October 18, 2021, 4:46 pm
More

  ARTICLE - SECTIONS

  வழிகாட்டும் கைவிளக்கு! (மகா பெரியவா 25வது ஸித்தி தினம்)

  *பரமாச்சாரியார் பலப்பல நியாயங்களையும் தர்மங்களையும் ஓயாமல் மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்கள் எப்படியெல்லாம் வாழவேண்டும் என்பதை வற்புறுத்தி மக்களை ஈர்த்தவர். தம் மிக எளிய வாழ்க்கை முறை மூலம் மக்களுக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கியவர்.

  kanchi swami - 1

  1994 ஜனவரி 8 ஆம் தேதியன்று மதியம் 2.58 மணிக்கு மகாசுவாமிகக்ள் ஸித்தி அடைந்தார். இன்று அவரது 25ஆவது ஸித்தி தினம்.

  *பரமாச்சாரியார் பலப்பல நியாயங்களையும் தர்மங்களையும் ஓயாமல் மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்கள் எப்படியெல்லாம் வாழவேண்டும் என்பதை வற்புறுத்தி மக்களை ஈர்த்தவர். தம் மிக எளிய வாழ்க்கை முறை மூலம் மக்களுக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கியவர்.

  பக்தர்கள் சிலர் பரமாச்சாரியார் அருளால் தங்கள் வாழ்வில் சில அற்புதங்கள் நிகழ்ந்ததாகச் சொல்வதுண்டு. ஆனால் அந்த அற்புதங்களைத் தாம் நிகழ்த்தியதாகப் பரமாச்சாரியார் ஒருபோதும் சொன்னதில்லை.

  அத்தகைய அற்புதங்கள் உண்மையில் பரமாச்சாரியாரால் நிகழ்த்தப் பட்டவையா, இல்லை தற்செயலா, அல்லது பரமாச்சாரியார் நிகழ்த்தாமல் அவர்மேல் அடியவர்கள் கொண்ட பக்தி அவற்றை நிகழ்த்தியதா என்பதெல்லாம் இன்றுவரை பூடகம் தான்.

  எவ்விதமானாலும் பரமாச்சாரியார், அற்புதங்கள் நிகழும் என்ற எதிர்பார்ப்பில் பக்தி செய்யாமல் தூய வாழ்க்கை வாழ்வதே உயர்ந்த ஆன்மிக நெறி என்பதையே தம் பேச்சாலும் வாழ்வாலும் புலப்படுத்தியிருக்கிறார். `மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்` என்ற வள்ளுவர் வாசகமே பரமாச்சாரியாரின் வாழ்வியல் நெறியாக இருந்திருக்கிறது.

  எளிமையையே தங்கள் வாழ்வின் கோட்பாடாகக் கொண்டிருந்தவர்கள் என்று நம் பாரததேசத்தில் அண்மைக் காலத்தில் வாழ்ந்த இருவரைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். ஒருவர் மகாத்மா காந்தி. இன்னொருவர் பரமாச்சாரியார்.

  எதிலும் ஆடம்பரத்தையும் பகட்டையும் துறந்து வாழும் போக்கு இயல்பாகவே பரமாச்சாரியாரிடம் படிந்திருந்தது. பெரும்பாலும் தென்னங்கீற்று வேயப்பட்ட குடில்களில் தான் அவர் தங்கினார். பாரத தேசம் முழுவதும் கால்நடையாகவே தான் நடந்து வலம்வந்தார்….

  kanchi mahaperiyava - 2

  *அவர் மேல் காந்திக்கும் காந்தி மேல் அவருக்கும் பரஸ்பர அன்பும் மதிப்பும் இருந்தன. மகாத்மா காந்தி தென்னிந்தியாவில் பயணம் செய்த தருணம். கேரளத்தில் பரமாச்சாரியார் முகாமிட்டிருந்த காலகட்டம். 1927 அக்டோபர் 15ஆம் தேதி மகாத்மா பரமாச்சாரியாரை பாலக்காட்டின் அருகே இருந்த நெல்லிசேரி கிராமத்தில் சந்தித்தார்.

  ஒரு மணிநேரத்திற்கும் மேல் அந்தச் சந்திப்பு நீடித்தது. அந்தச் சந்திப்பில் காந்தி பரமாச்சாரியாரிடம் என்ன பேசினார் என்ற விவரம் எதுவும் அப்போது வெளிப்படவில்லை.

  ஆண்டுகள் பல கடந்தன. காந்தி 1948இல் சுட்டுக் கொல்லப்பட்டார். வெகு காலத்திற்குப் பிறகு 1968இல் சென்னைப் பல்கலைக் கழகம் `காந்தியச் சிந்தனைகளின் இன்றைய தேவை` என்பது குறித்து கருத்தரங்கம் நடத்தி ஒரு மலரும் வெளியிட்டது. மலருக்காக பரமாச்சாரியாரிடம் ஒரு வாழ்த்துச் செய்திபெறப்பட்டது.

  அதில், `தன்னை யாரேனும் கொல்ல முயன்றாலும் தன்னைக் கொல்பவர் மீதும் அன்பு செலுத்தும் மனம் தனக்கு அமையவே தான் பிரார்த்திப்பதாக` மகாத்மா தன்னிடம் கூறியதாய்ப் பரமாச்சாரியார் குறிப்பிட்டிருந்தார்…..

  *தம் சம காலத்தில் வாழ்ந்த உயர்நிலைத் துறவியர்மேல் பரமாச்சாரியார் பெரும் மதிப்பு வைத்திருந்தார். பால்பிரண்டன் என்ற வெளிதேச அன்பர், கா.சி.வெங்கடரமணி என்கிற தமிழ் எழுத்தாளரின் உதவிமூலம் பரமாச்சாரியாரை தரிசிக்க வந்தார்.

  மிகுந்த ஆன்மிக நாட்டம் உடைய அந்த வெளிதேசத்தவர், மந்திர உபதேசம் வேண்டியபோது, பரமாச்சாரியார் தாம் மடாதிபதி என்பதால் வெளிதேசத்தவருக்கு உபதேசம் செய்ய மடத்து விதிகள் அனுமதிக்காது என்றும் எந்த மடத்தையும் சாராத சுதந்திரத் துறவியான ஸ்ரீரமணரிடம் செல்லுமாறும் அவரை நெறிப்படுத்தினார். அவரும் ரமண தரிசனம் பெற்ற பின்னரே வெளிதேசம் சென்றார்.

  அதுபோலவே ராம்சுரத் குமாரின் ராம பக்தி பற்றி அறிந்த பரமாச்சாரியார் அவரைச் சந்திக்க விரும்பி அழைத்துவரச் சொன்னார். அவர் வந்ததும் இருவரும் நீண்டநேரம் மெளன மொழியில் ஏதோ பேசிக் கொண்டார்கள். பின் ராம்சுரத்குமார்ஜியை திருவண்ணாமலைக்குத் திரும்ப அனுப்பிவிட்டார்.

  தாம் ராம பக்தராக இருப்பதால் ஏற்கெனவே இருபத்து நான்கு மணிநேரமும் ராம நாமம் ஒலிக்கும் கோவிந்தபுரத்திற்குத் தாம் ஏன் செல்லக்கூடாது எனப் பரமாச்சாரியார் கேட்டதாகவும் தாம் திருவண்ணாமலையை விட்டுச் செல்ல விரும்பவில்லை என்று சொன்னதும் நல்லது என்று சொல்லித் திருவண்ணாமலையிலேயே தம்மை இருக்குமாறு அவர் கூறியதாகவும் ராம்சுரத்குமார்ஜி பின்னர் தெரிவித்தார்.

  kanchi periyava - 3

  *சுவாமிகள் எந்த மதத்தையும் வெறுக்கவில்லை. எல்லா மதத்தினரோடும் இணக்கமாக வாழவேண்டும் என்ற கோட்பாட்டையே தம் வாழ்வாலும் பேச்சாலும் வற்புறுத்தினார். அவரை கிறிஸ்தவர்களும் முகமதியர்களும் கூட மதித்தார்கள்.

  காஞ்சி மடத்தின் அருகேயிருந்த மசூதியிலிருந்து மாலை நேரத்தில் ஒலிபெருக்கி மூலம் கேட்கும் முகமதியப் பிரார்த்தனை ஒலியைக் குறைக்கச் சொல்லவா எனக் கேட்டபோது, அது தனக்கு இறைவனை வழிபடும் நேரத்தை நினைவுறுத்துவதாகவும் அது அவ்விதமே ஒலிக்கட்டும் எனவும் அவர் கூறிவிட்டார்.

  எல்லா மதத்தினரும் மற்ற மதத்தினரிடம் பகைமை பாராட்டாமல் அவரவர் மத நெறிப்படி வாழவேண்டும் என்பதே பரமாச்சாரியாரின் கருத்தாக இருந்தது. நீதிபதி மு.மு. இஸ்மாயீல் போன்ற புகழ்பெற்ற தமிழ் அறிஞர்கள் அவர் மேல் அளவற்ற மதிப்பு வைத்திருந்தார்கள்.

  கவிஞர் கண்ணதாசன் நாத்திகராக இருந்து பின்னர் ஆத்திகராக மாறியவர். அவர் அவ்விதம் ஆத்திகராக மாறுவதற்கும் பின்னர் `அர்த்தமுள்ள இந்துமதம்` என்ற புகழ்பெற்ற நூலை எழுதுவதற்கும் மகாசுவாமிகள் தான் காரணமாக இருந்தார்.

  பொதுவுடைமைவாதியான எழுத்தாளர் ஜெயகாந்தன் `மகாசுவாமிகளின் கண்களில் நான் கடவுளைக் கண்டேன்!` என அவரைப் பார்த்து வியந்து எழுதினார். சிறுகதை, நாவல் வரலாறுகளை நூலாக எழுதிய `சிட்டி சிவபாதசுந்தரம்` இரட்டையரில் ஒருவரான சிட்டி பி.ஜி. சுந்தரராஜன், மகாசுவாமிகளின் பேரன்பராக இருந்ததோடு சுவாமிகளைப் பற்றி ஓர் ஆங்கில நூலும் எழுதியிருக்கிறார்.

  மெரீனா என்ற பெயரில் நாடகங்களும் ஸ்ரீதர் என்ற பெயரில் கார்ட்டூன்களும் படைத்தவரும் அண்மையில் காலமானவருமான ஆன்மிக எழுத்தாளர் பரணீதரன் மகாசுவாமிகளின் தீவிர அடியவர்.

  இசைக் கலைஞர்கள் பலர் மகாசுவாமிகளின் பக்தர்களாக இருந்தனர். அவர்களில் பெரிதும் குறிப்பிடத் தக்கவர் இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி. அவருக்கு ஐக்கிய நாடுகள் சபையில் பாட வாய்ப்புக் கிடைத்தபோது, அதில் பாடுவதற்கென்றே சுவாமிகள் எழுதிக் கொடுத்த `மைத்ரீம் பஜதாம்` என்று தொடங்கும் சம்ஸ்க்ருதப் பாடலை அங்கு பாடினார் அவர். அந்தப் பாடல் உலக சமாதானத்தை வலியுறுத்தி எழுதப்பட்டது.

  பரமாச்சாரியாரின் தமிழ்ப் பற்று பெரிதும் குறிப்பிடத் தக்கது. தமிழ் பக்தி இலக்கியத்தின் பெருமை பற்றி அவர் பலமுறை வியந்து பேசியிருக்கிறார். முக்கியமாக அவர் தமிழ் மூதாட்டி அவ்வையாரைப் பெரிதும் கொண்டாடினார்.

  Kanchi Maha Periyava 1 - 4

  `அவ்வையாரை விடத் தமிழ்நாட்டுக்கு உபகாரம் செய்தவர் இல்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த தேசத்தில் ஒழுக்கமும் பக்தியும் இருந்துவருகிறதென்றால் அது முக்கியமாக அவ்வையாரால் தான் என்று சொல்ல வேண்டும். அவளுடைய அன்பின் விசேஷத்தால் அவளுக்கப்புறம் எத்தனையோ தலைமுறைகள் ஆனபிறகு இப்போதும் நாம் படிக்க ஆரம்பிக்கிற போதே அவளுடைய ஆத்திசூடிதான் முதலில் வருகிறது!` என்பது ஒளவையாரைப் பற்றிப் பரமாச்சாரியார் சொன்ன கருத்து.

  சம்ஸ்க்ருதத்தில் வேதம், உபநிடதம் போன்ற சமய நூல்களில் மட்டுமல்லாது காளிதாசன் போன்ற கவிஞர்கள் எழுதிய சம்ஸ்க்ருத இலக்கியத்திலும் பரமாச்சாரியாருக்குப் பெரும் புலமை இருந்தது.

  நீலகண்ட தீட்சிதரின் சிவலீலார்ணவம் நூல் பற்றி, ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரம் உள்ளிட்ட பல சுலோகங்கள் பற்றி, காளிதாசனின் ரகுவம்சம், சாகுந்தலம் போன்ற காவியங்கள் பற்றியெல்லாம் மேற்கோள் காட்டிப் பலமுறை பேசியிருக்கிறார். அவற்றின் அழகிய இலக்கிய நயங்களை விவரித்து பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்.

  செல்வந்தர்கள், ஏழைகள் என்ற பேதமில்லாது சம நோக்கோடு எல்லோருக்கும் ஆசி வழங்கி வந்தார் மகாசுவாமிகள். அவரின் பெருமைகளில் மிக முக்கியமான பெருமை என்பது இதுவே. அவரைச் சந்திக்க பிரதமர் இந்திரா காந்தி வந்ததுண்டு. மிகச் சராசரி மனிதர்களும் வந்ததுண்டு.

  அவரைப் பொறுத்தவரை எல்லோரும் அவரது ஆசியைப் பெற வந்தவர்கள், அவ்வளவுதான். எல்லோரின் பொருட்டாகவும் அவர் இறைவனைப் பிரார்த்தித்து வந்தார். எல்லோரிடமும் நல்லவர்களாக வாழவேண்டும் என வலியுறுத்தி வந்தார்.

  அவரது ஆன்மிகத்தின் அடிப்படை மனிதாபிமானமாக இருந்தது. பார்வையற்ற மாணவர்கள் தம்மை தரிசிக்க வந்தபோது, அன்று அவர் மெளனம் என்றாலும் மெளனத்தைத் துறந்துவிட்டார். பார்வையற்றவர்களுக்குத் தம் குரல்தானே தரிசனம், அவர்களை மகிழ்விப்பதை விடவும் தனது மெளன விரதம் முக்கியமானதல்ல என்று தம் தரப்புக் கண்ணோட்டத்தைப் பிறகு அவர் விளக்கினார்.

  திருமணங்களில் வரதட்சிணை கொடுக்கும் வழக்கத்தை அவர் கடுமையாக எதிர்த்தார். வரதட்சிணை வாங்கி நடைபெறும் திருமணங்களில் பரமாச்சாரியாரின் அருளாசியோடு என்று ஏன் அச்சிடுகிறீர்கள் எனத் தம் அன்பர்களைக் கடிந்துகொண்டார். பட்டுப் புழுக்களைக் கொன்று நெய்யப்படும் பட்டுத் துணியைக் கட்டக் கூடாது என்பதும் அவரது அறிவுரைகளில் முக்கியமான ஒன்று.

  Kanchi Paramacharya With Kamakshi Amman - 5

  சைவ வைணவ பேதங்களை அவர் ஒருபோதும் பாராட்டியதில்லை. இன்னும் சொல்லப் போனால் தம் பேச்சை முடிக்கும் போதெல்லாம் `நாராயண நாராயண!` என்று திருமால் நாமத்தைச் சொல்லியே நிறைவு செய்வார். ஆண்டாள் அருளிய வைணவக் கவிதை நூலான திருப்பாவையின் புகழைப் பரப்பியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. ஆண்டாளின் பக்தி மயமான வாழ்க்கையின் பெருமையைத் தம் சொற்பொழிவுகளில் அவர் பலமுறை குறிப்பிட்டு ஆண்டாளைப் போற்றியுள்ளார். ….

  *பரமாச்சாரியார் நிகழ்த்திய அற்புதமான சொற்பொழிவுகள் எல்லாம் எழுத்தாக்கப் பட்டுவிட்டன. வியாசர் சொன்ன மகாபாரதத்தை ஒரு கணபதி தந்தத்தை ஒடித்து எழுதி எழுத்தாக்கினார். அதுவே மகாபாரத இதிகாசமாயிற்று. பரமாச்சாரியார் பேசிய சொற்பொழிவுகளையெல்லாம் இன்னொரு கணபதி (ரா. கணபதி) பேனாவை எடுத்து எழுதி எழுத்தாக்கிவிட்டார். அந்த நூல் `தெய்வத்தின் குரல்` எனப் போற்றப்படுகிறது.

  அவரை ஜகத்குரு என்று அன்பர்கள் போற்றியபோது, உலகம் முழுவதற்கும் இவர் எப்படி குருவாக முடியும் என்று சிலர் கேள்வி எழுப்பினார்கள். மகாசுவாமிகள், `உலகத்தை நான் குருவாகக் கொண்டவன், ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொன்றைக் கற்றுக் கொள்கிறேன் என்பதாகவே ஜகத்குரு என்ற சொற்றொடரை நான் புரிந்துகொள்கிறேன்` என அடக்கத்தோடு தெரிவித்தார்.

  ஸ்ரீராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார் என்று வரலாறு சொல்கிறது. அண்மைக் காலத்தில் நூறாண்டு வாழ்ந்த பெருமை பரமாச்சாரியாருக்கு உரியது. தம் வாழ்நாள் முழுவதையும் மக்களை நெறிப்படுத்துவதற்காகவே செலவிட்ட மகான் அவர். இப்போதும் அவர் ஆன்ம ரூபமாக வாழ்ந்து வருகிறார். அவரைப் பற்றிய சிந்தனைகளும் அவரது நூலாக்கப்பட்ட அறிவுரைகளும் இன்றும் மக்களுக்கு வழிகாட்டி, அவர்களை நல்வழிப் படுத்திக் கொண்டிருக்கின்றன.

  • திருப்பூர் கிருஷ்ணன்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,140FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,564FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-