October 19, 2021, 8:09 am
More

  ARTICLE - SECTIONS

  பெண் எழுதிய பிரபலமான ராமாயணம் – ‘மொல்ல ராமாயணம்’!

  இவர் தன் ராமாயணத்தின் முன்னுரையில் தந்தை பெயர் தவிர தன் குடும்பத்தை பற்றி எதுவும் கூறாததால் இவர் பிரம்மச்சாரிணியாகவே வாழ்ந்திருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.

  MollaRamayana - 1

  “கொம்மரி மொல்ல” என்பவர் 1440-1530 ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த பெண் கவிஞர். மொல்ல வாழ்ந்த காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்களிடம் வேறுபட்ட கருத்துக்கள் நிலவினாலும் அவர் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று எண்ணப்படுகிறது.

  வால்மீகி முனிவர் படைத்த சம்ஸ்கிருத ராமாயணத்தைப் பின்பற்றி சுத்தத் தெலுங்கில் எழுதப்பட்ட காவியம் ‘மொல்ல ராமாயணம்’. இதில் ‘கந்த பத்யம்’ என்னும் செய்யுள் வகை அதிகமாக காணப்படுவதால் இதனை ‘கந்த பத்ய ராமாயணம்’ என்றும் அழைப்பர்.

  இவரது முழுப்பெயர் ‘ஆதுகூரி மொல்ல’. இவர் ஆந்திராவின் கடப்பா மாவட்டத்திலுள்ள ‘கோபவரம்’ என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் குயவர் குலத்தில் தோன்றியவராக குறிப்பிடப்படுவதால் ‘கொம்மரி மொல்ல’ என்று அழைக்கப்பட்டாலும் அதற்கு எந்த வித ஆதாரமும் கிடைக்கவில்லை.

  மொல்ல வின் வாழ்க்கை வரலாறு பற்றி நமக்குத் தெரியவருவது சிறிதளவே. புராதன பெண் கவிஞர்களில் மொல்ல வைப் போல் இந்த அளவு இத்தனை புகழ் பெற்றிருக்கும் பெண்கள் வேறெவரும் இல்லை என்றே கூற வேண்டும். மொல்ல, ராமாயணத்தைத் தவிர இன்னும் வேறு நூல்கள் இயற்றினாரா என்றும் தெரியவில்லை.

  mollaramayana1 - 2

  இவர், தான் எழுதிய ராமாயணத்தின் முன்னுரையில் முதல் சில செய்யுட்களில் தன் பெயரை ‘மொல்ல’ என்று குறிப்பிட்டுள்ளார். ‘மல்லி’ என்னும் பெயர் அழைப்புப் பெயராக ‘மொல்ல’ என்று மருவி இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்களிடையே ஒரு கருத்து நிலவுகிறது. தன் தந்தையின் பெயர் ‘கேசவ செட்டி’ என்றும் அவர் சிறந்த சிவ பக்தர் என்றும் குறிப்பிட்டுள்ளார். தான் முறையாக எத்தகைய கல்வியும் கற்கவில்லை என்றும் தன்னுடைய இயல்பான புலமைக்கு இறைவனின் அருளே காரணம் என்றும் கூறியுள்ளார். அவர் எழுதிய ராமாயணத்தை அன்றைய நாட்களில் வாழ்ந்த பிற புலவர்களைப் போல் எந்த அரசருக்கும் அர்ப்பணம் செய்யவில்லை. செல்வமோ புகழோ தேட வில்லை. இது அவருடைய ராம பக்திக்கு எடுத்துக்காட்டு.

  மொல்ல ராமாயணம் ஆறு காண்டங்களில் சுமார் 870 செய்யுட்களோடு கூடியது. இதில் வசனங்களும் அடக்கம்.

  மொல்ல ராமாயணம் தெலுங்கில் எழுதப்பட்ட ராமாயணங்களிலேயே மிக எளிமையான மொழி நடையில் அமைந்த ராமாயணமாகத் திகழ்கிறது. மொல்லவின் எழுத்துநடை சரளமானது மற்றும் ரமணீயமானது.

  முக்கியமாக மக்கள் நடைமுறைப் பேச்சு வழக்கில் பயன்படுத்திய சொற்களாலேயே ராமாயணத்தை எழுதியுள்ளார் மொல்ல. அங்கங்கே சில இடங்களில் மட்டும் சம்ஸ்கிருதத்தை பயன்படுத்தியுள்ளார். ஆனால் அவருக்கு முன் கவி இயற்றிய ‘போத்தனா’ போன்ற தெலுங்கு புலவர்கள் தெலுங்கோடு ஸம்ஸ்க்ருதத்தை மிக அதிகமாக சேர்த்துள்ளார்கள்.

  மொல்ல மிகவும் பணிவு மிக்கவர். தன் நூலில் தனக்கு முன்னர் ராமாயணம் இயற்றிய கவிஞர்களுக்கு புகழ்மாலை சூட்டியுள்ளார். தான் படிப்பறிவில்லாதவர் என்று பணிவுடன் கூறிக் கொண்டாலும் அவருடைய நூலில் காணப்படும் சமத்காரம், திறமை, புலமை, சொற்களைக் கையாளும் லாகவம், தனக்கு முந்தைய கவிஞர்களின் நூல்களின் மொழி பற்றி அவர் கூறும் வியாக்கியானங்கள் இவற்றை எல்லாம் பார்க்கையில் அவர் விஸ்தாரமாக காவியங்கள், பிரபந்தங்கள் படித்திருக்க வேண்டுமென்று தெரிகிறது.

  mollaramayana2 - 3

  முதல் செய்யுளில் கூறுகிறார், “ராமாயணம் பல முறை பலரால் இயற்றப்பட்டுள்ளது. முன்பே உணவு அருந்தி விட்டோம் என்பதற்காக யாராவது சாப்பிடுவதை நிறுத்துவார்களா? அதே போல் ராமாயணமும் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம், படிக்கலாம், விரும்பி அனுபவிக்கலாம்”.

  மேலும் அவர், “நூல் வாசிப்பவர் உடனடியாக புரிந்து கொள்ள இயலாத சொற்களைக் கொண்டிருந்தால் அது காது கேளாதவரும் வாய் பேசாதவரும் நடத்தும் உரையாடலைப் போல் இருக்கும்” என்று ஹாஸ்யமாக கண்டித்துள்ளார். மேலும் அவர், “கவிதை அல்லது செய்யுள் என்பது நிகண்டுவைத் தேடியோ அல்லது அறிஞர்களைத் தேடியோ போகவேண்டிய தேவை இல்லாமல் படிக்கும்போதே பொருள் விளங்க வேண்டும்” என்று அழுத்திக் கூறுகிறார்.

  “நாவில் தேன் பட்ட உடனே வாய் இனிப்பை உணருவது போல சொற்களின் பொருள் படிக்கும் போதே படிப்பவருக்கு புரிந்து விட வேண்டும்” என்கிறார்.

  உதாரணத்திற்கு, “இது வில்லா? மலையா?” போன்ற எளிய தெலுங்கு மொழியும், “சந்து பொந்துகளில் நுழைந்தனர்’ போன்ற பாமர மக்களும் படித்துப் புரிந்து கொள்ளும் வரிகளும் இந்நூலில் காணப்படுகின்றன.

  “படிப்போரின் மனதை வசீகரிக்கும் சமத்காரங்கள், உவமானங்கள், பழமொழிகளை சேர்த்து அழகாகக் கூறினால், காதுக்கு விருந்தாக இருக்கும்” என்று அவதாரிகையில் (முன்னுரை) கூறுகிறார் மொல்ல. மாலைப் பொழுதை வர்ணிக்கையில் “மாலை வெயிலின் இளைய செந்நிற ஒளி, கவிந்து சாயும் இருட்டோடு சேர்ந்து நீலமும் கெம்பும் (சிவப்புக் கல்) இணைத்துக் கட்டினாற் போல உள்ளது ஆகாயம்” என்று கூறுகிறார்.

  அவ்வாறு கூறினாலும் உவமான உவமேயங்கள், யுத்த வர்ணனை, நாயகி நாயக வர்ணனைகளில் சில சமஸ்கிருத பதங்களை நிறைத்துளார். அந்த காலத்தைப் பொறுத்த வரை எளிமை என்பதன் அளவு கோல் இதுவாக இருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

  மூன்று அத்தியாயங்களில் இவர் விவரிக்கும் யுத்த காண்ட வர்ணனைகளை பார்க்கையில் இவர் தானே நேரில் போர் செய்திருக்க வேண்டும். அல்லது யுத்தம் தொடர்பான நூல்களையாவது ஆழ்ந்து படித்திருக்க வேண்டும் என்று தோன்றும் வகையில் அமைத்துள்ளன. சொற்களை சிக்கனமாக பயன்படுத்துவதில் மொல்ல வல்லவர்.

  வால்மீகி முனிவர் எழுதிய ராமாயணத்தில் இல்லாத சில நிகழ்ச்சிகளைக் கூட வேறு ராமாயணங்களில் இருந்து எடுத்து சேர்த்துளளார் மொல்ல. அதோடு சில நிகழ்ச்சிகளை நீக்கியுள்ளார் கூட..

  உதாரணத்திற்கு அயோத்யா காண்டத்தில் ராமர் சுவர்ணா நதியைத் தாண்டும் முன் குகன் அவர் பாதங்களைக் கழுவும் இடம். இது அத்யாத்ம ராமாயணத்திலிருந்து எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

  அதே போல் பரசுராமர், ராமருடன் யுத்தம் செய்யத் தயாராவது, பாஸ்கர ராமாயணத்திலிருந்து சேர்திருக்கலாம். இதன் மூலம் மொல்ல, விரிவாக தெலுங்கு, சம்ஸ்கிருத நூல்களை படித்தறிந்து உள்ளது தெரிய வருகிறது.

  அவருக்கு முன் புகழ் பெற்று திகழ்ந்த ‘திக்கனா’ போன்ற தெலுங்கு புலவர்கள் சம்ஸ்கிருதத்திலிருந்து சிறிதும் பிறழாத தெலுங்கு மொழிபெயர்ப்புகளை அளித்துள்ளனர்.

  விஜய நகர சாம்ராஜ்ய அரசர் ஸ்ரீகிருஷ்ணா தேவராயர் காலத்தைச் சேர்ந்த ஸ்ரீநாதர் போன்ற புலவர்கள், கற்பனைக் கதைகளை சேர்க்கக் கூடிய கவி வகையைச் சேர்ந்த பிரபந்தங்களைப் பாடியுள்ளனர். மொல்ல, ஸ்ரீகிருஷ்ணா தேவராயர் காலத்தைச் சேர்ந்தவர் என்று கணிக்கப்படுகிறார்.

  ஆராய்ச்சியாளர்கள் மொல்லவின் ராமாயணத்தை பெரு மதிப்போடு ஏற்றுக் கொண்டுள்ளனர். ‘கிராமீய மணத்தோடு எளிதில் புரியும் சொற்களைக் கொண்டு மிகச் சாதாரண வாசகர்களையும் எளிதில் சென்றடையும் வண்ணம் படைத்துளளார்’ என்று ஒருமனதாக போற்றப்படுகிறார் மொல்ல.

  இவருக்கு முன் பல ஆண் கவிஞர்கள் எழுதிய ராமாயணங்கள் பல இருந்த போதிலும் மொல்ல ராமாயணம் மட்டுமே கால கர்ப்பத்தில் கலையாமல் நிலைத்து நின்றிருப்பது இவருடைய புலமைக்கும் திறமைக்கும் பக்திக்கும் எடுத்துக் காட்டு என்றே கூறவேண்டும்.

  இவர் தன் ராமாயணத்தின் முன்னுரையில் தந்தை பெயர் தவிர தன் குடும்பத்தை பற்றி எதுவும் கூறாததால் இவர் பிரம்மச்சாரிணியாகவே வாழ்ந்திருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.

  விருதுகளும் கௌரவங்களும்:-

  ஆந்திர பிரதேஷ் அரசாங்கம் மொல்ல வின் சிலையை ஹைதராபாத் உசைன் ஸாகர் ஏரியின் மேல் உள்ள ‘டாங் பண்ட்’ பாலத்தின் கரைகளில் தெலுங்கு மொழியின் இதர உயர்ந்த ஆளுமைகளின் சிலைகளின் நடுவே அமைத்து கௌரவித்துள்ளது.

  இண்டூரி வெங்கடேஸ்வர ராவ் என்பவர் மொல்ல வின் வாழ்க்கை வரலாற்றை புனைவு கலந்த கதையாக “கும்மரி மொல்ல” (குயவர் மொல்ல) என்ற பெயரில் எழுதி 1969ல் வெளியிட்டார். இந்த நாவலை ஆதாரமாகக் கொண்டு சங்கர சத்தியநாராயணா என்பவர் கதைப் பாடல் வடிவில் Ballad இயற்றி யுள்ளார். இது ஆந்திர பிரதேசில் மிகப் பிரபலமாக உளது.

  இதே நாவலை வைத்து ‘கதாநாயகி மொல்ல’ என்ற திரைப்படம் வெளிவந்தது. வாணிஸ்ரீ இதில் மொல்ல வாக நடித்துள்ளார். இவற்றுள் மொல்லவை பெண்ணீயத்தின் பிரதிநிதியாக, சமூக
  அநீதிகளைக் கண்டு பொங்கிப் போராடும் வீர மாதரசியாக சித்தரித்துள்ளனர். ஆனால் அதற்கு வரலாற்றுச் சான்றோ இலக்கியச் சான்றோ இல்லை.

  சமீப காலமாக பெண்கள் தொடர்பான போராட்டங்களை டாங்பண்டில் உள்ள அவர் சிலை முன்பிருந்து தொடங்க ஆரம்பித்துள்ளனர் மாதர் சங்கங்கள்.

  • கட்டுரை: ராஜி ரகுநாதன், ஹைதராபாத்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,140FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,565FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-