December 3, 2021, 11:44 am
More

  ஆந்திராவின் அன்னபூரணி:- டொக்கா சீதம்மா (1841-1909)

  1909 ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி சீதம்மா மரணித்தார். ஆனால் அவர் புகழ் காலமுள்ளவரை மறையாது. சுமார் அரை நூற்றாண்டு காலம் அன்னதானத்திற்கு சிறப்பான வடிவம் கொடுத்தவர் சீதம்மா.

  andhra annapoorani - 1

  நம்மிடையே பலர் அறிவு ஜீவிகளாக இருப்பதைப் பார்க்கிறோம். செல்வந்தர்களையும் காண்கிறோம். ஆனால் அடுத்தவர் இன்னல் கண்டு உதவும் இளகிய உள்ளம் படைத்தவரைக் காண்பது அரிதாக உள்ளது. மனத்தளவில் இருக்கும் மனிதாபிமானம் உயிர்த்தெழுவதில்லை.

  படிப்பறிவில்லாத ஒரு சாதாரண பெண்மணியிடம் அப்படிப்பட்ட மனிதாபிமானம் உயிர்த்தெழுந்தது. அவர் பெயர் ‘டொக்கா சீதம்மா’. இதில் ‘டொக்கா ‘ என்பது ‘இண்டி பேரு’ எனப்படும் ‘சர் நேம்’ .

  ஆந்திரப் பிரதேசம் கோதாவரி ஜில்லாவில் ராமச்சந்திராபுரம் தாலுகாவில் உள்ள ‘மண்டபேட்ட’ என்ற கிராமத்தில் 1841, அக்டோபர் இரண்டாம் வாரத்தில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார் சீதம்மா. தந்தை பெயர் ‘அனபிண்டி பவானி சங்கருடு’. தாயார் ‘நரசம்மா’.

  பள்ளிக்கூடம் சென்று பெண்கள் படிக்கும் வழக்கமில்லாத காலம் அது. தாய் தந்தையிடம் இராமாயண மகாபாரத கதைகளையும் சில செய்யுட்களையும் கேட்டு வளர்ந்தாள் சிறுமி சீதம்மா. சீதம்மாவின் தந்தை பவானி சங்கரரை அனைவரும் ‘புவ்வன்னா’ என்றழைத்தனர். ‘புவ்வா’ என்றால் உணவு. வீட்டிற்கு வந்தவர்களுக்கு விருந்துணவளித்து உபசரிப்பதில் விருப்பம் கொண்டவர் புவ்வன்னா. சனாதன தர்மத்தை வாழ்வியலாக வாழ்ந்து காட்டிய நற்பெற்றோர் வாய்த்திருந்தனர் அவளுக்கு. அதிலும் ‘அதிதி தேவோ பவ’ என்ற மந்திரத்தின் பொருள் பசுமரத்தாணி போல் அட்சர சத்தியமாக அச்சிறுமியின் இதயத்தில் படிந்து போனது.

  andhra annapoorani2 - 2

  இளமையிலேயே தாயை இழந்ததால் வீட்டை நிர்வகிக்கும் பெரும் பாரம் சீதம்மாவின் தளிர் தோள்களில் விழுந்தது. அதனை ஒரு பவித்திரமான பொறுப்பாக ஏற்று நடத்தினாள் சீதம்மா.

  கோதாவரி நதியின் வடிகால் பகுதியில் இருக்கும் கிராமங்களை ‘லங்க்க கிராமங்கள்’ (தீவு கிராமங்கள்) என்றழைப்பர். அது போன்ற ஒரு கிராமம் ‘லங்க்க கன்னவரம்’. அக்கிராமத்தில் ‘டொக்கா ஜோகன்னா’ என்பவர் வேத பண்டிதராகவும், நெல் விளையும் செழிப்பான வயல்களும், கோதாவரிக் கரையில் காய்கறி தோட்டங்களும் கொண்ட விவசாய செல்வந்தராகவும் விளங்கினார்.

  ஒரு நாள் ஜோகன்னா பண்டித சபை ஒன்றுக்குச் சென்று வரும் வழியில் ‘மண்டபேட்ட’ கிராமத்தை நெருங்குகையில் மதிய நேரம் ஆயிற்று. பவானி சங்கரரின் வீட்டிற்கு சென்று அன்றைய தினம் அவர் வீட்டில் அதிதியாக உணவருந்தினார். தனக்கு விருந்துபசாரம் செய்த யுவதியான சீதம்மாவைப் பார்த்து ஜோகன்னா வியந்தார். மிகுந்த திருப்தியுடன் வயிறும் மனதும் நிறைந்து வீடு திரும்பினார். சீதம்மாவின் பணிவும் பண்பும் அவரைக் கவர்ந்தன. அவளை மணம் புரிந்து கொள்ள விரும்பினார்.

  ஜோகன்னா ஜோதிட சாஸ்திரமும் நன்கறிந்தவர். இருவர் ஜாதகங்களும் நன்கு பொருந்துவதைக் கண்டு, முறையாகப் பெண் கேட்டு வந்தார். பவானி சங்கரர் மிக விமரிசையாக சீதம்மாவை ஜோகன்னாவிற்கு மணமுடித்துக் கொடுத்தார்.

  சீதம்மா புகுந்த வீடு புகுந்ததும் அவள் பெயரில் ‘டொக்கா’ என்ற ‘வீட்டுப் பெயர்’ சேர்ந்து ‘டொக்கா சீதம்மா’ என்றாயிற்று. அவளிடம் இயல்பாக இருந்த உதார குணமும் தர்ம சிந்தனையும் புகுந்த வீட்டில் இன்னும் வளர்ந்து பெருகியது. அவர்கள் அன்யோன்ய ஆதர்ச தம்பதிகளாக ஊரார் மெச்சும்படி வாழ்ந்தார்கள்.

  andhra annapoorani5 - 3

  கோதாவரி வடிகால் பகுதிகளிலுள்ள லங்க்க கிராமங்களுக்குச் செல்ல வேண்டுமென்றால் இன்றைக்கும் படகுப் பயணம் அவசியமாகிறது. ஜோகன்னாவின் கிராமமான லங்க கன்னவரம் நடுவில் இருந்ததால் அவ்வழியே செல்பவர் பலருக்கும் நடந்த அலுப்பு தீர அவர்கள் வீட்டில் உணவருந்திச் செல்வது வழக்கமாயிற்று. எந்த நேரத்தில் அதிதிகள் வந்தாலும் இல்லை என்று சொல்லாமல் உணவும் நீரும் அளித்து ஆதரித்தனர் சீதம்மா தம்பதிகள்.

  அத்தீவு கிராமங்களில் அக்காலத்திலேயே குல மத பேதம் பாராமல் கௌரவ மரியாதையோடு அன்னமிடும் அன்னபூரணியாகப் பெயர் பெற்றார் சீதம்மா. அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் அவதியுறும் போதெல்லாம் சீதம்மா வீட்டு அடுப்பு அணையாமல் எரிந்தது. பருப்பும் அன்னமும் வேகும் வாசம் ஊரைத் தூக்கிற்று. வகை வகையாக சமைத்து வாய்க்கு ருசியாகப் பரிமாறுவதில் அவருக்கு நிகர் அவரே. கணவர் ஜோகன்னாவும் மனைவியின் உதார குணத்திற்கு குறுக்கே நின்றவரல்ல.

  படிப்பறிவில்லாத ஒரு சாதாரண பெண்மணி சீதம்மா பசிக்கு உணவளிக்கும் மனிதாபிமானச் செயலால் உயர்ந்து நின்றார். சீதம்மா கையால் உணவுண்ணாதவர்களே அப்பகுதிகளில் இல்லை என்று சொல்லுமளவுக்கு அன்ன லட்சுமியாக விளங்கினார்.

  ஆங்கிலேயர்கள் கூட சிலர் அப்பகுதிகளில் வேலை பார்க்கையில் அவள் வீட்டில் உணவுண்ட கதைகளை இன்றும் கேட்க முடிகிறது. உடல் நிலை சரியில்லாத பிரிட்டிஷ் வீரனுக்கு மிளகு ரசத்தோடு பத்திய உணவு சமைத்துப் போட்டார் சீதம்மா.

  அவர் புகழ் இங்கிலாந்து வரை பரவியது. இங்கிலாந்து மன்னர் ஏழாம் எட்வர்டு அந்த கிராமப் பெண்மணியின் தர்மச் செயலை கௌரவிக்க எண்ணி தன்னுடைய பட்டமேற்பு விழாவுக்கு வரும்படி சீதம்மாவுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் சீதம்மா அதனை மிக இயல்பாக மறுதளித்தார். தான் எதுவும் மகத்தான பெரிய செயலைச் செய்து விடவில்லை என்றும் தன்னுடைய அடிப்படை கடமையான பசித்தோருக்கு உணவிடும் சாதாரண சேவையைச் செய்து வருவதாகவும் அதற்கு எந்த பரிசும் தேவையில்லை என்றும் பதிலளித்தார்.

  அரசர் தன் பிரதிநிதியாக மதராசிலிருந்து அதிகாரி ஒருவரை அனுப்பி தன்னலமற்ற சேவை செய்து வரும் சீதம்மாவை கௌரவிக்கும் விதமாக ஒரு பாராட்டுப் பத்திரமும் தங்கப் பதக்கமும் வழங்கினார்.

  ஆனால், தான் தங்கப் பதக்கத்தை எதிர்பார்த்து எந்த பெரிய சேவையையும் செய்து விட வில்லை என்று கூறி மறுத்தார் சீதம்மா. அவருடைய புகைப்படமாவது ஒன்று எடுத்து அரசருக்கு அனுப்ப வேண்டும் என்று அந்த அதிகாரி மன்றாடவே அதற்கு சம்மதித்தார்.

  அந்த பத்திரமும், புகைப்படமும் இன்றும் அவர் வம்சத்தினரிடம் பத்திரமாக உள்ளன. நாமும் காண முடிகிறது. அந்த புகைப் படத்தை ஒரு நாற்காலியில் அமர்த்தி மன்னர் அவளுக்குப் புகழாரம் சூட்டியதாகக் கூறப்படுகிறது.

  கோதாவரி கிளை நதியான ‘வைனதேயம்’ நதியின் மீதாக லங்க கன்னவரம் அருகில் ஒரு ‘அக்விடெக்ட்’ கட்டப்பட்டபோது அதில் வேலை செய்த கூலியாட்களுக்கு தாகம் தீர்க்க மோரும் வயிறார உணவும் அளித்து அளப்பரிய சேவை செய்தார் இத்தாய்.

  தன் வயலில் விளைந்த நெல்லும் தோட்டத்தில் காய்த்த காய்கறிகளும் தன் மனைவி செய்யும் அன்னதானச் சேவையில் கரைந்து போவதைக் குறையாகக் காணாத நிறை மனிதர் ஜோகன்னா. ஒரு முறை இவருடைய வயலில் தெய்வத்தில் அருளால் இரண்டு பானைகளில் புதையல் கிடைத்ததாகக் கூறுவர்.

  சீதம்மாவுக்குத் தீராத ஆசை ஒன்று இருந்தது. ‘அந்தர்வேதி’ என்ற தலத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம சுவாமியைச் சென்று சேவித்து வர விரும்பினார். ஆனால், தான் ஊரில் இல்லாத போது பசியோடு யாரேனும் அதிதி வந்து உணவின்றி வருந்தித் திரும்பிச் செல்ல நேரிடுமே என்று எண்ணித் தன் கோரிக்கையை மறைத்து வைத்தார்.

  வங்காள விரிகுடாவில் கோதாவரியின் கிளை நதியான வசிஷ்ட கோதாவரி கலக்கும் இடமான ‘அந்தர்வேதி’ கிராமம் கண்ணை கவரும் அழகிய பசுமையான இடம்.

  ஒருமுறை தீவிரமான பக்தியால் உந்தப் பட்டு ஸ்ரீ லட்சுமி நரசிம்ஹ சுவாமியின் ஐந்து நாள் கல்யாண உற்சவத்தை ஒரு நாளாவது பார்க்கும் ஆசையால் கிளம்பி விட்டார் சீதம்மா. பாதி வழியில் சுவாமி தரிசனம் செய்து விட்டு களைப்போடு திரும்பி வரும் பக்தர் கூட்டம் ஒன்று எதிர்பட்டது.

  அவர்கள் சீதம்மாவை நேரில் பார்த்ததில்லை. ஆனால் அன்னபூரணியாக அவர் பெயர் நாற்புறமும் பரவி இருந்தது. அவர்கள் தாம் மிகவும் களைத்து பசித்திருப்பதாகவும் விரைவாக ‘லங்க கன்னவரம்’ சென்று சீதம்மா வீட்டில் பசியாற உணவுண்ண வேண்டும் என்றும் பேசிக் கொண்டதை சீதம்மா கேட்க நேர்ந்தது.

  உடனே, தெய்வ தரிசனம் செய்யும் தன் ஒரே ஆசையையும் துறந்து வண்டி மாட்டைக் கட்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்து அடுப்பில் உலையை ஏற்றினார் அந்த ‘அபர அன்னபூரணி’.

  அந்த நாட்களில் அன்ன சத்திரங்கள் எங்காவது ஓரிரு இடங்களில் இருந்தன. ஆனால் அவற்றில் குல மத பேதங்கள் காணப்பட்டன. குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே உணவளிக்கப் பட்டது. ஆனால் சீதம்மாவோ பசியோடிருக்கும் அனைவருமே சொந்த பிள்ளைகள் என்ற பாசத்தோடு பரிந்து பரிந்து பரிமாறுவார்.

  இன்றளவும் மக்கள் அவ்வழியாக பஸ்ஸிலோ படகிலோ பயணிக்கையில் லங்க கன்னவரம் என்ற பெயரைக் கேட்டதும் ‘டொக்கா சீதம்மா’ வை நினைத்து கண்ணீர் மல்க கையெடுத்துக் கும்பிடுவதைக் காண முடிகிறது.

  1909 ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி சீதம்மா மரணித்தார். ஆனால் அவர் புகழ் காலமுள்ளவரை மறையாது. சுமார் அரை நூற்றாண்டு காலம் அன்னதானத்திற்கு சிறப்பான வடிவம் கொடுத்தவர் சீதம்மா.

  ‘நான் என்ன பெரிதாக செய்து விட்டேன்? அன்னமளித்து பசி தீர்ப்பது ஒருவரின் கடமை தானே? அதைத்தானே செய்தேன்” என்று பணிவோடு கூறிய இப்பெண்மணியில் பெயரை ‘கன்னவரம்’ கிராமத்தில் கோதாவரி நதியின் மீது கட்டியுள்ள ‘அக்விடெக்ட்’ (அணை) க்கு சூட்டி புகழ் சேர்த்துள்ளது ஆந்திர பிரதேச அரசாங்கம்.

  • ராஜி ரகுநாதன், ஹைதராபாத்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,105FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,779FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-