― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்கமல் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஒரே குரலில் கர்நாடக இசைக் கலைஞர்கள்!

கமல் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஒரே குரலில் கர்நாடக இசைக் கலைஞர்கள்!

- Advertisement -

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகளை நடிகர் கமல்ஹாசன் அவமானப் படுத்தியுள்ளதாக கர்நாடக இசைக் கலைஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

கமல் ஹாசனும் விஜய் சேதுபதியும் ஓபன் பண்ணா தளத்துடன் இணைந்து இன்ஸ்டகிராமில் நேரலையாக உரையாடினார்கள். அப்போது, எப்படிப்பட படங்களைச் செய்ய வேண்டும் என எப்படி முடிவெடுத்தீர்கள் என்கிற கேள்வியை கமலிடம் விஜய் சேதுபதி கேட்டார்.

அதற்கு கமல் பதில் அளித்ததாவது: சகலகலா வல்லன் படத்தை எல்லோரும் திட்டினார்கள். பாலுமகேந்திரா திட்டினார், நானும் சேர்ந்து திட்டினேன். ஏனெனில் நண்பர்கள் எல்லோரும் இப்படித் திட்டுகிறார்களே என அவமானமாகப் போய்விட்டது. பிறகு யோசித்துப் பார்த்தேன், அந்த வழியை நான் தொடவில்லை என்றால், ராஜ்கமல் நிறுவனத்தையே ஆரம்பித்திருக்க முடியாது.

இது டிக்கெட் போட்டு செய்கிற வியாபாரம் தானே. தர்மத்துக்கு நான் பாடும் பாட்டில்லையே. தியாகய்யர் எப்படி ராமனைப் போற்றி தஞ்சாவூர் வீதியில் பிச்சையெடுத்துப் பாடினாரோ அப்படிப்பட்ட கலையில்லையே. எனக்கு கார் வாங்க வேண்டுமென்று ஆசை, டிக்கெட் விற்கவேண்டும் என்று ஆசை. எம்.ஜி.ஆர். மாதிரி, சிவாஜி மாதிரி ஆகவேண்டும் என்று ஆசை.

பிறகு மக்களை மகிழ்விக்கமாட்டேன் என்று என்ன வீம்பு? அவர்களுக்கு என் கலை புரியவில்லையென்றால் அவர்களை அங்குக் கொண்டுவரவேண்டுமே தவிர, நான் போய் தனியாகக் காட்டில் மகரிஷியாக உட்கார்ந்து கொள்ள முடியாது, அவர்களுடன் சேற்றில் குளித்தும் குளிக்காமலும் இருக்க முடியாது. அவர்களுடைய நண்பனாகவும் ஆசிரியனாகவும் விதூஷகனாகவும் கோமாளியாகவும் எல்லாமுமாக நாம் மாறவேண்டும் என்று கூறினார்.

இந்நிலையில் சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகளைப் பற்றி கமல்ஹாசன் இழிவாகப் பேசியதாகக் கர்நாடக இசைக் கலைஞர்கள் கமல்ஹாசனுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். மேலும் கமல் தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கமலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாடகர் பாலக்காடு ராம்பிரசாத் செஞ்ச் . ஓஆர்ஜி இணையத்தில் தொடங்கிய ஆன்லைன் பெட்டிஷனில் ஆயிரக்கணக்கானோர் கையெழுத்திட்டு, தங்கள் கோரிக்கைக்கு இணைய வழி ஆதரவு திரட்டி வருகிறார்கள்

https://www.change.org/p/kamal-hassan-condemning-kamal-hassan-s-statement-on-thyagaraja-from-carnatic-musicians?recruiter=false&utm_source=share_petition&utm_medium=facebook_messenger_mobile&utm_campaign=psf_combo_share_message&recruited_by_id=737f1650-8f6c-11ea-9870-a378155ab386&use_react=false

இந்த இணையதளக் குறிப்பில், ராம்ப்ரசாத் குறிப்பிட்டிருப்பதாவது…

கமல்ஹாசனுக்கு

இந்தக் குறிப்பு சமூக ஊடகங்களில் மே 2020 இல் சினிமா துறையைச் சேர்ந்த மற்றொரு கலைஞருடனான (விஜய் சேதுபதி) உங்கள் சமீபத்திய நேர்காணலைக் குறிக்கிறது!

அதில் புனித ஸ்ரீ தியாகராஜரைப் பற்றி நீங்கள் அவதூறாக குறிப்பிட்டுள்ளீர்கள், அவரை முழு கர்நாடக இசைத் துறையும் (ஓரிருவரைத் தவிர) வணங்குகிறது. இந்தக் கலைக்கு தெய்வீக மற்றும் மகத்தான பங்களிப்பு அளித்தவர். அவரைப் பற்றிய உங்கள் கேலிப் பேச்சை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். ‘ராமரைப் போற்றிப் பாடி பிச்சை எடுத்தார்’ என்ற பேச்சு கண்டனத்துக்குரியது.

கர்நாடக இசைக்கலைஞர் ஒவ்வொருவரும், வெளி உலகத்துடனான தங்கள் தொடர்பை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் என்பதை ஒரு பொருட்டாக எண்ணாமல், கர்நாடக இசையில் ஸ்ரீ தியாகராஜரின் பங்களிப்புக்காக, அவர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தின் ஒவ்வொரு துளிக்கும் அவர்கள் தியாகராஜருக்கு கடமைப்பட்டிருக்கிறார்கள் என்பதை தங்களுக்குள் ஆழமாக அறிவார்கள்.

இதுதொடர்பாக, எந்தவொரு துறையிலும் ஒரு நபரின் கணிசமான பங்களிப்புகளின் காரணமாக எத்தனை ஆயிரம் அல்லது மில்லியன் குடும்பங்களின் வருமானம் உருவாக்கப்படுகிறது என்பதற்கு, இவருக்கு இணையாக வேறு ஒருவர் இருப்பதைக் கண்டுபிடிப்பது கடினம்!

தியாகராஜர் மற்றும் ராமர் குறித்து நீங்கள் சுட்டிக் காட்டிப் பேசியது, ஒரு குறிப்பிட்ட மதம் / சாதி மீது எதிர்மறையாக சுட்டிக்காட்டப்பட்ட உள்நோக்கத்தைக் குறிக்கிறது! இது உண்மையில், தியாகராஜர் மீது விசுவாசம் கொண்டிருப்பவர்களுக்கு நேர்ந்துள்ள அவமானம்! கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் இந்த தத்துவத்தின் பால் பட்ட புனிதர்கள் பலர் இருந்ததை நாம் அனைவரும் அறிவோம். தங்களது வாழ்வாதாரத்தை சம்பாதித்த பல்வேறு மதங்களைச் சேர்ந்த அறிஞர்கள் தாங்கள் சேர்ந்த மதங்களின் கடவுள்களைப் போற்றிப் பாடிப் புகழ்ந்துரைப்பதை ‘பிச்சை’ என்று தாங்கள் குறிப்பிடுவது போல் குறைத்துச் சொல்ல முடியாது. மேலும், அவர் செய்த உஞ்ச்விருதி அவரது பக்தி காரணமாக இருந்தது, அதற்கு வெளியே வேறு எந்த எண்ணமும் இருந்ததில்லை.

தியாகராஜர் போன்ற ஒரு புனித ஆத்மாவின் உருவகத்தை எவராலும் களங்கப்படுத்த முடியாது. இருப்பினும் குறைந்தது சில நம்பிக்கை அடிப்படையிலான சித்தாந்தங்களை மேற்கோளிட்டுக் காட்டி தாங்கள் வசதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறி எதிர்க்கும் மக்களால், முன்வைக்கப் படும் தியாகராஜரைப் பற்றிய கருத்து, சமூகத்தின் ஒரு பிரிவினரை மிகவும் புண்படுத்தும்!

எவ்வாறாயினும், கர்நாடக இசைக் குடும்பத்தைச் சேர்ந்த கலைஞர்கள் நாங்கள் அனைவரும் மதிக்கும் ஒரு புனித ஆத்மாவின் மீதான கூர்மையான ஒரு கருத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்! மேலும் வேண்டுமென்றோஒ அல்லது வேறுவிதமாகவோ அவர் மீது நீங்கள் செய்த மோசமான மற்றும் வெறுக்கத்தக்க கருத்துக்களுக்காக நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்… என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இதற்கு 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு, கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version