December 5, 2021, 6:40 am
More

  தமிழ்த்தாய் வாழ்த்து: தெரிந்த பாடல், தெரியாத உண்மைகள்

  thamizannai - 1

  1. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் அடிப்படையில் வந்தே மாதரம் பாடலைப் போன்றே வாழும் நிலப்பரப்பையும் அது சார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் தாயாக, தேவியாக உருவகிக்கிறது. பங்கிம் சந்திரர், சுந்தரம்பிள்ளை உட்பட பல இந்தியக்கவிஞர்கள் அந்த தேசிய எழுச்சிக் காலகட்டத்தில் அத்தகைய பாடல்களைப் புனைந்தனர். வந்தே மாதரம் குறித்து அனாவசியமான சர்ச்சையை உண்டாக்கி அதனை எதிர்க்கும் இஸ்லாமிய மதவெறியர்களின் தரப்பை பல தமிழ்நாட்டு முஸ்லீம்கள் ஆதரிப்பார்கள். திராவிட இயக்க, இடதுசாரி கும்பல்களும் அதற்கு ஒத்து ஊதுவார்கள். ஆனால், அதே போன்ற, சொல்லப் போனால் அதைவிடவும் வெளிப்படையாக (கீழுள்ள குறிப்புகளைப் பார்க்கவும்) இந்துமதக் கூறுகளை உள்ளடக்கிய தமிழ்த்தாய் வாழ்த்தை மட்டும் எதிர்க்க மாட்டார்களாம், ஏற்பார்களாம்! பண்பாட்டு அறிவீனத்தில் விளைந்த குழப்பவாதம், இரட்டைவேடம், போலித்தனம்.

   

  2. நீராரும் கடலுடுத்த நில மடந்தை என்பது ’ஸமுத்ர வஸனே தேவி’ என்ற பதத்தின் நேரடி மொழிபெயர்ப்பன்றி வேறில்லை. கடலை ஆடையாக உடுத்த பூமி என்ற தொன்மையான படிமம் வேதங்களிலிருந்து தான் வருகிறது. குறிப்பாக, அதர்வவேதத்திலுள்ள பூமி சூக்தம் இதுபோன்ற பற்பல அழகிய உவமைகளையும் போற்றுதல்களையும் பூமியைக் குறித்துக் கூறிச்செல்கிறது.

  3. பரதகண்டம் என்ற சொல் புராண காலத்தியது. இன்றும் சுபகாரியங்களுக்கான சங்கல்பங்களில் ‘ஜம்பூத்வீபே பாரதவர்ஷே பரதகண்டே’ என்று கூறப்படுகிறது. தக்கணம் என்பது தட்சிணம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லின் தமிழ் வடிவம் தான். இந்தியா, தென்னிந்தியா, தமிழகம் ஆகியவற்றைக் குறிக்க முறையே பரதகண்டம், தட்சிணாபதம், திராவிடம் ஆகிய மூன்று புராண சம்ஸ்கிருதச் சொற்களை பாடலாசிரியர் பயன்படுத்தியிருக்கிறார். மேலும், திராவிடம் என்பதை இனம் சார்ந்ததாக இல்லாமல், நிலப்பரப்பு சார்ந்ததாக மட்டுமே அவர் கொண்டிருக்கிறார், ‘திராவிட உத்கல பங்கா’ என்று ஜனகணமன பாடலில் வருவது போல.

  சீராரும் வதனமெனத் திகழ் பரதக்கண்டமிதில்
  தக்கணமும் அதிற்சிறந்த திராவிடநற் திருநாடும்..

  4. தரித்த நறும் திலகமுமே: பெண்கள் நெற்றியில் இடும் திலகம் என்பது இந்துப்பண்பாட்டின் ஆதாரமான மங்கலச்சின்னம். மேலும், நமது கவிமரபில், திலகம் என்பது ஒரு பொருளின் உயர்வையும் மேன்மையையும் எடுத்துக் காட்டுவதற்காகக் கூறப்படும் சொல்.

  புனைகழல் இராகவன் பொன் புயத்தையோ?
  வனிதையர் திலகத்தின் மனத்தின் மாண்பையோ?

  என்று கம்பராமாயணத்தில் வருகிறது (சுந்தர காண்டம், காட்சிப் படலம்). ரகுகுலதிலகன் என்று ராமனைப் புகழ்வார்கள். நடிகர் திலகம், மக்கள் திலகம் போன்ற பிரபல பட்டப் பெயர்களும் கூட இந்த இந்துப் பண்பாட்டு உவமையிலிருந்து தான் வருகின்றன.

  5. வாழ்த்துதுமே என்பது ’வந்தே’ என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு ஈடான ஒன்று தான். இப்போதைய தமிழில் அது பொதுவான ஒரு சொல்லாக ஆகிவிட்டாலும், தமிழ் இலக்கியங்களில் தெய்வங்களைப் போற்றுவதற்கான ஒரு சொல்லாகவே இருந்துள்ளது. ’மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்’ என்பது பெரிய புராணம்.

  6. தமிழ்த்தாயைப் போன்றே தெலுகு தல்லி, கன்னட மாதே ஆகிய கருத்தாக்கங்களும் உள்ளன. உதாரணமாக, புகழ்பெற்ற கன்னடக் கவிஞர் குவெம்பு எழுதிய கர்நாடக வாழ்த்துப் பாடல் ‘ஜய பாரத ஜனனிய தனுஜாதே ஜய ஹே கர்நாடக மாதே’ என்று தொடங்குகிறது. பரதகண்டத்தை வதனமாகவும் தமிழ்நாட்டைத் திலகமாகவும் சுந்தரம்பிள்ளை வர்ணித்தது போலவே, பாரதத்தாயின் மகளாக கன்னடத்தாய் விளங்கிறாள் என்று குவெம்பு பாடுகிறார்.

  7. பாடலின் முழுவடிவத்தில் கீழ்க்கண்ட பகுதியும் சேர்ந்தே உள்ளது. அரசு ஏற்றுக்கொண்ட வடிவத்தில் இவ்வரிகள் நீக்கப் பட்டுள்ளன.

  பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
  எல்லையறு பரம்பொருள் முன்இருந்தபடி இருப்பதுபோல்
  கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
  உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
  ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
  சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே.

  வேதாந்த தத்துவத்தில் பிரம்மத்தின் இயல்பாகக் குறிப்பிடும் சிறப்புத் தன்மையை தமிழின் மேல் ஏற்றிப் பாடுவதாக முதல் இரண்டு அடிகள் அமைந்துள்ளன. கோடகநல்லூர் சுந்தர சுவாமிகளின் சீடரும் அத்வைதியுமான சுந்தரம்பிள்ளை இத்தகைய ஒரு உவமையைக் கையாண்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

  கன்னடமும் தெலுங்கும் மலையாளமும் தமிழின் உதரத்திலே உதித்தன என்ற கருத்தை இந்த மொழிகளைப் பேசுபவர்களிடம் போய் அப்படியே கூறினால் அது நிராகரிப்புக்கு உள்ளாகும். மொழியியல் ரீதியாகவும் அந்தக் கருத்து முழுமையாக ஏற்புடையதன்று. ”கன்னடமும் தெலுங்கும் மலையாளமும் தமிழின் மகள்கள். அவர்கள் மூன்று பேரையும் பழங்காலத்தில் சில சமூகங்களில் இருந்த வழக்கப்படி சம்ஸ்கிருதம் என்ற ஒரே ஆண்மகனுக்கு மணம் செய்து கொடுத்து விட்டார்கள்” என்று ஏ.கே.ராமானுஜன் கூறிய உவமை இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன் 1f642 - 2

  ஆரியம் போல் உலகவழக்கொழிந்து என்று எழுதியிருப்பது, அறிஞரான சுந்தரம்பிள்ளையும் கால்டுவெல் உருவாக்கிய ஆதாரமற்ற திராவிட இனவாதத்திற்கும் மொழிக் காழ்ப்புணர்வுக் கொள்கைகளுக்கும் ஆட்பட்டுக் கொண்டிருந்தார் என்பதைக் காட்டுகிறது. உண்மையில், ஆரியம் என்று இங்கு சுட்டப்படும் சம்ஸ்கிருத மொழி உலகவழக்கு என்று சொல்லப் படும் பாமரர்களின் பேச்சு வழக்குத் தளத்தில் எப்போதுமே இயங்கியதில்லை என்னும்போது, அது எப்படி அழிந்தொழியும்? பல சம்ஸ்கிருத நாடகங்களிலேயே கூட, இடையிடையே வரும் உரையாடல்கள் பிராகிருதம், அபப்ரம்சம் முதலான பேச்சு மொழிகளிலும், கவிதைகள் சம்ஸ்கிருதத்திலும் உள்ளதை நாம் காணமுடியும். அந்தப் பேச்சு மொழிகளும் இன்றைய வட இந்திய மொழிகளும் எல்லாம் கூட சம்ஸ்கிருதத்தின் வடிவங்களே. உண்மையில், சுந்தரம்பிள்ளை இந்த வரிகளை எழுதிக்கொண்டிருந்த காலத்தில் தான் சம்ஸ்கிருதம் ஐரோப்பாவிலும் அதைத் தொடர்ந்து உலகெங்கும் பிரபலமாகிக் கொண்டிருந்தது. கீதையும் உபநிஷதங்களும் சாகுந்தலமும் மேற்கத்திய அறிஞர்களால் பயிலப் பட்டுக் கொண்டிருந்தன. இந்திய தேசிய மறுமலர்ச்சியையும், இந்திய சுதந்திரத்தையும் தொடர்ந்து சம்ஸ்கிருதத்திற்கு ஏறுமுகம் தானே தவிர அது ‘அழிந்து ஒழிந்து சிதைய’ எல்லாம் இல்லை. ஒரு மாபெரும் நகைமுரணாக, அவரது பெயரிலும், அவர் எழுதிய இந்தப் பாட்டிலுமே சுந்தரம், நீர், வதனம், பரதகண்டம், தக்கணம், திராவிடம், திலகம், வாசனை, உலகம், திசை, பரம்(பொருள்), உதரம், உதித்தே என்று இத்தனை சம்ஸ்கிருதச் சொற்கள் உள்ளன. மேலும், இன்றும் உயிர்த்துடிப்புடன் வாழும் பெருமதங்களின் (இந்துமதம், பௌத்தம், ஜைனம்) ஆதார நூல்களை உள்ளடக்கிய ஒரு மொழி சிதைந்து ஒழிந்தது என்று சுந்தரம்பிள்ளை கருதியிருந்தால் அது அபத்தமானது. எனவே, அன்றைய தமிழ்நாடு அரசு, இந்த வரிகளை நீக்கிவிட்டு மற்ற வரிகளை மட்டும் அதிகாரபூர்வ வாழ்த்துப் பாடலாக வரையறை செய்தது மிகச் சரியான முடிவு.

  8. அன்றைய தமிழ்நாடு அரசு தமிழ்த்தாய்க்கு உருவம் கொடுத்து சிலை அமைத்தபோது, அதற்காக ஸ்தபதிகள் தேர்ந்தெடுத்தது கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் உள்ள சோழர் காலத்திய ஞான சரஸ்வதி வடிவத்தைத் தான்.

  அருக்கோதயத்தினும் சந்திரோதயம் ஒத்து அழகெறிக்கும்
  திருக்கோல நாயகி செந்தமிழ்ப் பாவை திசைமுகத்தான்
  இருக்கோது நாதனும் தானுமெப் போதுமினி திருக்கும்
  மருக்கோல நாண்மலராள் என்னையாளும் மடமயிலே.

  என்று சரசுவதி அந்தாதி செந்தமிழ்ப் பாவை என்றே கலைமகளைக் குறிப்பிடுகிறது.

  இங்ஙனம் இந்துப்பண்பாட்டுக் கூறுகளின் சிறந்த வெளிப்பாடாக அமைந்துள்ள தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பிழையின்றிக் கற்றுக் கொண்டு அனைத்துப் பொது நிகழ்ச்சிகளிலும் பாடி மகிழ்வோம்.

  வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்
  வாழிய பாரத மணித்திரு நாடு
  வந்தே மாதரம்.

  கட்டுரை: ஜடாயு, பெங்களூர்

   

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,106FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,791FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-