Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் குடமுழுக்கு சர்ச்சை: ஆகம மந்திரம் அறிவாரோ? தமிழ் தோத்திரம் அறிவாரோ?! ஏனிந்த வீண் விளம்பரம்?

குடமுழுக்கு சர்ச்சை: ஆகம மந்திரம் அறிவாரோ? தமிழ் தோத்திரம் அறிவாரோ?! ஏனிந்த வீண் விளம்பரம்?

தமிழ்நாடு அரசு தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு ஆகமத்தின் படி நடைபெறும் என்று உறுதிபடக் கூறியுள்ளது. இதற்காக இதனை விசாரிக்க 21 நபர் கொண்ட குழுவை அமைத்திருக்கிறது. ஆனால், இவர்களில் எந்த ஒருவருக்கும் ஆகமங்கள் தெரியாது என்பதும் அனைவருமே அரசுப் பணியாளர்கள் என்பதும் வருத்தப் பட வேண்டிய விஷயம்தான்!

தற்போது தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கு சர்ச்சை பெரிதாக உருவெடுத்துள்ளது. குடமுழுக்கை எந்த மொழியில் நடத்துவது என்பது பற்றிய சர்ச்சை இது. தஞ்சைப் பெரிய கோவில் மட்டுமல்ல, எந்தக் கோவிலின் பூஜைகளும் கும்பாபிஷேகமும் அதற்குரிய ஆகம விதிகளின்படியேதான் நடத்தப்படவேண்டும்.

அதன்படி பெரிய கோவில் கும்பாபிஷேகம் மகுடாகமத்தின்படி நடக்க வேண்டும் என்று பெரியவர்கள் பலர் கூறியிருக் கின்றனர்.

மகுடாகமம் என்றால் என்ன ?

சைவ ஆகமங்கள் 28, அதில் தமிழகத்தின் பெரும்பாலான சிவன் கோவில்கள் “காமிக ஆகமத்தின்” அடிப்படையில்தான் அமைந்துள்ளன. பொதுவாக கோவில்களின் கட்டமைப்பை நிறுவி அதன்பின் கருவறையில் விக்ரகப் பிரதிஷ்டை செய்து இறை சக்தியை நிறுவுவது வழக்கம்.

மாறாக விக்ரகப் பிரதிஷ்டையிலிருந்து தொடங்கி கருவறை, சுற்றுப் பிரகாரங்கள் முதலானவற்றை அமைப்பது “மகுடாகம முறை”. தில்லை, திருவாரூர் ஆகிய கோவில்கள் மகுடாகம முறையில் அமைந்தவை.

இந்தக் கோவில்களை வழிபட்டுவந்த சோழ வம்சத்தின் ராஜராஜன், தான் கட்டிய கோவிலையும் அதே முறையில் அமைத்ததில் வியப்பில்லை. குடவாயில் பாலசுப்பிரமணியன், டாக்டர் நாகசாமி முனைவர் சங்கரநாராயணன் ஆகிய அறிஞர்கள் பெரிய கோவில் மகுடாகமத்தைச் சேர்ந்தது என்று உறுதியாகக் கூறுகின்றனர்.

இதற்கான ஆதாரங்கள் என்ன? முதலாவது, குறுகிய வாயில் கொண்ட கருவறையில் அமைந்துள்ள மிகப்பெரிய லிங்கத்திருமேனி..அந்த விக்ரகம் அமைந்த பிறகே மற்ற கட்டுமானங்கள் எழுந்தன என்று சுட்டுகிறது தவிர, மூலவருக்கு மேலே விமானத்தில் அமைந்துள்ள வெற்றிடமான பரவெளி, விமானத்திற்குப் பொன் வேய்ந்தது, விமானத்தின் கோஷ்டங்களில் அமைந்துள்ள சதாசிவ மூர்த்தங்கள் ஆகியவை மகுடாகமத்தின் அடிப்படைகளாகும்.

இப்படி அணுஅணுவாக சிந்தித்து ராஜராஜப் பெருவேந்தன் கட்டிய கோவிலில் அதற்குரிய ஆகமத்தை விடுத்து இப்படித்தான் கும்பாபிஷேகம் நடத்தவேண்டும் என்று அரசியல் செய்வது, அதுவும் தெய்வநம்பிக்கை இல்லாத கூட்டம் வலியுறுத்துவது பெரும் கேடு. கோவில் ராஜராஜனுடையது. அவன் அமைத்த வழிமுறைகளை மாற்ற யாருக்கும் உரிமையில்லை. ( மகுடாம முறை குறித்து அரசியல் சமூக விமர்சகர் கிஷோர் கே சுவாமி இவ்வாறு தனது கருத்தை முன்வைக்கிறார்)

இந்நிலையில், தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த கோரி தொடரப்பட்ட வழக்கில், கோயில் நிர்வாகத்தை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணை கிராமத்தைச் சேர்ந்த திருமுருகன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல்செய்த மனுவில், தஞ்சை பெரிய கோயில் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டு உள்ளது. பெரிய கோயில் சைவ ஆகம விதிப்படி ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. சைவஆகம விதிகளின்படி கட்டப்படும் கோயில்களில் பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் தமிழிலேயே நடத்தப்பட வேண்டும்.

பக்தி இலக்கியமான சைவத் திருமுறையில் தமிழ் மொழியில் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய குடமுழுக்கு நடந்ததற்கான சான்றுகள் உள்ளன. இதைக் கோயில் கல்வெட்டுகள் உறுதிப் படுத்துகின்றன. ஆகம விதிகள் மீறப்பட்டபோது பெரிய கோயிலில் விபத்துகள் நிகழ்ந்துள்ளன. கடந்த 1997-ல் கோயில் குடமுழுக்கில் தீ விபத்து ஏற்பட்டு பலர் இறந்தனர். அதே ஆண்டில் ஏர்வாடி மற்றும் கும்பகோணத்திலும் தீ விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில், தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு பிப்.5-ம் தேதி நடைபெறும் என அறநிலையத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தக் குடமுழுக்கு சம்ஸ்கிருதத்தில் நடைபெற வாய்ப்புள்ளது.

குடமுழுக்கைத் தமிழில் நடத்த வேண்டும் என தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. சம்ஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தினால் ஆகம விதிகள் மீறப்பட்டபோது நிகழ்ந்த விபத்துகள் போன்று ஏதேனும் நிகழுமோ என மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கைத் தமிழில் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. கடைசியாக குடமுழுக்கு எந்த மொழியில் நடத்தப்பட்டது? என நீதிபதிகள் கேட்டதற்கு, கோயில் ஆகம விதிப்படி, சம்ஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. ஆனால் அப்போது தமிழில் அர்ச்சனை செய்யப் பயிற்சி பெற்றவர்கள் இல்லை. தற்போது சைவ அர்ச்சகர் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்றவர்கள் அதிகமாக உள்ளனர். அவர்களைப் பயன்படுத்தி தமிழில் குடமுழுக்கு நடத்தலாம் என மனுதாரரின் வழக்கறிஞர் கூறினார்.

அறநிலையத் துறை சார்பில் ஆகம விதிப்படியே குடமுழுக்கு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பெரிய கோயில் நிர்வாகத்தை எதிர்மனுதாரராகச் சேர்க்க உத்தரவிட்டு விசாரணையை ஜன.27-க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இத்தகைய பின்னணியில், தஞ்சைக் கோவில் குடமுழுக்கு சமூகத் தளங்களில் பெரிதாக விவாதிக்கப் பட்டு வருகிறது. என்ன பின்னணி, ஏதுவிவரம் எதுவும் அறியாமல், உணர்ச்சியின் அடிப்படையில், தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று சிலர் தமிழார்வத்தின் பேரில் குரல் கொடுக்கின்றனர். அவர்களின் ஆர்வத்தைப் பாராட்ட வேண்டியதுதான். ஆனால் இதன் பின்னணி, உள் அர்த்தம், நடைமுறை சாத்தியங்களைக் குறித்து அவர்களை யோசிக்க வைக்க வேண்டியதாயிருக்கிறது.

2020-லும் குடமுழுக்கு பூஜைகளை தமிழில் நடத்து எனக் கெஞ்சுவது கேவலம் என்று சினிமா பாடலாசிரியர், கவிஞர் தாமரை சாடியிருக்கிறார்.
அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்தில்… தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும்.
தமிழகத்தின் வரலாற்று அடையாளங்களுள் ஒன்று, தமிழரின் புகழ்மிக்க கோயில்களில் ஒன்று, பெருமைமிகு சுற்றுலாத்தலம் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில், 2020-ல் நின்று கொண்டு ‘தமிழில் குடமுழுக்கு நடத்து’ என்று கெஞ்சிக் கொண்டிருப்பதே கேவலம். தஞ்சைக் கோயில் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் அனைத்துக் கோயில் களிலும் தமிழில் வழிபாடு, குடமுழுக்கு நடைபெறுவது இயல்பாக்கப்படவேண்டும். இவையெல்லாம் போராடிப் பெற வேண்டியவை அல்ல, தானியாக உரிமையாக வர வேண்டியவை.
தமிழக அரசே, போராட்டத்திற்கு இடம் தராமல், நீங்களே முன்வந்து தமிழில்தான் நடத்தப்படும் என அறிவித்து எங்கள் காதுகளில் தேன் பாய்ச்சுங்கள்.
பின்குறிப்பு: ‘தமிழில் நடத்த நாங்கள்தான் ஆணையிட்டோம்’ என்று அரசியல் செய்யவும் உங்களுக்கு வாய்ப்பு! எதற்கு அந்த வாய்ப்பை எதிர்க்கட்சிக்குக் கொடுக்க வேண்டும்? தேர்தல் வருகிறதல்லவா என்று எழுதியுள்ளார்.

இவர் போன்றவர்களும் உணர்ச்சியின் வேகத்தில் ஏதோ காலத்தின் போக்கில் தாங்களும் தமிழகத்தில் பயணிக்கிறோம் என்பதால் தங்கள் கருத்தும் பதிவாக வேண்டுமே என்ற எண்ணத்தில் அள்ளித் தெளிக்கும் நுனிப்புல் கருத்துகள் என்பது வருந்தத்தக்க ஒன்று. ஆகமம், வழிபாடு, பக்தி இவை குறித்த புரிதல் இன்றி வெளிப்படுத்தும் எடுத்தோம் கவிழ்த்தோம் கருத்து என்று கருதலாம்.

உண்மையில், வேதம் வேறு வடமொழி வேறு! வடமொழியில் வேதங்கள் உள்ளன.. அவை ஒலியை மையமாகக் கொண்டவை. தமிழ் மொழி வேறு, தமிழ் மொழியில் அமைந்த தோத்திரங்கள் வேறு.
இன்னும், தோத்திரங்கள் வேறு மந்திரங்கள் சாத்திரங்கள் வேறு! எல்லாவற்றையும் நாம் போட்டுக் குழப்பிக் கொள்வது, நமக்கு இதன் மீதான புரிதல் இன்மையையே வெளிப்படுத்துகிறது.

தமிழ் மந்திரங்கள் என்று எங்கே தனியாக உள்ளனவா? தமிழ் மந்திரங்கள் என்று ஆகமத்தில் என்ன எழுதி வைத்திருக்கிறார்கள்? அதை எவர் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்?

தமிழில் உள்ளவை தோத்திரங்கள்! தேவாரப் பாடல்களை இசைப்பதும் சந்நிதிகளில் சொல்வதும் யாராலும் மறுக்கப் படக் கூடியதல்ல. அவற்றைச் சொல்வதை யாரும் தடுக்கவில்லை!
ஆரியந்தமிழோடு இசையானவன் என்று பெருமானுக்கு புகழே உண்டு!

ஆனால், ஆலய குடமுழுக்கு என்பது, மகுடாகமத்தில் சொல்லப் பட்டுள்ள கிரமப் படி நடத்தப் பெற வேண்டும்! குடமுழுக்கை ஒட்டி செய்யப் படுகின்ற ஒன்று தேவார விண்ணப்பம்
அதுஅவசியம் நடக்க வேண்டும்! தேவார ஓதுதல் அங்கே அவசியம் ஒலிக்க வேண்டும்! நமக்கு முன் உள்ள தமிழ் தோத்திர வழிபாடு அது!

மகுடாகமம் குறித்த புரிதலுக்காக… ஒரு நூலில் இருந்து இந்தப் பகுதி!

மேலும் பிற்கால சோழ அரசர்களும் ராஜ குருவாக இருந்து சிவாச்சாரியார்கள் வழி நடத்தி உள்ளனர்! தஞ்சை பெரிய கோயிலை எழுப்பிய சிவபாத சேகரனான ராஜராஜ சோழனுக்கு, ஈசான சிவ பண்டிதர் சிவாச்சாரியார் ராஜகுருவாக இருந்தார்! கங்கை கொண்ட சோழன் என்று அழைக்கப்படும் ராஜேந்திர சோழனுக்கு சர்வசிவ பண்டிதர் சிவாச்சாரியார் ராஜகுருவாக இருந்தார்! விக்கிரம சோழனுக்கு ஸ்ரீகண்ட சிவாச்சாரியாரும் மூன்றாம் குலோத்துங்கனுக்கு ஈஸ்வர சிவாச்சாரியாரும் ராஜகுருவாக இருந்துள்ளார் என்பதை சோழர் கால கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது! மேலும் ராஜராஜ சோழன் எழுப்பிய தஞ்சை பெரிய கோயில் தலைமை அர்ச்சகர் பவண பிடாரன் என்ற சிவாசாரியார் என்பதும் அங்கு ஆதிசைவரைக் கொண்டு ஆகம விதிப்படி பூஜை செய்வித்தான் என்பதை

………பண்புமிகு
ஆதிசைவர்கள் நீடு மகுடாகமத்தில் ஆரணத்தில்
ஓது இசையில் செய் பூஜை உட்கொண்டு (கன்னி 28)

என்கிற தஞ்சை பெருவுடையார் உலா பாடல் மூலம் அறிய முடிகிறது.

மேலும் இரண்டாம் ராஜராஜ சோழன் கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் தான் எழுப்பிய சிவாலய கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற 108 சிவாச்சாரியார்களின் திருவுருவங்களை அவர்களின் ஊர் பெயரோடு இவ்வாலயத்தின் வடபுற திருச்சுற்று மாளிகையில் வைத்திருப்பதன் மூலம், சோழர்கள் ஆதிசைவ சிவாச்சாரியார்களை எந்த அளவிற்கு போற்றினார்கள் என்பதையும் உயர்வாக மதித்தார்கள் என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்

அதே போல மூன்றாம் குலோத்துங்க சோழனால் எழுப்பப்பட்ட திரிபுவன வீரேஸ்சுரம் என்று அழைக்கப்படும் திருபுவனம் சிவன் கோயிலை தலைமையேற்று பிரதிஷ்டை (கும்பாபிஷேகம்) செய்தவர் ஈஸ்வர சிவாச்சாரியார் என்று பிற்கால சோழர் வரலாறு என்ற நூலில் கல்வெட்டு அறிஞர் சதாசிவ பண்டாரத்தார் கூறுகிறார்.

எனவே ஆகமத்தையும் தமிழையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் ஆகம முறைப்படி பூஜையைச் செய்து, தேவார இசையுடன் தமிழை வெகுவாக மனம் நிறைவுற இசைத்து மகிழலாம்!

  • செங்கோட்டை ஸ்ரீராம்

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version