவு தாமதமாக இந்த பிரஸ் மீட் ஏற்பாடு செய்யப்பட்டது என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பாலாஜி, “டாக்டர் ரிச்சர்ட் இன்று சென்னையில் ஒரு நிகழ்வில் பங்கேற்க வந்தார். அவர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த நிபுணர் என்பதால் அவரும் இருக்கும்போது பிரஸ் மீட் ஏற்பாடு செய்யலாம் என்பதால் இன்று பிரஸ் மீட் செய்கிறோம். அரசுத் தரப்பில் இருந்து எங்களுக்கு பிரஸ் மீட் செய்ய எந்த அழுத்தமும் வரவில்லை” என்றார்.

அதேநேரம் வேறொரு கேள்வியின்போது ரிச்சர்ட் பீலே, இந்த பிரஸ் மீட் தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதே தவிர, அப்பல்லோவால் கிடையாது என்று பேச்சின் இடையே திடீரெனப் போட்டுடைத்தார்.