June 19, 2021, 3:01 pm
More

  ARTICLE - SECTIONS

  ராம.கோபாலன்ஜி வாழ்க்கையில் இதுவரை…!

  அவரிடம் உங்களுக்கு வயது என்ன என்று கேட்டால் அவர் சொல்லுவது ஜஸ்ட் 94.

  gopalji
  gopalji

  இந்து முன்னணி – நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி இராம.கோபாலன்பள்ளிச் சிறுவனாய் இருந்த காலம்.அவரது வீட்டில் ஓர் ஓவியம் உண்டு. பகத்சிங் தன் தலையை வெட்டி எடுத்து பாரத மாதாவுக்குக் காணிக்கை செலுத்துவது போன்ற உயிரோட்டத்துடன் அமைந்த ஓவியம் அது . ஒருநாள் இராம.கோபாலன்தன் தந்தையிடம்h அந்த ஓவியத்துக்கு அர்த்தம் கேட்கிறார் . தந்தை சொன்னார் : “நாட்டுக்காக வாழணும் . இந்த நாட்டுக்காக எந்தத் தியாகமும் பண்ணலாம் . தேவைப் பட்டால் உயிரையும் தரலாம் . இந்தப் படத்துக்கு அது தான்பா அர்த்தம்” என தந்தை கூறிய விளக்கம் சிறுவன் இராம.கோபாலனின் அடி மனதில் ஆழப் பதிந்துவிட்டது. அது புதைந்து விதைவிட்டு, வேர் விட்டு , கிளை விட்டு விருட்சமானது.

  தந்தை ஒரு தீவிர தேசியவாதி. அவர் கூறும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதைகள் சிலிர்க்க வைக்கும். பாரதி ,திலகர் ,வாஞ்சிநாதன் , வஉசி . பற்றி தந்தை கூறும்போது , தானும் அது போல வாழவேண்டும் என்ற எண்ணம் இராம . கோபாலன் மனதில் எழுந்தது .

  இராம கோபாலனின் தந்தை : மு . இராமஸ்வாமி ; தாய் செல்லம்மாள் .
  பிறந்த நாள் : 19-9-1927.
  பிறந்த ஊர் : தஞ்சை மாவட்டம் சீர்காழி .சம்பந்தருக்கு ஞானப்பால் தந்த திருத்தலம் .

  தந்தை சிறு விவசாயி . காவிரி நீர் பிரச்னை இல்லாத அந்தக் காலத்தில் முப்போக விளைச்சல்! பள்ளிச் சிறுவனாய் இராம.கோபாலன் துள்ளித் திரிந்த காலம்.

  சுதந்திர நெருப்பு நாடெங்கும் பற்றியெரிந்தது . அந்த நெருப்பு இவரையும் விட்டு வைக்க வில்லை . சுதந்திரப் போராட்ட மேடைகளில் பாரதி பாடல்களை உணர்ச்சி ததும்ப கம்பீரமாகப் பாடுவார் .சீர்காழியிலுள்ள சட்டநாத ஸ்வாமி திருக்கோயிலுக்குள் அடிக்கடி சுதந்திரப் போராட்டக் கூட்டங்கள் நடக்கும் . பட்டுக்கோட்டையிலிருந்து நாடிமுத்துப்பிள்ளை என்ற சுதந்திரப் போராட்ட வீரர் பல முறை அங்கு வந்து பேசியிருக்கிறார் . அது போன்ற கூட்டங்களில் கலந்துகொண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் பேச்சு களைக் கேட்க …. கேட்க … சிறுவன் இராம.கோபாலனுக்குள் தேசப்பற்றும், தேசிய உணர்வும் படிப்படியாக கொழுந்துவிட்டு எரியத் தொடங்கின .

  ஒருபுறம் தேச உணர்வு பொங்கி யெழுந்தாலும் இராம.கோபாலன் படிப்பில் சோடை போகவில்லை . நன்றாகப் படித்தார் .ஆனாலும் , சிறுவர்களுக்கே உரிய வால் தனமும் உண்டு .

  சீர்காழியில் எஸ்.எஸ்.எல்.சி. முடித்துவிட்டு , கல்லூரிப் படிப்புக்காக சென்னை வந்தார் . வீட்டில் இன்ஜினீயரிங் எடுத்துப் படிக்கச் சொன்னார்கள் . ஆனால் , அதற்கு ஏகப்பட்ட பணம் தேவைப்பட்டது . இதனால் டிப்ளமோ முடித்து ஏ.எம்.ஐ.ஈ.ச. சேர்ந்து படித்துக் கொண்டிருந்த போது 1945 – ல் ஆர்.எஸ்.எஸ் – ல் சேர்ந்தார்.

  படித்து முடித்த பிறகு , மின்சாரத் துறையில் வேலை கிடைத்தது . குடியாத்தத்தில் பணி . இவர் அங்கு வேலை பார்த்ததை விட , ஆர்.எஸ்.எஸ்.ஸுக்காக பார்த்த வேலைதான் அதிகம் .

  இந்த நிலையில்தான் , சுதந்திரம் கிடைத்து.தேசப்பிரிவினையின் போது , சிந்து பகுதியிலிருந்து இந்து மக்கள் புலம் பெயர்ந்து சென்னை வந்தார்கள் . அவர்கள் ஆவடியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர் . ஆர்.எஸ்.எஸ் சார்பாக இராம.கோபாலன் தொண்டர்களுடன் ஆவடிக்குச் சென்று ஞாயிற்றுக் கிழமைகளில் அந்த மக்களுக்கு உதவி செய்வார் . அப்போது, அவர்களின் கண்ணீர்க் கதைகளைக் கேட்ட இராம.கோபாலன் துடித்துப் போனார். மனதைச் சோகம் அப்பிக் கொண்டது .இந்த நாட்டு மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ வேண்டியுள்ளதே என்று கொதித்தார் .

  இந்துக்கள் பலஹீனமாக இருப்பதுதான் இதற்கெல்லாம் காரணம் என்ற தீர்மானம் அவர் மனசுக்குள், இந்துக்களைப் பாதுகாக்கவும் பலப்படுத்தவும் முழுநேரத் தொண்டராக (பிரச்சாரக்) முடிவெடுத்தார் இராம .கோபாலன்.

  நாடு முக்கியம் . நாடு என்பது வெறும் நிலமல்ல; அதில் வாழும் மக்கள் ! அந்த மக்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும் . அதை ஆர்.எஸ்.எஸ் . ஆல் மட்டுமே நிகழ்த்திக் காட்ட முடியுமென்று முடிவெடுத்தவர் , தனது வேலையை உதறினார் . முழுநேர ஆர்.எஸ்.எஸ் . (பிரச்சாரக்) தொண்டரானார் .

  1948 – ல் ஆர்.எஸ்.எஸ் . இயக்கத்துக்குத் தடைவிதித்தது அரசு . திருநெல்வேலி யில் முழுநேர ஊழியராய் இருந்த இராம.கோபாலன் கைது செய்யப்பட்டு , வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

  சிறைவாழ்க்கை இராம . கோபாலனின் உணர்ச்சிகளில் திடத்தையும் அறிவில் தெளிவையும் அளித்தது . யோகா , பிராணாயாமம் , தியானம் , உடற்பயிற்சி என்று இராம.கோபாலனின் சிறைப் பொழுதுகள் நகர்ந்தன. மீதி நேரங்களில் புத்தக படிப்பு.

  சிறையில் படித்த வீரசாவர்க்கர் எழுதிய எரிமலை என்ற நூல் இவரது மனசுக்குள் தீக்கங்குகளை வீசியது . சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி எழுதப்பட்ட அந்த நூல் இவரது இரவுகளில் நெருப்பாய் எரிந்தது.

  சுமார் ஆறு மாதங்கள் நீடித்தது இந்தச் சிறை வாழ்வு , பிறகு , ஹேபியஸ் கார்பஸ் கொண்டு வரப்பட்டு பலர் விடுதலையாகினர் . ஆர்.எஸ்.எஸ் . க்குத் தொடர்ந்து தடை நீடித்தாலும் ரகசியமாக இயங்கினார் இராம. கோபாலன் .

  சென்னையில் மின்சாரத் துறையில் மீண்டும் வேலையில் சேர்ந்தார் . ஆறுமாதம் வேலையிலிருந்தார் .இயக்கப் பணிகளுக்கு சம்பளப் பணி இடையூறாக இருந்ததால் மீண்டும் வேலையை உதறினார் .தொடர்ந்து தீவிர ஆர்.எஸ்.எஸ் பணி . அதன் பிறகு , குடும்பம் ,சொந்தங்களை மறந்தார் . வீட்டுக்குக் கூடச் செல்வதில்லை . எண்ணம் , செயல் அனைத்தும் இயக்கமாக மாறிப் போனது . அதன் பிறகு போராட்டங்கள் .. கைது … சிறை வாழ்க்கை என்று இந்தப் பிரம்மச்சாரியின் வாழ்வு கரடு முரடான பாதையில் , பயணப்பட்டது .

  நெருக்கடி நிலையை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் . போராடிய போது , இவரைக் கைது செய்ய போலீஸ் வலை வீசி தேடியது . இவரோ , மாறுவேடம் தரித்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து , ஆர்.எஸ்.எஸ்.ஸின் தகவல் தொடர்பாளராக தமிழகம் முழுக்கச் சுற்றி வந்தார் .

  94 வயதாகும் இவர் திருமணம் குறித்து ஒரு முறை கூட யோசித்ததேயில்லை. இது குறித்து இந்து முன்னணித் தொண்டர் ஒருவர் கூறும் போது , ” திருமணம் செய்து கொண்டால் , இயக்கப் பணிகளில் தீவிரமாக ஈடுபட முடியாது . குடும்ப வாழ்க்கை இயக்கப் பணிகளுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் திருமணத்தையே மறந்துவிட்டார். இந்திய நாட்டைக் குடும்பமாகவும் மக்களைத் தன் குடும்பத்தவர்களாகவும் நேசிக்க ஆரம்பித்துவிட்டார் ” என்கிறார் .

  இராம கோபாலன் கவிஞரும் கூட இவர் எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் ஆர்.எஸ் .எஸ் . இயக்கத்தின் மேடைகளில் தேசபக்திப் பாடல்களாகப் பாடப் படுகின்றன .

  இந்திய அளவில் ஆர்.எஸ்.எஸ் . தீவிரமாகப் பணியாற்றினாலும் , தமிழக அளவில் சில விஷயங்கள் தனிக் கவனத்துடன் கவனிக்கப்பட வேண்டும் என்று உணர்ந்தார் இராம.கோபாலன்குறிப்பாக தென்மாவட்டங்களில் பரவலாக நடந்த மதமாற்றங்கள் !

  இதற்காக , ஆர்.எஸ்.எஸ்.ஸின் தென்பாரத அமைப்பாளர் யாதவராவ் ஜோஷியின் வழிகாட்டுதலால் 1980 ம் ஆண்டு இராம.கோபாலன் உருவாக்கிய இயக்கம் தான் இந்து முன்னணி ..

  இதன் முதல் தலைவர் ப.தாணுலிங்க நாடார் . இந்து முன்னணி வளர்ச்சிக்காக இராம. கோபாலன் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்தார் .

  1982 – ல் மதுரை ரயில் நிலையத்தில் இவர் மீது கொடூரத் தாக்குதல் நடந்தது. இதில் இவரது கழுத்திலும், தலையிலும் பலத்த வெட்டு தழும்பை மறைக்க அன்றி லிருந்து காவித் தொப்பியணிய ஆரம்பித்தார். என்றாலும் இராம கோபாலனின் பணி துளியும் அச்ச மின்றி இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

  அவரிடம் உங்களுக்கு வயது என்ன என்று கேட்டால் அவர் சொல்லுவது ஜஸ்ட் 94.

  இந்து முன்னணியினர் இராம.கோபாலனை “வீரத் துறவி” என்றுதான் பாசத்தோடு அழைப்பார்கள்

  • ராம் ராம்நாத், திருச்சி

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  22FollowersFollow
  74FollowersFollow
  1,256FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-