November 28, 2021, 4:42 am
More

  வள்ளுவர் அரசியலில் ‘வாண்டட்’ஆக விழுந்த வெங்கய்ய நாயுடு… மன திடம் பெற பிரார்த்திப்போம்!

  thiruvalluvar - 1

  எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
  எண்ணுவம் என்பது இழுக்கு…

  இந்தத் திருக்குறள், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு மனக்குரலாய் உள்ளே ஒலிக்க வேண்டும். அதுவும் திருவள்ளுவர் திருநாள் என்று தமிழக அரசு முன்னர் அறிவிப்பு வெளியிட்டதற்கு இணங்க, கொண்டாடப் படும் நிலையில்!

  திருவள்ளுவர் என்று பிறந்தார் என்பது சர்ச்சைக்கு உரிய விஷயமாகவே இன்று வரை தமிழர்கள் என்று சொல்லிக் கொள்வோரால் பரப்பப் பட்டு வருகிறது. திருவள்ளுவ நாயனார் என்று சைவ சமயத்தோரால் கொண்டாடப் படும் பண்டைய குறிப்புகளில், வள்ளுவர் வைகாசி மாத அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர் என்று குறிக்கப் படுகிறது.

  வள்ளுவர் குறித்த அரசியல் தமிழகத்தில் அதி தீவிரமாய் அண்மைக் காலங்களில் நடைபெற்று வந்ததை தமிழகம் அறியும். இரண்டாயிரம் வருடங்களுக்கும் முன்னர், கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் பிறந்த வள்ளுவர், எந்த சமயத்தையும் குறிப்பிட்டுச் சொல்லாமல், இந்த மண்ணின் தன்மைக்கு ஏற்ற, சமய சமரசக் கருத்தாக வாழ்வியல் கருத்துகளைத் தொகுத்து திருக்குறளைப் படைத்தார்.

  திருக்குறள் அரங்கேற்றப் பட்டதும் மதுரை தமிழ்ச் சங்கத்தில்தான்! இறையனார் எனும் சிவபெருமான் தலைவராக அமர்ந்த தமிழ்ச் சங்கத்தில், மதுரைக் கோயிலுக்குள் திருக்குறள் அரங்கேற்றப் பட்டது. எனவே அது இந்து மதம் என தற்போது அழைக்கப் படும், சனாதன தர்மத்தின் வழி வந்த கருத்துகளை உள்ளடக்கிய நூலாகவே தமிழ்ச் சங்கத்தாலும் சங்கப் புலவர்களாலும் அங்கீகரிக்கப் பட்டது.

  ஆனால், பின்னாளில் தமிழர் இலக்கியத்தையும், தமிழர் மரபுகளையும் தமிழர்களிடம் இருந்து பிரித்து, தமிழர்களுக்கு என்று அவர்களின் வேர்களான தெய்வத் தமிழைப் பிரித்து, கிறிஸ்துவத்தின் போதனைகளை புகுத்துவதற்காக வந்த பாதிரிகள் திருக்குறளைச் சிதைத்தனர். திருவள்ளுவரை சமய நெறிகளின் அடையாளங்களிலிருந்து வெளியே தள்ள பெரிதும் முயன்றனர்.

  அவர்களின் சீரிய முயற்சியால், திருக்குறள் அறம், பொருள், இன்பம், வீடு என நால்வகை தர்மங்களை வலியுறுத்தும் சனாதன தர்ம அடையாளத்தில் இருந்து பிரிக்கப் பட்டு பரப்பப் பட்டது. பள்ளிகளில் அவ்வாறே கற்பிக்கப் பட்டது. தொடர்ந்து, கம்பீரமாக தெய்வத் தமிழராக முன் நின்ற திருவள்ளுவரை, நெற்றியில் நீறு இன்றி, தோளில் தொங்கும் நூல் இன்றி சமண முனி என்றும், சாக்கிய முனி என்றும், நாத்திகர் என்றும் திரித்தும், தை மாத இரண்டாம் நாளில் வள்ளுவர் தினம் என்றும் மாற்றி திராவிட இயக்க அரசியல் நிறுவியது.

  தமிழர் வாழ்வியலைச் சிதைக்க என்றே கிறிஸ்துவ கைக்கூலிகளாய் அரசியலைச் செய்த திமுக.,வின் தமிழர் இனத் துரோகங்களில் தலையான ஒன்றாய் திருவள்ளுவரின் அடியாளச் சிதைப்பும், வள்ளுவத்தின் பொருள் திரிபும் திகழ்ந்தது. இதன் அடையாளம் தான் குமரி முனையில் நின்ற அய்யன் திருவள்ளுவர் சிலையும், மு.கருணாநிதி எழுதிய திருக்குறள் பொருளுரையும்!

  இதன் மற்றொரு அடையாளமாக, கிறிஸ்துவர்கள் பெரும் பொருள் செலவு செய்து, தெய்வநாயகம், தேவகலா என்ற இரு கிறிஸ்துவர்கள், செய்த திருவள்ளுவர் கிறிஸ்துவர் என்று நூல்களின் மூலம் நிகழ்ந்த அடையாளச் சிதைப்பு சதி.

  இந்த நிலையில்தான், தமிழக பாஜக.,வின் ஐ.டி., பிரிவு காவி உடையில் திருவள்ளுவரை அவரது உண்மையான உருவில் வெளிப்படுத்த, அது மிகப் பெரும் அரசியல் சர்ச்சையாக திராவிட இயக்க அரசியல்வாதிகளாலும் அடிவருடிகளாலும் மேற்கொள்ளப் பட்டது. அப்போதும் அவர்கள் கிறிஸ்துவம் முன் நிறுத்திய நெற்றித் திருநீறு அற்ற வெள்ளை உடையில் பூணூல் மறைக்கப் பட்டு மேல் துண்டு போர்த்திய திருவள்ளுவரையே முன் நிறுத்தினர்.

  thiruvalluvar saivar - 2

  இந்தச் சர்ச்சைக்கு இப்போது மீண்டும் தூபம் போட்டுள்ளார் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு! அவரது செயல், திருவள்ளுவருக்கும் தமிழர்களும், தமிழர் வாழ்வியலுக்கும் செய்துள்ள அப்பட்டமான துரோகம்!

  ஏற்கெனவே திராவிடர்கள் என்றால் தெலுங்கர்கள் தான் என்று தமிழகத்தில் நிறுவப் பட்டுள்ள நிலையில், திராவிட சித்தாந்தத்தை தமிழர்களிடம் திணித்து, தமிழர் இன அழிப்பு செய்து கொண்டிருக்கும் திமுக.,வின் துரோகச் செயலுக்கு, தெலுங்கரான வெங்கய்ய நாயுடுவும் துணை போயிருக்கிறார் என்பதைத்தான் அவரது இன்றைய செயலால் உணர முடிகிறது.

  அப்படி என்ன செய்தார் வெங்கய்ய நாயுடு!?

  காவி உடையில் திருவள்ளுவர் இருக்கும் புகைப்படத்துடன் திருவள்ளுவர் தின வாழ்த்து கூறியவர், அது குறித்த விமர்சனங்களை திமுக.,வின் இணையதள கூலிகள் செய்தவுடனே, சற்று நேரத்தில் காவி உடை திருவள்ளுவரின் புகைப்படத்தை நீக்கிவிட்டு, கிறிஸ்துவ திராவிட கூட்டு சதியால் உரு மாற்றப் பட்ட நீலப்பின்னணி வெள்ளை உடை திருவள்ளுவரை பதிவு செய்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.

  தமது டிவிட்டர் வாழ்த்துச் செய்தியில் சிறந்த தமிழ்ப் புலவரும், தத்துவவாதியும், ஞானியுமான திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். அவர் நமக்கு அளித்த திருக்குறள் இந்த உலகில் உன்னதமான வாழ்க்கையை வாழ்வதற்கு மனிதகுலத்திற்கு வழிகாட்டுகிறது.

  bjp thiruvalluvar kalki - 3

  அறநெறி, மாண்புகள், தார்மிகநெறி ஆகியவற்றை வலியுறுத்தும் தமிழ் இலக்கியங்களில் மிகவும் பாரம்பரியம் மிக்கதாக கருதப்படும் திருக்குறள், அரசு நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து நமக்கு வழிகாட்டுகிறது. இந்த நூல் எல்லா காலத்திற்கும் பொருத்தமானதாக திகழ்கிறது என்று புகழாரம் சூட்டி… காவி உடையில் தோற்றமளிக்கும் வள்ளுவரின் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.

  அந்தப் படம் தமிழக பாஜக.,வின் கைவண்ணத்தில் வெளியான ஒன்றுதான். அந்தப் படத்தை தற்போது பாஜக., எனும் கட்சிக்கு அப்பாற்பட்டு குடியரசுத் துணைத் தலைவராக இருக்கும் வெங்கய்ய நாயுடு பயன்படுத்திய போதும், அது ஒன்றும் பாஜக.,வின் சொத்தோ அல்லது, பாஜக., சார்போ இல்லை என்ற அடிப்படைப் புரிதல் வெங்கய்ய நாயுடுவுக்கு வந்திருக்க வேண்டும்.

  காவி உடை வள்ளுவரைப் பதிவு செய்ய வேண்டும் என்ற துணிவுக்கு வந்து, பதிவு செய்தவர், துணிந்த பின், இவ்வாறு பதிவிட்டோமே என்று பின்வாங்கியது, அவர் திருவள்ளுவரைப் பின்பற்றாததும், வள்ளுவரின் வாய்மொழியை அவமதித்ததுமே ஆகும்.

  குடியரசுத் துணைத் தலைவர் ஆன காரணத்தால், தமது இந்துத்துவக் கொள்கையை காலாவதி ஆக்கிவிட்டாரா வெங்கய்ய நாயுடு?! அதன் பின்னர் அவர் திருப்பதிக்கே சென்றதில்லையா? பாஜக., சார்பு கலாசார நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டதில்லையா?!

  பொய்களால் திருட்டுத் தனமாக மக்களின் சிந்தையைச் சிதைத்து திராவிட சித்தாந்தவாதிகள் தமிழக அரசாட்சியில் அமர்ந்ததும், தங்களது கொள்கைகள் அனைத்தையும் திணித்து, அவர்களின் கொள்கைகளுக்கு எதிரானவர்களுக்கும் சேர்த்தேதான் சட்டதிட்டங்களை மாற்றினார்கள். கலாசார சீரழிப்பு செய்தார்கள். தமிழகத்தின் பாரம்பரிய ஆன்மிக அடையாளங்களைச் சிதைத்தார்கள். அவற்றை எல்லாம் ஜனநாயகம் என்ற போர்வையில் திராவிட சித்தாந்தங்களுக்கு விரோதமாக உள்ள பொதுமக்களும் கட்டாயத்தின் பேரில் ஏற்கவேண்டிய நிலை வந்தது. அந்த நிர்பந்த நிலையில் துணை குடியரசுத் தலைவரும் இருக்கிறாரா என்பதை அவர்தான் இனி தெளிவுபடுத்த வேண்டும்!

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,107FansLike
  369FollowersFollow
  45FollowersFollow
  74FollowersFollow
  1,745FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-