July 27, 2021, 5:18 pm
More

  ARTICLE - SECTIONS

  கொரோனா தோற்றுவித்த கண்ணீர்! தள்ளாடும் ஊடகங்களும் பத்திரிகையாளர்களும்!

  பிரதமர் மோடி, நிர்வாகங்கள் ஊரடங்கு நேரத்தில் சம்பளத்தை குறைக்க வேண்டாம், வேலையை விட்டு நீக்க வேண்டாம் என்றெல்லாம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

  englishpaper - 1

  கொரோனா ஊரடங்கு ஊடகங்களை வெகுவாக பாதித்திருக்கிறது. அச்சு இதழ்கள் மட்டுமல்லாமல் அனைத்து வகையாக ஊடகங்களும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. ஏற்கெனவே கடும் சவாலை சந்தித்து வந்த‌ அச்சு ஊடகங்களுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

  அச்சு ஊடகங்கள் வீழ்ச்சியை சந்திக்க தொடங்கிய காலத்தில் பெரும் நம்பிக்கையாக தென்பட்ட எலக்ட்ரானிக் ஊடகங்களும் பாதிப்பின் தாக்கத்தை உணரத் தொடங்கியுள்ளன. கடந்த ஒரு மாதமாக அவற்றின் உள்ளடக்கம், தயாரிப்பு, விற்பனை உள்ளிட்டவை நிலை குலைந்து போயிருக்கின்றன.

  கொரோனாவால், தயாரிப்புத் துறை முடங்கி, செய்தி சேனல்களிலும் பொழுதுபோக்கு சேனல்களிலும் பாடல், காமெடி, பயணம், ஆன்மீகம் என ஏற்கெனவே போட்டதையே திரும்பத் திரும்ப ஒளிபரப்பி, நேரத்தைத் தேய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

  டிஜிட்டல் தளங்களும் பெரிதாக கைகொடுக்கவில்லை. கொரோனா சூழலில் வாடிக்கையாளரின் உறைந்த மனநிலையும், மார்க்கெட் வீழ்ச்சியும் டிஜிட்டல் ஊடகத்தால் எதிர்பார்த்த அளவுக்கு நிலைநிற்க முடியவில்லை.

  செய்தி சேனல்களிலும் வறட்சிதான்! ஏஜென்சி மற்றும் நிருபர் வட்டார செய்தி வரத்து குறைந்துவிட்டது. களத்துக்குள் செல்லாமல் அறைக்குள் அமர்ந்திருக்கும் செய்தியாளர்களும், அன்றைய ‘டார்க்கெட்டை’ எட்ட முடியாமல் திணறுகின்றனர்.

  ஊரடங்கால் பெரும்பாலான செய்தித்தாள் விற்பனைக் கடைகளும், ஏஜென்சிகளும் முடங்கி கிடக்கின்றன. ‘நாளிதழ்கள் மூலம் கொரோனா பரவாது’ என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அறிவித்த பின்னரும், வாசகர்கள் அச்சத்தினால் நாளிதழ்களை வீட்டுக்குள் அனுமதிக்க மறுக்கின்றனர். இதனால் எல்லா நாளிதழ்களும் குறைந்த பக்கங்களுடன் வசீகரத்தை இழந்து ‘கடமைக்கு’ வெளிவந்து கொண்டிருக்கின்றன.

  ஏறக்குறைய எல்லா மொழிகளிலுமே…. வார, மாத இதழ்கள் ஆன் லைனுக்கு மாறிவிட்டன. சில இதழ்கள் ஆன்லைனிலும் கிடைக்காத அளவுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

  papers 1 - 2

  இலவசமாக வாட்ஸ் அப்பில் வந்து குவியும் இதழ்களை கூட பெரும்பாலான வாசகர்கள் வாசிப்பதில்லை. நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா நோயின் வீச்சும், ஊரடங்கின் மன அழுத்தமும் பெரும்பாலான வாசகர்களுக்கு வாசிக்கும் மனநிலையைக் கொடுக்கவில்லை என்றே தெரிகிறது.

  இத்தகைய பின்னணியில், கடந்த 43 ஆண்டுகளாக‌ மைசூரில் இருந்து வெளிவந்த ஆங்கில‌ மாலை நாளிதழ் ஸ்டார் ஆஃப் மைசூர் தேதி குறிப்பிடப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. செய்தித்தாள் தயாரிப்பு, பேப்பர் பிரிண்ட் தட்டுப்பாடு, விற்பனை உள்ளிட்ட சிக்கலின் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. சில நாளிதழ்கள் சில பதிப்புகளை நிறுத்திக்கொண்ட நிலையில், இந்த நாளிதழ் முழுமையாக நிறுத்தப்பட்ட செய்தி அபாய சங்காக ஒலிக்கிறது.

  நல்ல வாசகர் தளமும் பாரம்பரியமான நிறுவன பின்புலமும், இயன்ற வரையில் உறுதிப்படுத்திய செய்திகளையும் தாங்கி வெளிவந்து கொண்டிருந்தது. இன்னும் சொல்லப் போனால் இந்தியாவிலே வீட்டுக்கே சென்று போடும் ஒரே ஆங்கில மாலை நாளிதழாகவும் அது இருந்தது. கர்நாடக பத்திரிகையாளர்களுக்கு மைசூரு வட்டாரத்தின் செய்திகளை அறிந்துகொள்ள அந்த நாளிதழ் தான் பிரதான களமாக இருந்ததை ஊடகவியலாளர்கள் கனத்த மனத்துடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

  ஒரு பக்கம் ஊடக நிறுவனங்கள் வருவாய் இழந்து திணறும் வேளையில், நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்த இக்கட்டான நிலையில் இருந்து ஊடகங்கள் மீண்டெழுவது பெரும் சவாலாகவே இருக்கும் என்று தோன்றுகிறது.

  சென்னையில் ஊடகங்களில் பணிபுரியும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்ட நிலையில், அவர்கள் பணிபுரிந்த அலுவலகங்கள் மூடப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப் பட்டு, மூன்று நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளன. அதே நேரம், பத்திரிகையாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அவர்களும் தனிமைப் படுத்தப் பட்டிருக்கிறார்கள்.

  இந்நிலையில், இந்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில் கொரோனா தொற்றில் இருந்து பத்திரிகையாளர்கள் பாதுகாத்துக் கொள்ளப் பட வேண்டும் என்று அறிக்கை வெளியிடப் பட்டது.

  ministry of inb - 3

  இது ஒருபுறம் இருக்க, ஊடகங்கள் நிதி நெருக்கடியில் தள்ளாடி வருவதாகவும், நிதி நெருக்கடி காரணமாக பணியாளர்களின் சம்பளத்தில் கை வைத்துள்ளதாகவும் பகிர் தகவல்கள் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஊடகவியலாளர்கள் தெரிவிப்பவை…

  கொரோனா பரவலை மக்களுக்கு நொடிக்கு நொடி அறிவித்து அலர்ட் செய்து வரும் ஊடக நிறுவனங்கள் இப்போதைய ஊரடங்கால் விற்பனை குறைந்திருக்கிறது. விளம்பரங்கள் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் வேலை நீக்கம், ஊதியவெட்டு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஊடக நிறுவன உரிமையாளர்கள் அறிவிப்பதும் அதிகரித்து வருகிறது..

  ஏற்கெனவே 2016ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பை காரணம் காட்டி இதே போன்று ஆட்குறைப்பு என்ற பெயரால் ஏராளமானோரை வேலைநீக்கம் செய்தனர். தற்போது ஊடக நிறுவனங்கள் ஊரடங்கை காரணம் காட்டி நிறுவன மூடலாக மாற்றப் போவதாக பயமுறுத்துகின்றன.

  இந்தியாவின் மிகச் செழிப்பான ஊடக நிறுவனமான டைம்ஸ் ஆப் இந்தியா குழுமம் பெருமளவில் ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியிருக்கிறது. கம்யூனிஸ்ட் பாணியில் சொல்வதானால் அந்நிறுவனத்தின் செல்வ செழிப்பிற்கு இந்த தொழிலாளிகளை வேலையில் வைத்திருப்பதால் அவர்கள் எதையும் இழக்க மாட்டார்கள், அந்த நிறுவனத்தின் ஒட்டு மொத்த லாபத்தோடு ஒப்பிட்டால் ஊழியருக்கான தொகை என்பது மிகமிக குறைவாகும். இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும் லாபம் சேகரிப்பதற்கும் 20 ஆண்டுகளுக்கு மேலாக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களை கூட கேள்வி கேட்பாரின்றி வெளியேற்றி இருக்கிறது.

  டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம், தான் வெளியிட்டு வரும் ஞாயிறு சிறப்பு இணைப்பு இதழை (சன்டே மேகசின்) மூடிவிட்டது. அதில் பணிபுரிந்த நோனாவாலியா தமது முகநூல் பக்கத்தில், “ எனது மேலதிகாரி பூனம்சிங் ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம், சன்டே மேகசின் பிரிவில் பணிபுரியும் ஒட்டுமொத்த ஊழியர்களையும் வேலையை விட்டு செல்லுங்கள் என்று சொல்லிவிட்டார். 24 வருடங்களாக நான் நேசித்த நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படுகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

  Read: Coronavirus’s Media Bloodbath: The Quint Puts 45 Employees On Non-Paid Leave, TOI Fires Entire Sunday Magazine Team

  ரொம்ப கேஷூவலாக 10 முதல் 30 சதவீதம் வரை சம்பளத்தை வெட்டியது இந்தியன் எக்ஸ்பிரஸ்!

  இந்தியன் எக்ஸ்பிரசின் சிஇஏ ஜார்ஜ் வர்கீஸ் சில நாட்களுக்கு முன்பு தனது ஊழியர்களுக்கு ஒரு குறிப்பை சுற்றுக்கு விட்டுள்ளார். அதில் “நமது விளம்பர வருமானங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. கிடைக்கும் எல்லா தரவுகளும் மிக மோசமான நாட்கள் இனிமேல்தான் வரப்போகின்றன. ஊழியர்கள் 10 – 30 சதவீதம் வரை சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். நிர்வாகத்தின் உயர்நிலையில் உள்ளவர்களும், ஆசிரியர்களும் சம்பளம் இல்லாமலேயே வேலை செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

  பல மாநிலங்களில், நாளிதழ்கள் தங்களது பல பதிப்புகளை மூடியுள்ளன. “நாளிதழ்கள் தினசரி வருவாய் இழப்பை சந்திப்பதாக” இந்தியன் நியூஸ் பேப்பர் சொசைட்டி கூறியிருக்கிறது. இதிலிருந்து மீள
  *காகிதத்தின் மீதான இறக்குமதி வரி 5 சதவீதத்தையும் ரத்து செய்ய வேண்டும்.
  *2 வருடங்களுக்கு வரி விடுமுறை வேண்டும்.
  *அரசு விளம்பரங்களுக்கான கட்டணத்தை 50 சதவீதம் உயர்ந்த வேண்டும்.
  *அச்சு ஊடகங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை 100 சதவீதம் உயர்த்த வேண்டும் என்று கோருகிறார்கள்.

  இதைப் பற்றியெல்லாம் பேசுகிறவர்கள் ஜர்னலிஸ்ட் என்று கெத்தாய் பணி புரியும் தொழிலாளர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று பேசுவதே கிடையாது. சம்பளம் இல்லாத விடுமுறையை திணிக்கும் தி குவிண்ட்இணைய இதழ் தி குவிண்ட் அதனுடைய ஊழியர்களில் 50 சதவீதம் பேரை சம்பளம் இல்லாத விடுப்பில் விரட்டி இருக்கிறது. மற்றவர்களுக்கு சம்பளக் குறைப்பை செய்திருக்கிறது.

  காட்சி ஊடகத்திலும் கொடுமைதான்! நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான காட்சி ஊடக ஊழியர்கள் தங்களது வாழ்க்கையை பணயம் வைத்து கொரோனா வைரஸ் பரவல் குறித்தும், ஊரடங்கின் தாக்கம் குறித்தும் செய்தி சேகரிக்கிறார்கள். சென்னையிலுள்ள சத்யம் டிவி -யில் பணியாற்றும் ஊழியர்கள் 25க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

  இச்சூழலிலும் ஊழியர்களாக களத்தில் செயல்படும் ஊடகவியலாளர்களுக்கு ஊக்கம் தர வேண்டும். மாறாக, உடனடி சம்பள வெட்டும், வேலையிலிருந்து விரட்டுவதும் ஊடகத் துறையினரின் ஊக்கத்தை பாதிக்கிறது. குறிப்பாக, தன் சொத்தை விற்று நிர்வாகத்தை நடத்தி சாதனை புரிந்த விகடன் மேலாண் இயக்குனரும் ஆசிரியருமாக இருந்த பாலசுப்பிரமணியன் கட்டிக் காத்த நிர்வாகம், தற்போது ஒரு கடிதத்தை அந்த ஊழியர்களுக்கு அனுப்பியிருக்கிறது.

  media - 4

  அக்கடிதத்தில் … அன்புள்ள விகடன் குழும பணியாளர்களே, உலகம் இதுவரை பார்த்திராத கொடுமையான கொரோனா நோய் பரவியிருக்கும் சோதனையான இத்தகைய காலகட்டத்தில் தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் பாதுகாப்பாக இருக்க, நான் பிரார்த்திக்கிறேன்.

  நம்முடைய மீடியா துறைக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. என்றாலும் நம் அனைவரின் பாதுகாப்புக் கருதி, மார்ச் 22 -ம் தேதியே ‘வீட்டிலிருந்து பணி’ என்பதை நாம் நடைமுறைக்குக் கொண்டுவந்துவிட்டோம்.

  கடந்த ஒரு மாதகாலமாக விகடனின் நலன்விரும்பிகள், விளம்பரதாரர்கள், முகவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், நிர்வாகப் பணியாளர்கள், ஓவியர்கள், கட்டுரையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் என அனைவருடனும் இணைந்து சிறப்பாகப் பணியாற்றி வருகின்றீர்கள். தனித்தனியே இருந்தாலும், பற்பல கோணங்களில் இணைந்தே சிந்தித்து, நன்கு உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள், கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் எனக் குறிப்பிடத்தக்க வகையில் பங்களித்து வருகிறீர்கள். உங்களின் படைப்புகள், நம் வாசகர்கள் மற்றும் விளம்பரதாரர்கள் என பலதரப்பட்டவர்களின் பாராட்டுதல்களையும் பெற்றுவருகின்றன என்பதைப் பெருமையுடன் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

  இந்த இக்கட்டான தருணத்தில்… கடமை என்பதையும் தாண்டி, சிறப்பாகச் செயல்பட்டதன் வெற்றியே… நமக்குக் கிடைத்திருக்கும் இந்தப் பாராட்டுகள். இதற்காக அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இதற்கிடையே, விகடன் குழுமத்தின் முக்கியமான நான்கு பிரிவுகளில், மூன்று பிரிவுகள் இந்த ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதையும் நீங்கள் நன்றாகவே அறிந்திருப்பீர்கள்.

  94 ஆண்டுகளாக நமது நிறுவனத்தின் இதயமாகச் செயல்பட்ட நம் இதழ்கள் கடந்த ஒரு மாதமாக வாசகர்களை நேரடியாகச் சென்றடைய முடியவில்லை. டெலிவிஷன் தொடர்கள், காலவரையின்றி நிறுத்தப்பட்டுவிட்டன. விகடனுக்குக் குறிப்பிடத்தக்க வருவாயைத் தரக்கூடிய – வாசகர்களுக்குப் பயனளிக்கக்கூடிய விகடனின் பிரத்யேக நிகழச்சிகள் மற்றும் விகடன் குழும விருதுகள் உள்ளிட்டவையின் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கிறது.

  சோதனையான இந்தக் காலகட்டத்தில் நம்முடைய டிஜிட்டல் பிரிவு மட்டுமே சற்று ஆறுதல் தரும்விதத்தில் நடைபோடுகிறது. டிஜிட்டல் என்பதைப் பொறுத்தவரை, இதுகாலம் வரை அதில் நாம் செய்துவந்த முதலீடுகள் தற்போது ஓரளவுக்கு வெளிச்சத்தைக் காணஆரம்பித்துள்ளன. ஆனால், இந்த டிஜிட்டல் வளர்ச்சி வரவிருக்கும் காலகட்டத்தில் பெருகினாலும், நம்முடைய ஆதார ஸ்ருதியாக இருக்கும் இதழ்கள் அனைத்தும் பழைய நிலைக்குத் திரும்பினாலும்கூட, இந்தப் புதிய உலகில் நம்முடைய அடுத்தகட்ட பாய்ச்சல்களுக்கு அவற்றால் போதுமான அளவுக்குத் தோள்கொடுக்க முடியாது என்பதே உண்மை.

  கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நானும் உங்களுடைய துறைத் தலைவர்களும் அலுவலகச் செலவினங்களை குறைப்பதற்காகக் கடும்முயற்சிகள் செய்துவருகிறோம். கூடவே, வருவாயைப் பெருக்குவதற்கான பல்வேறு முயற்சிகளையும் புதுப்புது யுக்திகளையும் ஆலோசித்துச் செயல்படுத்தவும் திட்டமிட்டு வருகிறோம்.

  தற்போதைய சூழலிலிருந்து நாம் மீள்வதற்கு செலவினங்களைக் குறைக்கவேண்டும் என்பதுதான் நம் கண்முன்னே தெரியும் உடனடி சர்வரோகநிவராணி. இதற்காக நம்முடைய பல்வேறு துறைகளின் தலைவர்கள் (Leaders), தங்களுடைய சம்பளத்தை குறைத்துக்கொள்ள முன்வந்துள்ளனர். இது, மிகவும் ஆக்கப்பூர்வமான ஒரு முடிவு.

  இதைப் பெருமையுடன் நோக்கும் அதே தருணம், அனைத்துத் துறை தலைவர்களுடனும் ஆலோசித்து, கனத்த இதயத்துடன் மற்றுமொரு முடிவையும் எடுத்துள்ளோம். அதாவது, பணியாளர்கள் ஒவ்வொருவரின் மாதாந்திரச் சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட ஒரு தொகையை தற்காலிகமாக ஒத்திவைப்பது என்பதுதான் அந்த முடிவு. இந்த 2020-ம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரை உள்ள மூன்றுமாத காலத்துக்கு இந்தச் சம்பள ஒத்திவைப்பு முதற்கட்டமாக நடைமுறையில் இருக்கும். நாட்டின் பொருளாதாரம் மற்றும் நம் அலுவலகத்தின் செயல்பாடுகள் ஆகியவற்றைக் கனக்கில் கொண்டு ஜூலை 2020-.ல் சம்பள ஒத்திவைப்பு மறுஆய்வுக்கு உட்படுத்தப்படும். அதனடிப்படையில் சம்பள ஒத்திவைப்பு பற்றி முடிவெடுக்கப்படும்.

  சம்பள ஒத்திவைப்பு என்பது, நிறுவனம் லாபத்துக்குத் திரும்பி, பழையபடி பணவரத்து அதிகரித்த பின் வாபஸ் பெறப்படக்கூடிய வகையிலான ஒரு திட்டமே! இத்தகைய முயற்சிதான், எந்தவொரு நிறுவனத்துக்கும் இதுபோன்ற சூழல்களில் உடனடியாகக் கைகொடுக்கக்கூடிய ஒரு யுக்தி. நம்முடைய அலுவலகத் துறைத் தலைவர்கள், நிறுவனத்தின் நிதிநிலையை நன்கு அறிந்தவர்கள். சம்பள ஒத்திவைப்பு எந்தமாதிரியான சூழலில் மறுஆய்வு செய்யப்படும் என்பதையும் அவர்கள் நன்றாக அறிந்தவர்களே. வெகுவிரைவில் சம்பள ஒத்திவைப்பு திரும்பப் பெறப்படும் வகையில் நிறுவனத்தின் நிதிநிலையை உயர்த்த அனைவரும் பாடுபடுவோம்.

  நிதி பாதுகாப்பு என்பது ஒவ்வொரு குடும்பத்தையும் திறம்பட நடத்துவதற்கு எவ்வளவு முக்கியம் என்பதை ஒரு குடும்பத் தலைவனாக நானும் நன்கு அறிவேன். நாம் அனைவருமே எதிர்பாராத, சிக்கலான ஒரு காலகட்டத்தைக் கடக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். செலவினங்களைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகள் மட்டுமே இதற்கு உடனடித் தீர்வு என்பதைத்தான் அனைவருமே நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

  இந்தக் கடுமையான சூழல் மிகவிரைவில் மறைந்து புதியஉலகம் தோன்றும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. அத்தகைய புதியஉலகுக்கு கட்டியங்கூறுவதுபோல நம்முன்னே புதுப்புது யதார்த்தங்கள் இப்போதே வரிசைகட்ட ஆரம்பித்துள்ளன. அவற்றையெல்லாம் எதிர்கொள்ள முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலிமையுடன் செயல்பட தொடங்குவோம், வளமான புதிய உலகத்தில் தடங்கல்கள் இன்றி நாம் பயணிப்போம். நம்முடைய வாசகர்கள், விளம்பரதாரர்கள் உள்ளிட்ட வாடிக்கையாளர்களின் தேவையறிந்து புத்தாக்கங்களுடன் கடுமையாகவும் புத்திசாலித்தனமாகவும் செயலாற்றி, புதிய உலகத்தின் சவால்கள் அனைத்தையும் எதிர்கொண்டு சாதிப்போம்.

  ‘வலிமையானவர்கள், புத்திசாலித்தனமானவர்கள் என்பதால் மட்டும் இவ்வுலகில் பிழைத்திருக்க முடியாது.

  மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்வதாலும் மட்டும்தான் எப்போதுமே பிழைத்திருக்க முடியும்’

  என்று சார்லஸ் டார்வின் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை மீண்டும் ஒருமுறை இந்த உலகம் நேரடியாக உணர்ந்து கொண்டிருக்கும் காலகட்டமிது

  நாமும் மாற்றங்களுக்கு உட்படுவோம்… வெற்றிபெறுவோம். நாம் எதிர்பார்ப்பதைவிட முன்கூட்டியே வெற்றியைக் கொண்டாடும் நிலையை நோக்கி முன்னேறுவோம்.

  அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்…வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். தேவைப்படும் சமயத்தில் மட்டும் தக்க பாதுகாப்புக் கவசங்களுடன் வெளியில் நடமாடுங்கள்.

  கொரோனா பரவலை தடுப்பதற்காகத். தங்களின் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரையும் மனதாரப் போற்றுங்கள்!

  நன்றி அன்புடன் பா.சீனிவாசன். இயக்குநர் விகடன் மீடியா சர்வீசஸ் (பி) லிமிடெட் – என்று குறிப்பிட்டிருக்கிறார்.

  இத்தனைக்கும் பிரதமர் மோடி, நிர்வாகங்கள் ஊரடங்கு நேரத்தில் சம்பளத்தை குறைக்க வேண்டாம், வேலையை விட்டு நீக்க வேண்டாம் என்றெல்லாம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

  அந்த வேண்டுகோளை மீறும் மற்ற நிறுவனங்கள் குறித்து ஊடகங்களில் போட்டு விளம்பரம் தேடும் அதே ஊடகங்கள், அதே வேலையில் ஈடுபட்டிருப்பதால், நிறுவனங்களில் நடக்கும் இத்தகைய முறைகேடுகளைக் கூட சுட்டிக் காட்ட முடியாத சூழலுக்கு தள்ளப் பட்டிருப்பது, காலத்தின் கோலம்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  26FollowersFollow
  74FollowersFollow
  1,318FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-