Home இந்தியா ஆல் பாஸ் அறிவிப்பு அதிமுக.,வுக்கு தேர்தலில் கைகொடுக்குமா?

ஆல் பாஸ் அறிவிப்பு அதிமுக.,வுக்கு தேர்தலில் கைகொடுக்குமா?

10, 11 வது வகுப்புகளுக்கான தேர்வுகள் ரத்து:

இரண்டு கோடி வாக்காளர்களின் அதிருப்திக்குக் காரணமான இந்த முடிவு வரும் தேர்தலில் அதிமுகவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும்

— வேதா டி. ஶ்ரீதரன்

எக்சிட் போல் பற்றி நாம் அறிவோம். இது ஒரு புள்ளியியல் அளவீடு.

புள்ளியியல் பார்வையில் சொல்வதானால், ‘ஒருசில சாம்பிள் வாக்காளர்களின் மனநிலையை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த வாக்காளர்களின் மனநிலையைக் கணிப்பதே எக்சிட் போல்.’

வாக்காளர்களோ பலவகைப்பட்டவர்கள். ஒவ்வொரு வகையைச் சேர்ந்தவர்களும் ஒவ்வொரு விதத்தில் முடிவெடுப்பார்கள். உதாரணமாக, ஜாதி அடிப்படையில் சிலர் முடிவெடுப்பார்கள். வேறுசிலர் வளர்ச்சிப் பாதைக்கு முக்கியத்துவம் தருவார்கள்.

இதுபோன்ற ஒவ்வொரு வகையினரையும் இனம் கண்டு, அவர்களில் சிலரைத் தேர்ந்தெடுப்பதுதான் சாம்பிளிங் எனப்படும். இந்த சாம்பிள்கள் எவ்வளவு தூரம் சரியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்தே புள்ளியியல் ஆய்வின் நம்பகத் தன்மை அமையும்.

சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் இத்தகைய ஒரு புள்ளியியல் ஆய்வு நடத்தப்பட்டது. இது, மாநில அரசின் உத்தரவுக்கு இணங்க, பள்ளிகளில் பெற்றோர் மனநிலையை அறிவதற்காக நடத்தப்பட்ட ஒரு சர்வே. ‘கொரோனா அச்சம் நிலவி வரும் இக்காலத்தில் பள்ளிகளைத் திறக்கலாமா வேண்டாமா?’ என்பதைத் தீர்மானிக்கும் பொருட்டுப் பெற்றோர்களின் கருத்தைக் கேட்பதற்காக இந்த சர்வே நடத்தப்பட்டது. தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களைத் தொடர்பு கொண்டு கருத்துக் கேட்க முயற்சி செய்யப்பட்டது.

இதுவும் ஒரு புள்ளியியல் ஆய்வுதான். இந்த சர்வேயில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த பெற்றோர்கள்தான் இந்த ஆய்வுக்கான சாம்பிள்கள்.

சாம்பிள்களைத் தேர்ந்தெடுப்பதற்கான இலக்கணங்கள் முழுமையாகப் பொருந்தும் விதத்தில் அமைந்த புள்ளியியல் சர்வே இது என்று என்னால் உறுதியாகக் கூற முடியும். எனவே, இதன் நம்பகத் தன்மை மிகமிக அதிகம்.

ஒட்டுமொத்தப் பெற்றோர்களில் சுமார் 15 சதவிகிதம் பேர் இந்த சர்வேயில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்திருப்பார்கள் என்பது எனது அனுமானம். அதாவது, சுமார் 25 முதல் 30 லட்சம் சாம்பிள்கள்..

இவர்களில் 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளதாக சமீபத்தில் பள்ளிக் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார். வேறு எந்த எந்த விவரத்தையும் கல்வித்துறை வெளியிடவில்லை.

இந்த சர்வே மூலம் சில விஷயங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அவற்றை முதலில் பார்க்கலாம்.

  1. கொரோனா குறித்த அச்சம் பெற்றோர் மத்தியில் இல்லை.
  2. மொபைல் போன்கள், டாஸ்மாக் குறித்த அச்சம் பெற்றோர்களிடம் பெருமளவு அதிகரித்துள்ளது.
  3. பள்ளிகள் இயங்காமல் இருப்பது தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையைச் சீரழித்து விடும் என்று பெற்றோர்கள் பெரிதும் அஞ்சுகிறார்கள்.

வழக்கமாக, தனியார் பள்ளிகளில்தான் இத்தகைய கூட்டங்களில் பெற்றோர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்வதுண்டு. ஆனால், இந்தத் தடவை அரசுப் பள்ளிகளில் பெற்றோர்கள் மிகக் கூடுதலான எண்ணிக்கையில் கலந்து கொண்டார்கள் என்பதை எனக்குத் தெரிந்த பள்ளி நிர்வாகிகள் மூலம் அறிந்து ரொம்பவே ஆச்சரியப்பட்டேன்.

ஏற்கெனவே, கொரோனா காலத்தில் பள்ளிக் கல்வி விஷயங்களில் தற்போதைய அரசின் மீது மிகுந்த அதிருப்தி ஏற்பட்டிருப்பதை நான் கண்கூடாகப் பார்க்கிறேன். அதற்கான அறிவியல் பூர்வமான நிரூபணம்தான் இந்த சர்வே என்பது எனது கருத்து.

பள்ளிகள் இன்னும் முழுமையாகத் திறந்தபாடில்லை. அடுத்த வருடம் பள்ளிகளின் நிலை எப்படி இருக்கப் போகிறது என்பதை யூகித்துப் பார்க்கக்கூட முடியவில்லை. இத்தகைய சூழலில் பத்து, பதினொன்றாம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ரத்து என்ற முடிவு பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும், இந்த சர்வேயில் அரசுப் பள்ளிகளில் பெற்றோர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டார்கள் என்ற செய்தி இன்னொரு விஷயத்தையும் உணர்த்துகிறது. பொதுவாக, தனியார் பள்ளிகளில் மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டால் பள்ளியில் இருந்து உடனடியாகப் பெற்றோர்களைத் தொடர்பு கொண்டு காரணம் கேட்பார்கள். மாணவர்களின் கல்வி, நடத்தை முதலியவை குறித்துப் பெற்றோர்களுடன் ஏதாவது ஒருவிதத்தில் தொடர்ச்சியான தகவல் பரிமாற்றம் இருக்கும். பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் இத்தகைய அணுகுமுறைகள் சாத்தியமில்லை.

மேலும், தற்காலத்தில் வசதி குறைவான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். இன்றைய தமிழ்நாட்டில், பெரும்பாலும் இத்தகைய குடும்பங்களில் தந்தைமார்களின் வருமானம் டாஸ்மாக்கைத் தாண்டித்தான் வீடு வந்து சேர முடியும். எனவே, தாய்மார்களின் உழைப்பை மட்டுமே நம்பி இருக்கும் குடும்பங்கள் இவை.

இத்தனை விஷயங்களையும் வைத்துப் பார்க்கும்போது, பள்ளிக் கல்வி குறித்த இப்போதைய அரசின் அணுகுமுறைகள் பெற்றோரின் மத்தியில் பீதியை ஏற்படுத்தி இருக்கும் என்பது எனது அனுமானம்.

இதன் தாக்கம் வரும் தேர்தலில் எவ்வாறு வெளிப்படும் என்பதைக் கணிக்கும் அளவு எனக்கு அரசியல் அறிவோ அனுபவமோ கிடையாது. ஆனால், சில விஷயங்களை மட்டும் என்னால் குறிப்பிட முடியும்:

  1. தமிழகப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் சுமார் 2 கோடிப் பேர். இவர்கள் அனைவருமே வாக்காளர்கள்தான்.
  2. அரசுப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் குறித்து வியப்புத் தெரிவித்திருந்தேன். இது ரொம்பவே முக்கியமானது. காரணம், மொத்தப் பெற்றோர்களில் இவர்களது எண்ணிக்கை சுமார் 70 சதவிகிதம். பொதுவாகவே பெற்றோர் கூட்டங்களில் தாய்மார்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும் என்றாலும், இந்தப் பள்ளி மாணவர்களின் குடும்பங்கள் பெரும்பாலும் தாய்மார்களை மட்டுமே சார்ந்து வாழ்பவை. எனவே, தாய்மார்களிடம் பலத்த அதிருப்தி நிலவுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

அதிமுகவின் ஓட்டு வங்கி பெரும்பாலும் தாய்மார்களே என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

  1. தனியார் பள்ளிகளின் சாபத்துக்கு ஆளாகி விட்டது தற்போதைய அரசு. இந்த ஆசிரியர்கள், நிர்வாகத்தினரின் எண்ணிக்கை பல லட்சம் பேர். இவர்களும் வாக்காளர்கள்தான். இவர்களிலும் தாய்மார்களே அதிகம்.
  2. விழிப்புணர்வு கொண்ட இதர வாக்காளர் மத்தியிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கும் என்றே நான் நம்புகிறேன். காரணம், அரசின் தற்போதைய முடிவு மாணவர்களின் ஒழுக்கத்தைச் சீரழிக்கும் என்பதை என்னால் நிதரிசனமாகப் புரிந்து கொள்ள முடிகிறது. இதை ஒருவராலும் ஜீரணிக்க முடியாது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version