December 6, 2021, 5:37 am
More

  ரயில்வேயின் அட்டகாச முயற்சி! பள்ளிக்கு அமைந்த அற்புதமான அறைகள்! தெற்கு ரயில்வேயும் யோசிக்குமா?!

  ஆண்டுகள் பல ஓடின… ஆனாலும் நல்ல விதமாக எதுவும் கைகூடவில்லை. மைசூரில் உள்ள இந்த அரசுப் பள்ளி இயங்குவதற்காகப் போராடியது! அந்தப் போராட்டத்துக்கு ஒரு முடிவு கிடைத்திருக்கிறது இப்போது! அதற்குக் கை கொடுத்திருப்பது நமது இந்தியன் ரயில்வே!

  mysore school in coach3 - 1

  ஆண்டுகள் பல ஓடின… ஆனாலும் நல்ல விதமாக எதுவும் கைகூடவில்லை. மைசூரில் உள்ள இந்த அரசுப் பள்ளி இயங்குவதற்காகப் போராடியது! அந்தப் போராட்டத்துக்கு ஒரு முடிவு கிடைத்திருக்கிறது இப்போது! அதற்குக் கை கொடுத்திருப்பது நமது இந்தியன் ரயில்வே!

  ஒரு ரயில்வே பெட்டி, வகுப்பறையாக மாறிய அதிசயம்! இந்த வகுப்பறையில் 60 மாணவர்களுக்குக் குறையாமல் அமரலாம். அதற்கான வசதி வெகு ஜோராக அமைந்துவிட்டது.

  வட சென்னை பகுதிகளில் கண்டெய்னர் லாரிகளில் பயன்படுத்தப் பட்டு தூக்கி எறியப் படும் கண்டெய்னர்களை அலுவலகமாக மாற்றி, இண்டீரியர் வேலை செய்து அதனை விற்பனைக்கு கொண்டிரு வந்திருகிறார்கள். அதுபோன்றது என்றாலும், ரயில்வேயின் இந்த முயற்சி, ஒரு மாபெரும் தொண்டு முயற்சி.

  mysore school in coach5 - 2

  கடந்த வார இறுதியில், இந்தப் பள்ளிக்கு நாடு முழுவதும் இவ்வாறு வகுப்பறை கூட கட்ட முடியாமல் அல்லது அமைக்க இயலாமல் தவித்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற பள்ளிகளின் பொறாமையைத் தூண்டும் வகையில்… இரண்டு நிரந்தர வகுப்பறைகள் கிடைத்துவிட்டன.

  இந்த வகுப்பறைகள் பார்க்கவே பளிச்சென வித்தியாசமான அமைப்புடன் திகழ்கின்றன. மாணவர்களின் ஆர்வத்தைக் கவரும் வகையில் பளிச்சிடுகின்றன. இந்த வகுப்பறைகள் உண்மையில் இரண்டு ரயில் பெட்டிகளே! ரயில் பெட்டியின் படிக்கட்டுகள், பிரகாசமாக வண்ணம் பூசப்பட்ட வெளிப்புறங்கள் கவரும் விளக்குகள், வண்ணமயமான வகுப்பறை ஓவியங்கள் என … அடடா.. எவ்வளவு அழகு!

  mysore school in coach4 - 3

  இதற்கு முயற்சி எடுத்தவர்கள் தென்மேற்கு ரயில்வே அதிகாரிகள். மைசூர் அசோகபுரத்தில் அமைந்துள்ள இந்த அரசுதொடக்கப் பள்ளியின் இந்த ரயில் பெட்டி வகுப்பறைகள், இந்தியாவிலேயே முதல்முறையாக இங்கேதான் அமைக்கப் பட்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

  கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக, ரயில்வே குவார்ட்டர்ஸ் கட்டடத்தில் இந்தப் பள்ளி இயங்கிவந்தது. பின்னர், இனி இயங்குவதற்கு லாயக்கற்றது என்று அதிகாரிகளால் கைவிடப்பட்ட இரு பெட்டிகளை மிகவும் கவர்ச்சிகரமான அறையாக மாற்றினார்கள் ரயில்வே பணிமனையில்! இதை பெருமையுடன் சொல்கிறார் அசோகபுரம் ரயில்வே பணிமனை தலைமை மேலாளர் பி.ஸ்ரீனிவாசு.

  mysore school in coach2 - 4

  அண்மைக் காலங்களில் இந்தப் பள்ளியில் மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. பள்ளிக்கான கட்டடம் அமையாதது, நல்ல அடிப்படை வசதிகள் இல்லாதது என அதற்குப் பல காரணங்கள்.

  இப்போது எங்கள் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 7 ம் வகுப்பு வரை, 60 மாணவர்கள் பயில்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள். நான்கு ஆசிரியர்கள் உள்ளனர். இப்போது வகுப்பறைகள் பளிச்சிடுகின்றன. இது மாணவர்களைக் கவரும். இனி மேலும் மாணவர்கள் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்கிறார் இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை எஸ்.ஜெயலக்ஷ்மி.

  mysore school in coach1 - 5

  இந்த இரு பெட்டிகளில் ஒரு பெட்டி இரு வகுப்பறைகளாக பிரிக்கப் பட்டிருக்கிறது. 4 மற்றும் 5ம் வகுப்புகளுக்காக! அடுத்த பெட்டி மாணவர்களின் கூடுதலுக்காகவும், மற்ற பயன்பாடுகளுக்காகவும் உள்ளது.

  இவ்வாறு பெட்டியை ரயில்வே ட்ராக்கில் இருந்து பள்ளிக்குக் கொண்டு வந்து இவ்வாறு மாற்றுவதற்கு கிரேன்கள் செலவு உள்பட ரூ. 50 ஆயிரம் வரை செலவு செய்யப் பட்டதாக தென்மேற்கு ரயில்வே அதிகாரிகள் கூறினர்.
  வண்ணம் பூசுதல், டிசைன் செய்தல், மேலே மின்விசிறிகள் மாட்டுதல், விளக்குகள், புத்தகங்கள் வைத்தல், ஸ்டேஷனரி பொருள்கள் இவற்றுக்கு ரயில்வே பணியாளர்கள் மற்றும் உதவும் உள்ளங்களிடம் இருந்து உதவிகள் கிடைத்ததாம்!

  mysore school in coach - 6

  இதன் வெளிப்புறத்தில் பயோ டாய்லெட் வசதியும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இனி இதன் அடுத்த கட்டம், ரயில்வேயில் பயன்படுத்தப் படாமல் கிடப்பில் போடப்படும் கூரைத் தகரங்களை மீண்டும் பயன்படுத்தும் வகையில், பள்ளிகளுக்கான கூரைகளைப் போட்டுத் தருவதுதான் என்கிறார் தலைமை மேலாளர் பி.ஸ்ரீனிவாசு.

  mysore school in coach railway staff - 7
  ரயில் பெட்டியை நகர்த்தி, மீண்டும் அழகிய அறையாக உருப் பெற வைப்பதில் ஈடுபட்ட குழு… (Team involved in project of shifting and remodelling coach)

  கல்விக்குக் கை கொடுக்கும் இந்தியன் ரயில்வே என்று இனி நாமும் கொண்டாடலாம். இவ்வாறு எண்ணற்ற பள்ளிகள் வகுப்பறைகள் இன்றி தமிழகத்திலும் இயங்கி வருகின்றன. மரத்தடியிலும், கொட்டகையிலும் இயங்கும் பள்ளிகளுக்கு தென்னக ரயில்வேயும் இவ்வாறு முயற்சிகளை மேற்கொண்டு, வகுப்பறைகள் அமைத்து, கல்விக்குக் கை கொடுக்க வேண்டும் என்று நாமும் கோரிக்கையை முன்வைப்போம்!

  • செங்கோட்டை ஸ்ரீராம்
  • படங்கள் மற்றும் தகவல் உதவி: ராம்நாத் கோபாலன்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,107FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,798FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-