கங்கை-காவிரி; நதிகள் இணைப்பால் விளையும் தீமைகள்! : ஆய்வு நோக்கில்!

நதி நீர் இணைப்பு தான் வெள்ள அபாயத்தை தீர்ப்பதற்கான தீர்வா? என்றால், இல்லை, இது தீர்வல்ல, சரியாக சொல்லவேண்டுமானால் முட்டாள்தனமானது. பணக்காரனிடம் (கங்கை) கொள்ளையடித்து ஏழையிடம் (காவிரி) கொடுப்பது எவ்வளளவு தவறோ அதைவிட தவறு.

நடிகர், அரசியலிலிருந்து அணுமின் ஆராய்ச்சி வரை குறைத்து சொல்லும்போது, கன்னியாகுமரியிலிருந்து கடலோரமாக நடந்தும், கட்டுமரத்தில் பயணம் செய்தும், கிழக்கு கடற்கரையோர நதி சமவெளிகள் அனைத்திலும் நடந்து, ஜீப், வல்லம், பைக்கில் சென்று, காவிரி, கிருஷ்ணா, கோதாவரி, பெண்ணார், கடிலம், பாலார், தாமிரபரணி, வெள்ளார், மகாநதி, கங்கை ஆகிய நதி மூலங்களிலிருந்து கடலை சேரும் வரை சற்றேகுறைய கடந்த இருபது வருடங்களாக ஆய்வு செய்து வரும் எனது ஆய்வு குழுவுக்கு கருத்து சொல்லும் தகுதி இருப்பதாகவே நினைக்கிறேன்.

(கற்றலின் கேட்டல் நன்று என்று நினைப்போர் அடுத்த மாதம் பாரதிதாசன் பல்கலையில் நடைபெற உள்ள From Common Sense to Hardcore Geoscience என்ற தலைப்பிலான எனது சிறப்பு சொற்பொழிவுக்கு வந்து இவை அனைத்துக்கும் விரிவான பதில் பெற்றுக்கொள்ளலாம். அதுவல்லாது அச்சொற்பொழிவில் இந்தியாவில் கிழக்கு கடற்கரையோரம் மட்டும் நதி சமவெளிகள் இருப்பதேன், காவிரி நதி வடிநிலம் ஏன் இங்கே, இந்த வடிவில் இருக்கிறது, உலகத்தின் முதல் வெள்ளத்தடுப்பு அணை ஏன் காவிரியில் கட்டப்பட்டது, ஏன் காவிரியில் மட்டும் இத்தகைய வெள்ள அபாயங்கள், ஏன் அகண்ட காவிரி அல்லாது அகண்ட கொள்ளிடமும் இருக்கிறது, ஏன் காவிரியில் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட இத்தனை தீவுகள், இதனால் என்ன நன்மை, தீமை? தீமைகளை தடுக்க என்ன செய்வது போன்றவற்றை அறிந்துகொள்ளலாம்)

நதிகள் தமது பாதையை தாமே தேர்ந்தெடுத்துக்கொள்ளக்கூடியவை. தடுக்கப்பட்டால், பாதை மாற்றப்பட்டால் தமது பாதையை நினைவு கொண்டு, மீண்டும் சக்தி பெறும் போது, (உதாரணமாக பெருமழை பெய்யும் போது) தமது பழைய பாதைக்கு திரும்பக்கூடியவை, தமது விருப்பமான பாதைக்கு தம்மைத்தாமே வழிநடத்திக்கொள்ளக்கூடியவை. உதாரணமாக, சில ஆண்டுகளுக்கு முன் பீகாரில் கோசி நதி வெள்ளத்தினால் பலநூறு பேர் இறந்ததும் சில பல கிராமங்கள் அடியோடு அடித்துக்கொண்டு போனதை சொல்லலாம். பலநூறு ஆண்டுகளுக்குமுன் கோசி என்ற கங்கையின் உபநதி ஓடிக்கொண்டிருந்த பகுதி வெள்ளவடிநிலமாகி பின் பிளாட் போடப்பட்டு கிராமம், அர்பன் சென்டர் ஆகிவிட்டது. அப்படி ஒரு நதி இருந்ததையே ரெவின்யு ரெகார்டுகளில் மறந்துவிட்டார்கள். ஆனால் நதி மறக்கவில்லை – சில பல நூறாண்டுக்கு ஒரு முறை வரும் பெருமழைக்கால நேரத்தில் (ஒரு நான்கைந்து வருடங்களுக்குமுன் என்று நினைக்கிறேன்) தனது பழைய பாதையை நினைவுகொண்டு அங்கு திரும்ப ஓட ஆரம்பித்துவிட்டது. இதேபோல இங்கிலாந்திலும் ஒரு பேரழிவு நிகழ்ந்தது அதன் பின்னரே, நூற்றாண்டு வெள்ள சுழல் என்பதை புவியியல் ஆய்வாளர்கள் இங்கிலாந்து அரசுக்கு சொன்னபின் அரசுவிழித்துக்கொண்டு, பழங்கால நதி வழிகள், வெள்ள வடிநில பகுதிகளை ஆய்ந்து எங்கெங்கு எந்தவிதமான கட்டுமானங்கள் இருக்கக்கூடாதென தக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நமது காவிரியை எடுத்துக்கொள்ளுங்களேன்:

சற்றேகுறைய ஆறரை கோடி ஆண்டுகள் வரை காவிரியின் முற்கால போக்கு அரியலூர் பகுதியிலிருந்தது. தற்கால பெரம்பலூர் தான் கடற்கரையாக இருந்தது, கீழ பழுவூர் கடலால் சூழப்பட்ட தீவாகவும், திரு பட்டூர் தற்கால குறுகலான வளைகுடாவாகவும் டால்மியாபுரம் பவளப்பாறை திட்டாகவும், காரை பகுதி தற்கால அரேபிய பகுதி போலவும் இருந்தது. இந்திய கண்டம் ஆசிய கண்டத்துடன் மோதி, பின் இமயமலை உருவாகி வரும் காலத்தில் டெக்டானிக், பருவநிலை மாற்றங்களினால் காவிரி சுமார் ஐந்தரை கோடி வருடங்களாக கடிகார பெண்டுலம் போல திருச்சியிலிருந்து தென் கிழக்காகவும், கிழக்காகவும் சற்றே வடகிழக்காகவும் மாறி மாறி ஓடிக்கொண்டுள்ளது. ஒவ்வொருமுறையும் தனது பாதையை தன்னில் வரும் வெள்ளநீரின் வேகம், அளவு ஆகியவற்றை பொறுத்து நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

பருவகாலங்கள் ஆண்டுக்குள் மூன்று மாதத்திற்கொருமுறை மாறுவது ஒரு ஆண்டு சுழல். அதுபோல், ஏழு, பத்து, முப்பது, நூறு வருடங்கள், இப்படியே சென்று 8 கோடி வருடம் வரை ஒரு பெரிய சுழலாக திரும்ப திரும்ப நிகழ்வதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. அப்படியென்றால், நிகழும் புவியியல் சூழல், பருவகால மாற்றம், சரிவு, புவிபுறப்பரப்பியல் தன்மை, வெள்ளக்கால அளவு, வெள்ளத்தின் வேகம் மற்றும் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் நதி தனது போக்கை, முற்கால போக்குகளின் ஞாபகம் கொண்டு மாற்றிக்கொள்ளும். மனிதர்களுக்கு மறக்கும், நதி மறப்பதில்லை. இதை மறந்தால், மனிதன் வாழ்ந்த தடத்தை மறக்கவேண்டியது தான். இதை தான், ஒவ்வொரு மழைக்கால வெள்ளத்தின்போதும் நதிகள் நமக்கு ஞாபகப்படுத்துகின்றன. கல்வெட்டுகளிலும், அரசாங்க பதிவேடுகளில் நமது காவிரியில் வெள்ளம் வந்து திருச்சி பகுதியை சீரழித்ததை நாம் அறிவோமா?

1198, 1257, 1924, 1952, 1954, 1965, 1977, 1979, 1983, 1999, 2000 and in 2005, ஆகிய வருடங்களில் வந்த வெள்ளம், அதனாலுண்டான பாதிப்பு ஆகியவற்றை ஞாபகம் வைத்துள்ள நமக்கு, வெள்ளம் உடைப்படுத்த இடங்கள் பலநூற்றாண்டுகளாக மாறவே இல்லை என்பது தெரியுமா. உதாரணமாக காவிரியில் மேலூர் கரை, ஆமூர் பகுதி, கொள்ளிடத்தில் சில குறிப்பிட்ட பகுதிகருகில், சரித்திரகாலத்திலிருந்தே உடைப்பெடுத்துள்ளன. வேறெங்கும் இல்லை. இவை செயற்கைகோள் படங்களின் மூலமும் செயறகைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள ரேடார் கருவி மூலமும் தெரிய வந்துள்ளன. – நாம் மறந்துவிட்டோம், நதி மறக்கவில்லை.

History is replete with repetition; History never forgives those who forgets it. இது வரலாறுக்கு மட்டுமல்ல நதி புவியியலுக்கும் பொருந்தும். இதனை நாம் மறப்பதால் தான் தமது இயல்பை அவ்வப்போது நதி வெள்ளங்களும் அதனால் ஏற்படும் உயிர்சேதம் உள்ளிட்ட பாதிப்புகளும் ஞாபகப்படுத்துகின்றன.

நதிகளை இணைக்கலாமா?

கங்கையில் வெள்ளம் வரும்போது தென்பகுதியில் பஞ்சம் நிலவுவதை தடுக்க கங்கை-காவிரி இணைப்பு தான் தீர்வு
கிட்டத்தட்ட 60 % வெள்ளநீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்க கங்கை-காவிரி இணைப்பு தான் தீர்வு
நதி நீர் இணைப்பு தான் வெள்ள அபாயத்தை தீர்ப்பதற்கான தீர்வு
இதற்கான பதிலாக ஏகப்பட்டது சொல்ல வேண்டிவரும், குறைவாக சொல்ல முயற்சிக்கிறேன்.

சுருக்கமான பதில் – இல்லை, இது தீர்வல்ல, சரியாக சொல்லவேண்டுமானால் முட்டாள்தனமானது. பணக்காரனிடம் (கங்கை) கொள்ளையடித்து ஏழையிடம் (காவிரி) கொடுப்பது எவ்வளளவு தவறோ அதைவிட தவறு.

1 நதி நீர் என்பது ஒரு பண்டம் (commodity) அல்ல. அது ஒரு ஊக்கி (catalyst), சப்ளையர், உயிர்மை, ட்ரான்ஸ்போர்ட்டர், எல்லாவற்றுக்கும் மேலாக அது ஒரு வாழிடம், உணவு, எக்கோஸிஸ்டெம் கூட. இந்த மழைக்காடுகளிலிருந்து உருவாகும் நதிகளுக்கும், பனி ஆறுகளில் இருந்து உருவாகும் நதிகளுக்கும், பனி ஆறுகள், பருவமழை ஆகிய இராண்டிலிருந்தும் நீரை பெறும் ஆறுகளும் தத்தமளவில், உருவில், குணத்தில், புவிபரப்பியலில், சூழலியலில், தம்மை சார்ந்திருக்கும் எக்கோஸிஸ்டெம், அதில் வாழும் பாக்டீரியா முதல் பாலூட்டிகள் வரை, ஒருசெல் தாவரத்தில் இருந்து நூறாண்டுகள் வாழும் தாரு மரங்கள் வரை அனைத்துக்கும் ஒரு தனித்துவத்தை தந்து போஷிக்கின்றன. நதிநீர் இணைப்பு என்பது அனைத்தையும் ஓர்மை படுத்துவது. ரொம்ப ஈஸியா புரியிற மாதிரி சொல்வதானால், நாயும் மனிதனும், குரங்கும், புலியும் பாலூட்டிகள் தானே, அனைத்துக்கும் இனவேறுபாடு இல்லாமல் திருமணம் செய்து வைப்பது போல. கேக்கவே கேவலமா இருக்குல்ல. அதுதான் கங்கை நீரை காவிரியோடு இணைப்பது. உனக்கு தான் கல்யாண வயசாயிடுச்சே ஹீட்-ல் உள்ள புலியுடன் இணை சேர் என்றால் யாராவது ஒப்புக்கொள்வார்களா ? நதிநீர் போராளி சித்தப்பு எல்லாம் யோசிங்க.
2. நமது இந்திய துணைக்கண்டம் பல்வேறு பருவப்பகுதிகளாலானது (climataic zones). ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொருவிதமான உயிரிகளை போஷிக்கிறது. இன்னொருவிதமாக சொல்வதானால் ஒவ்வொரு பகுதிக்கும் தக்கவகையிலான உயிரிகள் அப்பகுதிகளில் இருக்கின்றன. உதாரணமாக சொல்வதானால் கஜிரங்கா பகுதியில் காண்டாமிருகங்களும் நீர் எருமைகளும் வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட தாவரவகைகளேய நம்பியிருக்கின்றன. வெள்ளம் வருகுதே, அதை மடை மாற்றி காய்ந்துபோன பஞ்சபகுதிக்கு அனுப்புவோமானால் இருபகுதி பிரச்னையும் தீருமே என்றால் அது நுனிப்புல் மேய்தல்- அடிப்படையே தவறு.
3. நீர்ப்பிடிப்பு பகுதியிலிருந்து கடலில் கலக்கும் பகுதிவரை ஒவ்வொரு நதி சமவெளி, பள்ளத்தாக்கு பகுதிகளும் அந்நதியின் தனித்துவ நீர் அளவு, நீர் வேதியிய குணம், பௌதிக காரணிகள் ஆகியவற்றுக்கு ஒத்திசைந்து வாழும் உயிரிகளையே பெற்றுள்ளன. இந்நிலையில் ஒரு நதிநீரை, தடுத்தால் (வெள்ளம் உட்பட), அதன் கீழ் பகுதியில் உள்ள அனைத்து உயிரிகளும், புவியியல் காரணிகளும், புவிபரப்பியல் குணங்களும் பாதிக்கப்படும், கடல் உட்பட. இதனை எப்படி எதிர்கொள்வது ? யார் எதிர் கொள்வது ? எக்கோஸிஸ்டெம் சமநிலையை எப்படி பராமரிப்பது இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் நதி நீர் இணைப்பு என்றால் அது வெற்று கூச்சல்.
4 உலகில் மனிதன் தோன்றுமுன் அனைத்து உயிர்களும் சமமாக இருந்தன. மனிதன் சிந்தியக்க துவங்கியதில் இருந்து மனிதனுக்காகவே அனைத்தும் என்ற அடிப்படையில் செயல் படுகின்றான். இது உயிரி சமத்துவ கோட்பாட்டுக்கு எதிரானது. இது அழிவில் தான் முடியும். அழிவு என்றால், உயிர்களின் அழிவு, – அனைத்து உயிர்களின் அழிவு – பேரழிவு. உயிரிகள் உலகில் தோன்றியதில் இருந்து இதுவரை ஆறு பேரழிவுகளும் சுமார் முப்பது சிறிய அழிவுகளும் நிகழ்ந்துள்ளன. அனைத்தையும் நிகழ்த்தியது இயற்கை. ஆனால் உயிரி அழிவுக்கு ஒரு இனம், (அந்த இனம் உட்பட) காரணமாக ஆகும் என்றால், அது மனித இனமே.
5. நதிநீர் இணைப்பு சில நாடுகளில் செயல்படுத்த பட்டுள்ளதே, அண்டை மாநிலத்தில் செயல் படுத்தப்பட்டுள்ளதே என்பவருக்கு சில தகவல்கள். ஒரே பருவப்பகுதியில் உள்ள நதி இணைப்பு என்பது குறைந்த பட்ச பாதிப்பையே ஏற்படுத்தக்கூடியது. இணைப்பிற்குமுன், குறைந்தபட்ச ecological flow என்ற அளவு முதலில் நிர்ணயிக்கப்படும். அதன் பின்னரே, அந்த அளவுக்கு மேல் வரும் நீர் வெளியேற்றப்படும். இப்படி செய்தலும், ஒரு பகுதியில் இருக்கும் உயிரி மற்றோர் பகுதிக்கு சென்று அங்குள்ள native species – ஐ பாதிக்கும், பனாமா கால்வாய் தோண்டியதால் ஏற்பட்ட ecological disaster குறித்து google செய்து பார்க்கவும் – மனசாட்சியிருந்தால் நதிநீர் இணைப்பு என்று யாரும் பேசவே மாட்டார்கள்.
6. உதாரணமாக தார்பாலைவனம் இருப்பதால் தான் மேற்கு கடற்கரையில் காற்று மேல் எழும்புகிறது. இமயமலையில் பனியாறு இருப்பதால் தான் மேல் எழும்பும் காற்று குளிர்ந்து கீழே மழைபொழிவை தருகிறது, மழைப்பொழிவும் பனி ஆறிலிருந்து நீரும் சேர்ந்து பல நதிகளாகவும் நதிநீரில் வண்டலும் வெள்ளப்பெருக்கும் சேர்ந்து சுந்தரவதன காடுகளை உண்டாக்குகின்றன. சுந்தரவதன காடுகளே பெங்கால் புலிகள், கரியல் முதலைகள், சதுப்புநில மான்கள், அலையாத்திமரங்கள், அதில் வரும் பூக்களை சார்ந்து தேனீக்கள் தேனீக்களை சார்ந்து பல்வகை மரங்களின் மகரந்த சேர்க்கை — இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவை அனைத்தையும் உள்ளடக்கிய ஆய்வு நடத்தாமல், அதன் அடிப்படையில் எவ்வளவு, எந்த பருவ காலத்தில், எத்தகைய நீரை, எந்த பகுதியில் இருந்து, எந்த பகுதிக்கு, எப்படி மடை திருப்புவது அதை நீர் பெறும் பகுதியில் எதற்காக, எந்த சூழ் நிலையில், எப்படி பயன் படுத்துவது என்று திட்டமிடாமல் செயல் படுத்தினால், இந்த நாடும் நாட்டு மக்களும் மட்டுமல்ல, புல் பூண்டும், மண்ணும், நீரும், காற்றும் நாசமாய் போகட்டும்.
7. இப்பூவுலகில் அனைத்தும் ஒத்திசைந்து இயங்கும் தன்மையுடையவை கடல், ஆறு, நிலம், ஆகாயம், உயிரிகள் அனைத்தும் தம்மை தாமே ஓர் ஒழுங்குடன் இயங்கும் வரை பேரழிவுகள் நிகழா. ஏதோ ஓரிடத்தில் மனிதன் மாற்றினால் nature reacts, often catastrophically, to which no amount of human efforts will match, leave alone tackling it The history is replete with too many examples for this.
எப்படி 17 ம் நூற்றாண்டில் கோதாவரி நதியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மரங்களை சாய்த்ததாலும், ஏனம் பகுதி, காக்கிநாடா பகுதியில் போர்த்துகீசியர்கள் குடியேறி இயற்கை நிலப்பரப்பை மாற்றியதால் திடீரெனெ கடலுக்குள் பல கிலோமீட்டர் நீள தீவு உருவாகியது, கோதாவரி நதியின் போக்கு மாறியது என்று விவரிக்கும் கட்டுரை.

இந்த ஆய்வுக்கு சென்றபோது, 1972 ல் வரையப்பட்ட வரைபடத்திலிருந்த மல்லவாணி சின்னலங்கா என்ற ஊரை 1998 ல் தேடி சென்றபோது, அது கடலுக்குள் 30 அடி ஆழத்தில் இருப்பது தெரிய வந்தது.

https://www.researchgate.net/…/260036411_Progradation_of_th…

நமது காவிரி எத்தனை கோடி வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது, அதில் வெள்ளம் என்பது தன்னை சமநிலைப்படுத்திக்கொள்வது என்பது விவரிக்கப்பட்ட கட்டுரை
https://www.researchgate.net/…/260025407_Facies_and_Textura…

வெள்ளங்கள் என்பது ஏன் ஏற்படுகின்றன ஏன் அவை அத்தியாவசியம் என்பதை விவரிக்கும் கட்டுரை
https://www.researchgate.net/…/260025903_Flooding_-_A_manag…

நமது காவிரியின் தற்கால நிலை, அதில் தீவுகள் எப்படி ஏற்படுகின்றன, அவற்றின் நன்மை தீமைகள் என்னென்ன என்பது விவரிக்கப்பட்டுள்ள கட்டுரை
https://www.researchgate.net/…/282614463_Sand_Mining_Channe…

இந்திய தீபகர்ப்பதில் ஏன் கிழக்கு கடற்கரையில் மட்டும் நதி சமவெளிகள் உள்ளன, ஏன் மேற்கு கடற்கரைக்கு சில கிலோமீட்டர் தூரத்திலேயே உருவாகும் நதிகள், மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து பல நூறு கி மீ பயணித்து கிழக்கு கடற்கரையில் கடலில் கலக்கின்றன என்பதை விளக்கும் கட்டுரை

ஆய்வுக் கட்டுரை: மு. ராம்குமார்