Home தமிழகம் அத்தியாவசியப் பொருள் கடைகள் முழுநேரமும் திறந்திருக்கலாமே!

அத்தியாவசியப் பொருள் கடைகள் முழுநேரமும் திறந்திருக்கலாமே!

கடைகள் முழு நேரமும் திறந்திருந்தால்.. கொரோனா பரவலைத் தடுக்கலாம் என்ற கருத்துகள் எழுந்துள்ளன. காரணம், குறிப்பிட்ட நேரத்தில் கடைகள் திறந்திருக்கும் போது, அந்த நேரத்தில் சென்று வரலாம் என்ற கட்டுப்பாடுகள் தளர்வு இருக்கும் போது, ஒட்டுமொத்தமாக மக்கள் குவிந்து சமூக விலகல் கடைப்பிடித்தலில் தவறிவிடுகின்றனர். அந்த நேரத்தில் பொருள்களை எப்படியாவது வாங்கிக் கொண்டு சென்றாக வேண்டும் என்ற தீவிர முனைப்புதான் அப்போது அவர்களிடம் தென்படுகிறது.

தற்போது, அரசின் கட்டுப் பாடுகள் தளர்வு நேரத்தில், சென்னை நகரின் அனைத்து மளிகை, காய்கறி, பழங்கள் விற்பனை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது! அடுத்த மூன்று நாட்களுக்கு முற்றிலும் மூடப் படும், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 5 மாநகராட்சிகள் முடங்கிப் போகும் என்ற முன்னெச்சரிக்கை அச்சத்தில், மக்கள் பெருமளவில் கூடுவதை தடுக்க இயலாமல் போகிறது.

திமுக தலைவர் ஸ்டாலின் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் அத்தியவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை இன்று மட்டும் அதிகரிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, முழு ஊரடங்கு எதிரொலி காரணமாக, நாளை முதல் 4 நாட்களுக்கு கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளதாக வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கோயம்பேடு காய்கறிச் சந்தை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும், நாளை முதல் புதன் கிழமை வரை கோயம்பேடு சந்தையில் கடைகள் திறக்கப்படாது என்றும், மொத்த விற்பனைக் கடைகள் மட்டும் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட் 4 நாள் விடுமுறை என்று வர்த்தகர்கள் அறிவித்துள்ள போதும், கோயம்பேடு வணிக வளாகம் வழக்கம் போல் செயல்படும் என்று சிஎம்டிஏ நிர்வாக அதிகாரி கார்த்திகேயன் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். அது போல், சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூரில் இன்று மட்டும் பிற்பகல் 3 மணிவரை கடைகள் திறந்திருக்க அனுமதி என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் 144 தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாவரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே வருவதன் மூலம் வைரஸ் தொற்று பரவக்கூடும் என்பதால் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திருநெல்வேலி காவல்துறையினரின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுவரை 144 தடை உத்தரவை மீறி காரணம் இல்லாமல் வெளியே சுற்றித் திரிந்த 4062 நபர்கள் மீது 2875 வழக்குகள் பதிவு செய்து அவர்களிடமிருந்து 2729 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய வகையில் இதுவரை 1170 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1540 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் 4963 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தென்காசி மாவட்ட காவல் துறையினர் கூறுகின்றனர்.

ஏப்.26 நாளை முதல் செங்கல்பட்டு மாவட்டத்தின் சில பகுதிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப் படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம் நகராட்சிகள், 5 பேரூராட்சிகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருப்பதாகவும், ஏப்ரல் 26 காலை 6 மணி முதல் ஏப்ரல் 29 இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது அரசு.

பிருங்கிமலை ஊராட்சி ஒன்றியம், கோவிலம்பாக்கம் உட்பட 15 கிராம ஊராட்சிகளிலும் முழு ஊரடங்கு உத்தரவு செயல்படுத்தப் படும் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதுபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில், சென்னை மாநகர எல்லைக்குள் வரும் பகுதிகளில் முழு ஊரடங்கு என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் நாளை ஒருநாள் முழு ஊரடங்கு என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. நகரம், கிராமம் என அனைத்து இடங்களிலும் மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப் படுவதாகவும், மாவட்டம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் கிருமிநாசினி தெளிக்க முடிவு செய்யப் பட்டுள்ளதாகவும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

பெரம்பலூரில் இன்று முதல் ஏப்.27 வரை 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு என்றும், காய்கறி உட்பட எந்த கடைகளும் திறக்கத் தடை விதிக்கப் படுவதாகவும், பொதுமக்கள் 3 நாட்களுக்கு வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப் பட்டுள்ளது. முன்னதாக, பெரம்பலூர் பகுதியில் புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் இந்த நடவடிக்கை என்று கூறப் பட்டுள்ளது.

madurai shopkeepers1

ஏப் 24 நேற்று மதுரையில் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு வியாபாரிகள் தர்ணா நடத்தினர். காரணம், வண்டிகளுக்கான பாஸ் – அனுமதிச்சீட்டு வாங்கத்தான் அப்பெரும் கூட்டம். கொரோனா சமூக விலகலை மறந்து மக்கள் கூடிய கூட்டம் பெருமளவில் எதிரொலித்தது. இதனால் வண்டிகளுக்கான பாஸ் கட்டுப்பாட்டை ஒத்திவைப்பதாக ஆட்சியர் அறிவித்தார்.

இதனிடையே, தென்காசி மாவட்டம் வாகனங்களுக்கு வண்ண பாஸ்கள் அளிக்கப் படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இளஞ்சிவப்பு நிற பாஸ் வைத்திருப்பவர்கள், திங்கள், வியாழன் அன்று வெளியில் வரலாம். நீல வண்ண பாஸ் வைத்திருப்பவர்கள், செவ்வாய், வெள்ளி அன்று வெளியில் வரலாம், பச்சை நிற பாஸ் வைத்திருப்பவர், புதன், சனி அன்று வெளியில் வரலாம் என்று தெரிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம். அதே நேரம், ஞாயிறு அன்று எவரும் வெளியே வரக்கூடாது என்று கட்டளையிட்டிருக்கிறது.

இவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்தாலும், கட்டுப்பாடுகளை ஏமாற்றி அல்லது, சட்டத்துக்குக் கட்டுப்படாததே தங்களில் கௌரவம் என்று செயல்படும் கும்பல் வன்முறைக் கலாசாரத்தில் திளைப்பவர்கள் அதிகாலை 5 மணிக்கு கடை திறந்து ஹார்ட்வேர் சாதனங்கள், மின் சாதனங்கள் விற்பனை செய்வதும், சிலர் கடைகளின் பின்வாசல் வழியாக விற்பனையில் ஈடுபடுவதும் கண்கூடு! அதுபோல், ஹோட்டல்கள் புரோட்டா ஸ்டால்கள் இறைச்சிக் கடைகள் இயங்குவதும், அதைத் தடுப்பதற்கு காவல் துறையினரால் இயலவில்லை என்றும் பலர் சமூகத் தளங்களில் புகார்களைத் தெரிவித்து வருகின்றனர்.

எனவே, இப்படி குறிப்பிட்ட நேரத்தில் கடைகளில் அனைவரும் குவிவதற்கு பதில்… குறிப்பிட்ட பகுதியினர் இந்த இந்த நேரங்களில் அத்தியாவசிய பொருள்கள் வாங்க வெளியே வரலாம் என்று கூறி, நேர அளவைக் கொடுத்து, மக்கள் ஒரே நேரத்தில் ஒன்றாக ஒரே இடத்தில் குவிவதைத் தடுக்க அரசு முன்வர வேண்டும். அதற்கு காலை முதல் மருந்து, பால், அத்தியாவசியப் பொருள்கள் கடைகளைத் திறந்து வைக்கலாம்தான்!

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version