Home கட்டுரைகள் திருட்டுத்தனமாய் படம் எடுப்பவன் ஒருவன்..! பலிகடா அர்ச்சகரா?

திருட்டுத்தனமாய் படம் எடுப்பவன் ஒருவன்..! பலிகடா அர்ச்சகரா?

ராமேஸ்வரம் கோவில் கருவறை மூலவர் படம் வெளியான பிரச்னையில் கோயில் தலைமை அர்ச்சகர் விஜயகுமார் போகில் பணியிடை நீக்கம் செய்யப் பட்டிருக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக கோவில் இணை ஆணையர் கல்யாணி விசாரணை நடத்தியதில், புகைப்படம் கோவில் கருவறையில் எடுக்கப் பட்டது உறுதியானது. அதே நேரம் இதில் தனக்கு தொடர்பில்லை என்று அவர் கூறியுள்ளார். ஆயினும் அர்ச்சகர் விஜயகுமார் போகில் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோவிலில் பணி புரிந்து வருபவர் இந்த அர்ச்சகர். இது போல் எத்தனையோ அர்ச்சகர்கள், தங்களது முழு நேரத்தையும் இறைவன் பணிக்காக செலவிட்டு, மிகவும் எச்சரிக்கையாகத்தான் இருக்கிறார்கள். ஆனாலும் இவர்களில் பலர் பல நேரங்களில் இது போன்று சர்ச்சை ஆக்கப்பட்டு, பழி தீர்க்கப் படுகிறார்கள்.

பொதுவாக, எந்த ஆலயத்தின் அர்ச்சகருக்கும் தான் பூஜை செய்யும் மூலவர் விக்ரஹம் புகைப்படம் எடுக்கப்பட்டு வெளியில் பரப்பப் படுவதிலோ, பத்திரிகைகளில் பிரசுரம் செய்யப் படுவதிலோ விருப்பம் இருப்பதில்லை. உத்ஸவர் விக்ரகங்களுக்கு தாங்கள் செய்யும் அலங்காரங்களுடன் கோயில் சந்நிதியை விட்டு வெளியில் வரும்போது அதை புகைப்படம் எடுத்து பிரசுரிப்பதிலோ வெளியில் சுற்றுக்கு விடுவதிலோ பெரும் ஆர்வம் இருக்கும்.

அர்ச்சகர் எவருமே தமது பூஜை தெய்வ விக்ரகத்தை வெறும் விக்ரகமாகப் பார்ப்பதில்லை. பெரும்பாலானவர்களும் அதனைத் தம் குழந்தையாகவோ, தம் சுவாமியாகவோ பாவித்து பார்த்துப் பார்த்து, ரசித்து அலங்காரம் செய்து மகிழ்வார்கள். அதனை ஊராருக்கும் வெளிக்காட்டி, அவர்களுடன் சேர்ந்து ரசித்தும் பார்த்தும் மகிழ்வது அர்ச்சகரின் மனோபாவம்.

அதே நேரம், மூலவர் திருமேனிகள் கோயிலுக்குள் இருப்பதால், அதனை எவருமே அந்த சந்நிதிக்கு வந்து தரிசிப்பதில்தான் அர்ச்சகரின் முழு விருப்பமும் கவனமும் இருக்கும். மூலவர் திருமேனி புகைப்படம் எடுக்கப் படக் கூடாது என்பது ஆகம விதி என கூறிக் கொண்டாலும், மூலவர் திருமேனி படங்கள் பொதுவெளியில் பகிரப் பட்டால், பின்னாளில் அந்த ஆலயத்துக்கு வந்து தரிசிப்பவர் குறைந்து போவர் என்பதும், அதனால் தங்கள் ஆலயத்துக்கு பக்தர்களை வரவைப்பது கடினமாகிவிடும் என்பதும் சாதாரண அர்ச்சகருக்கே மனத்தில் தோன்றும் எண்ணம்தான்!

எனவேதான் மூலவர் திருமேனி படங்களை எவருமே எடுக்க அனுமதிப்பதில்லை. அவர்களும் எடுப்பதில்லை

ஆனால், தற்போது பல புராதன திவ்யதேசம், அபிமான மற்றும் பாடல் பெற்ற திருக்கோவில்களில் ஆகம விதிகளை மீறி இது போன்ற மூலவர் புகைப்படங்கள் வெளிவருவதாக அங்கலாய்க்கின்றனர் பலர். அதற்குக் காரணம், அனைவர் கையிலும் இருக்கும் செல்போன்கள்தான்!

தனிப்பட்ட வகையில், நான் பல ஆலயங்களுக்கு சென்றிருக்கிறேன். தரிசிப்பதற்காகவும், கட்டுரைகள் எழுதுவதற்காகவும்!

கடந்த காலத்தில், சக்தி விகடன், தினமணி வெள்ளிமணி, தீபம் என ஆன்மிக இதழ்களில் பல்வேறு ஆலயங்கள் குறித்த கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அப்போதெல்லாம் ஆலய அர்ச்சகர்கள் சிலர் சொல்லும் வேண்டுகோள்களையும் செவிமடுத்திருக்கிறேன். பல்வேறு புகார்களையும் கேட்டிருக்கிறேன்.

பொதுவாக, அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் அர்ச்சகர்களுக்கும் சுமுகமான பழக்க வழக்கம் இருப்பதில்லை. கோவில் செயல் அதிகாரிகள் சொல்லும் ஆகம மீறல் கட்டளைகளை அர்ச்சகர்கள் ஏற்பதில்லை. மல்லுக்கு நிற்பார்கள்.

அறநிலையத்துறை பணிக்கு வந்துவிட்ட நாத்திக, திராவிட கம்யூனிஸ கிறிப்டோ கிறிஸ்துவ அதிகாரிகள், பணம் பார்ப்பதிலேயே குறியாக இருப்பார்கள். அர்ச்சகர்களை கிள்ளுக்கீரையாக நினைத்து, தங்களது கட்டளைகளுக்கு அடிபணிய வைக்கிறார்கள்.

பல கோயில்களில், தவறுகளைத் தாங்கள் செய்துவிட்டு, அர்ச்சகர்கள் மீது பழியைப் போடுவதில் கில்லாடிகளாக இருக்கிறார்கள். ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல், உலகத்துக்கு அப்பிராணியாக இருக்கும் அர்ச்சகர் மீது பழியைச் சுமத்துவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள் மேற்சொன்ன வகையறாக்களான ஈ.ஓ.,க்கள்!

ஒரு சந்நிதியில் ஓர் அர்ச்சகர்தான் இருந்தாக வேண்டிய நிலை. கோயில்களோ பிரமாண்டமானவை. அவர் மடப்பள்ளிக்கும், பூஜை சாதனங்களை எடுப்பதற்கும் அங்கே இங்கே நகரும் போது, இடைப்பட்ட நேரத்தில் கோயில் ஈ.ஓ.க்களே இதுபோல் திருட்டுத்தனங்களைச் செய்து, அல்லது வேறு நபர்கள் மூலம் செய்ய வைத்து, அர்ச்சகரை ப்ளாக்மெயில் செய்வது பல்வேறு இடங்களிலும் நடக்கத்தான் செய்கிறது.

கோயில்களில் பெரும்பாலும் கேமராக்களை வைத்திருக்கிறார்கள். சிசிடிவி கேமரா மூலம் யாரெல்லாம் செல்போன்களை எடுத்து படம் பிடிக்கிறார்கள் என்பது ஈ.ஓ.க்களுக்கு தெரியும். அலுவலகத்தில் சிசிடிவி திரை பார்த்து செல்போன் பயன்படுத்துபவர்களை தடுப்பது கூட ஈ.வோ.க்களால் முடியும் எனும்போது, அர்ச்சகரை பலிகடா ஆக்குவது, கோயில் அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது.

ராமேஸ்வரம் கோயில் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அர்ச்சகர் தன்னுடைய செல்போனில் இருந்து படம் எடுத்து வெளியே பகிரவில்லை! யாரோ படம் எடுத்து வாட்ஸ்அப்பில் ஷேர் செய்துள்ளனர் என்று கூறியிருக்கிறார். ஆனாலும் அவர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

ராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி திருக்கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அறநிலையத்துறை வசம் இருக்கும் பல கோயில்களின் மூலவர் படங்களை அரசின் அறநிலையத்துறை இணையதளத்திலேயே வெளியிட்டிருக்கிறார்கள். தற்போது செய்தி இணையதளங்கள் உள்பட பல்வேறு இணையதளங்களில் பல கோயில்களின் மூலவர் புகைப்படங்கள் சர்வ சாதாரணமாக பதியப் பட்டுள்ளன.

எனவே செல்போனில் திருட்டுத்தனமாய் படம் எடுத்து, ஆர்வக் கோளாறு காரணமாக அதை வெளியிடும் பலர் இருக்கிறார்கள். பக்தர்கள் மூலவரை படம் எடுக்க கூடாது என தெரிந்தும் ஆர்வக் கோளாறு காரணமாக அதைச் செய்வது அர்ச்சகருக்கே கடைசியில் வேட்டு வைக்கிறது என்பதை பக்தர்கள் உணரவேண்டும்.

அதே நேரம், கோயில்களை அழிக்க என்றே களம் இறங்கியிருக்கும் நாத்திக, கம்யூனிஸ, கிறிப்டோ கிறிஸ்துவர்கள், கோயில்களின் அர்ச்சகர்களை ஒழித்துவிட்டால் கோயில்களை அழித்துவிடலாம் என்ற திட்டமிட்ட சதியை இவ்வாறு குறிவைத்து அரங்கேற்றுவதை பக்தர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நாத்திகருக்கு கோயிலில் என்ன வேலை? கருவறை நுழைவுப் போராட்டம் நடத்துவதாக புகழ்பெற்ற கோயில்களை அரசியல் ரீதியில் அணுகும் திராவிடர் கழகங்களின் சதிவேலைகளுக்கு ராமேஸ்வரம் கோயில் இணை ஆணையர் போன்றவர்கள் துணை போகிறார்கள் என்பதால், பக்தர்கள் குழுக்களே இது போன்ற இணை ஆணையர்களை கோயிலில் நடு மண்டபத்தில் அமர வைத்து, கேள்வி எழுப்பி விசாரணை செய்ய வேண்டும். அவர்களை நிச்சயமாக அற நிலையத்துறை ஆணையர் விசாரிக்க மாட்டார். அப்படியே விசாரித்தாலும், அதில், கள்ளனுக்கு கள்ளன் கைகோப்பான் என்ற கதையே மிஞ்சும்!

கோயில்களுக்கு உரிமையாளர்கள் பக்தர்கள்தானே ஒழிய, அறநிலையத்துறையோ, அரசோ அல்ல! ராமேஸ்வரம் கோயில் விவகாரம், பக்தர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி!

  • செங்கோட்டை ஸ்ரீராம்

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version