நாட்டு நடப்பு: தீர்ப்பும் அரசியல் கட்சிகளும்

இன்னும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உண்மையிலேயே நெஞ்சில் உரமும், நேர்மையும், எளிமையும் கொண்ட நல்ல தலைவர்கள் வருவார்கள்.அவர்களின் தலைமையில் தமிழ்நாடு தன்னுடைய அவமானங்களைத் துடைத்துத் தூய்மை பெரும்.

     சொத்துக் குவிப்பு வழக்கில்  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது இல்லத்தில் அவருக்கு உதவியாக இருந்த சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை குற்றவாளிகளாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
     இந்தத் தீர்ப்பை பல அரசியல் கட்சிகள் நீதிக்குக் கிடைத்த வெற்றி என்று கொண்டாடி வருகின்றனர்.
     தி.மு.க.வும் தாங்கள் ஒரு புனித புத்தர் போலத் தங்களைக் காட்டிக் கொண்டு இது ஊழலுக்கு எதிரான நல்ல தீர்ப்பு என்று அதன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.
     தனது சகோதரி கனிமொழி, 2G ராஜா, மாறன் சகோதரர்கள், மற்றும் இன்னும் எத்தனையோ ஊழல் பெருச்சாளிகளையும், எலிகளையும், சிறுசிறு பூச்சிகளையும் தன் மடியில் கட்டிக் கொண்டுதான் அவர் இப்படிச் சொல்லுகிறார். தனது சகோதரர் மு.க அழகிரி செய்த அட்டகாசங்கள் கொஞ்ச நஞ்சமா. அவரது கழகத் தலைவர் தி(ரு).மு.கருணாநிதியே ஊழலின் ஊற்றுக் கண்தானே. சர்க்காரியா கமிஷனே அவரது ஊழலை “விஞ்ஞான முறையில் செய்த ஊழல்” என்று சிறப்புப் பட்டமே கொடுத்ததே.மக்களின் மறதி உங்களைப்போன்ற அரசியல் வியாதிகளுக்கு ஊக்க மருந்தாக இருக்கிறது. நீங்கள் எல்லோரும் பகுத்தறிவாளர்களாக வேடம் போட்டாலும் தெய்வம் நின்று கொல்லும் என்பது சத்தியம். தவறு செய்தவர்கள் வலியில்லாமல் செத்தது கிடையாது என்னும் போது தப்பு செய்தவர்களுக்கு இறைவன் தண்டனை எப்படி இருக்கும் என்பது ஒவ்வொரு முறையும் காலம் நிரூபித்துக் கொண்டு வருகிறது. (“தவறு என்பது தவறிச் செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது”…பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்).
     இப்போதிருக்கும் காங்கிரஸ் ஊழலிலேயே ஊறிக்கிடக்கிறது. அவர்களுக்கு திரு. கே.காமராஜரின்  பெயரை உச்சரிக்கவே யோக்கியதை கிடையாது.
     மற்ற உதிரிக் கட்ச்சிகள் எல்லாம் ஊழல் கட்சியான அ.இ.அ.தி.மு.க., தி.மு.க.வின் கூட்டணிக்காகக் கதவைத் தட்டித்தட்டி காப்பி, டீ, குடித்தவைதான்.
     இந்த மிகப் பெரிய ஊழல் ஆலமரம் தானே வளரும் என்றாலும், தன் பங்கிற்குத் தண்ணீர் ஊற்றி வளர்த்தவர் திரு. சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சார்யார் என்ற இராஜாஜி அவர்கள் என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அவர்தான் 1967ம் வருடப் பொதுத்தேர்தலில் தனது சுதந்திராக் கட்சியை தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து,”நான் சொல்லுகிறேன் நீங்கள் இந்தக் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று தன் மார்பில் உள்ள பூணூலைத் தொட்டு தமிழக மக்களிடம் ஓட்டுக் கேட்டார்”. அப்பொழுதே கரையான் புற்றில் கருநாகம் புகுந்து விட்டது. அதன் பலனை இன்றும் நாம் அனுபவிக்கிறோம்.
     இன்னும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உண்மையிலேயே நெஞ்சில் உரமும், நேர்மையும், எளிமையும் கொண்ட நல்ல தலைவர்கள் வருவார்கள்.அவர்களின் தலைமையில் தமிழ்நாடு தன்னுடைய அவமானங்களைத் துடைத்துத் தூய்மை பெரும்.
    அம்மாவின் ஆட்சியும் வேண்டாம், அப்பாவின் ஆட்சியும் வேண்டாம். சுயநலம் இல்லாத நல்லவர்கள் ஆட்சியே வேண்டும்.
கட்டுரை: மீ.விஸ்வநாதன்