spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைசித்திரையே புத்தாண்டு என்பது ஏன்?: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

சித்திரையே புத்தாண்டு என்பது ஏன்?: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

- Advertisement -

தமிழ்ப் புத்தாண்டு என்பது சித்திரை 1ஆம் நாளே என்று தெளிவாக விளக்கிப் பேசினார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. கடந்த 2011ம் ஆண்டில், மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் திமுக., தலைவர் மு.க.கருணாநிதியால் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை மறுபடியும் சீர்திருத்தினார் ஜெயலலிதா.

பொங்கல் பண்டிகையான தை முதல் நாளே புத்தாண்டு என்று மு.கருணாநிதி மேற்கொண்ட திருத்தத்தை மறுபடியும் சட்டத் திருத்தம் கொண்டு வந்து, சித்திரை1ஆம் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று மாற்றினார் ஜெயலலிதா. அதன் பின்னர் 2012ஆம் ஆண்டு சித்திரை 1ம் நாளில் புத்தாண்டு கொண்டாடியபோது, ஜெயலலிதா கூறிய விளக்கங்கள் இவை…

தமிழ்ப் புத்தாண்டு தினத்தை ஒட்டி, தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு விழாவில் கலந்துகொண்டு, தமிழ் அறிஞர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார் முதல்வர். அப்போது, சித்திரை மாதத் துவக்கமே தமிழ்ப்புத்தாண்டுத் தொடக்கம் என்பதற்கு முன்னோர்கள் எப்படி ஏற்படுத்தினார்கள் என்பதையும் தன் உரையில் குறிப்பிட்டார்.

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா ஆற்றிய உரையின் தொகுப்பு:

“தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை”; “தாய்மொழியிற் சிறந்த தெய்வமுமில்லை” என்பதற்கேற்ப, சித்திரைத் திருநாளாம் தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடும் வண்ணம் நடைபெறும் இந்த அரசு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி.

தமிழ்ப் புத்தாண்டினை முன்னிட்டு, இன்று காலையிலிருந்து கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்திய தமிழ் அறிஞர்களுக்கு எனது பாராட்டுதல்கள்.

“கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே, முன்தோன்றிய மூத்த தமிழ்”, என்னும் பழமையுடைய, இலக்கிய வளம் நிறைந்த தமிழ் மொழியை பேசுபவர்கள் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி வருகிறார்கள். இதற்கான அடிப்படைக் காரணங்கள் பல உள்ளன.
சித்திரை மாதம் புத்தாண்டின் தொடக்கம் என்பது வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது.

பூமி, சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் ஓர் ஆண்டு ஆகும். சூரியன் பூமத்திய ரேகையில் நேராக பிரகாசிக்கும் மாதம் ஆண்டின் தொடக்கமாக கருதப்படுகிறது. சூரியன், முதல் ராசியான மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து, அந்த ராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதம் ஆகும். சித்திரையில் தொடங்கி பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில், அம்மாதத்தின் பௌர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அம்மாதத்தின் பெயராகும். உதாரணமாக, சித்திரை மாதம் பௌர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் சித்திரை ஆகும். இதே போன்று, வைகாசி மாதம் பௌர்ணமி அன்று விசாகம் நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் வைகாசி ஆகும். இப்படி ஒவ்வொரு மாதத்திற்கும் இந்த அடிப்படையிலேயே பெயர்கள் வைக்கப்பட்டன.

“சித்திரையே வா! நம் வாழ்வில், நல் முத்திரை பதிக்க வா!” என்று சொல்லும் மரபு இருக்கும் காரணத்தால், சித்திரை மாதமே தமிழ் புத்தாண்டுக்கு உரிய பொருத்தமான நாள் ஆகும் என தெய்வத்திரு மதுரை ஆதினம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

சோழர் கல்வெட்டுகளிலும், கொங்கு பாண்டியர் கல்வெட்டுகளிலும், 60 ஆண்டுகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

அகத்தியர் பன்னிராயிரத்தில், பங்குனி மாதம் கடை மாதம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

“திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக” என்று நக்கீரர் கூறியிருக்கிறார். இந்தப் பாடலில் வரும் ஆடு தலைக்கு மேஷ ராசி என்று பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலில் விளக்கம் கொடுத்துள்ளார் முனைவர் மா. ராசமாணிக்கனார்.

புஷ்ப விதி என்னும் நூலில், சித்திரை முதல் மாதம் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் கமலை ஞானப் பிரகாசர்.

நாமக்கல் திரு. வி. ராமலிங்கம் பிள்ளை அவர்களும், “சித்திரை மாதத்தில் புத்தாண்டு தெய்வம் திகழும் திருநாட்டில்” என்ற தனது வாழ்த்துப் பாடலின் மூலம், தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் சித்திரை மாதம் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தால் 1912 ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட தமிழ் பேரகராதியிலும், சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கோடைக் காலமே முதலாவது பருவம் என சீவக சிந்தாமணியில், வருணிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சொல்லப் போனால், தமிழ்ப் புத்தாண்டு தை மாதம் முதல் நாள் என்று திடீரென அறிவித்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியே, சித்திரை முதல் நாளில் கொண்டாடப்படும் தமிழ்ப் புத்தாண்டிற்கு பல முறை வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

1990-ஆம் ஆண்டு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், காவல் துறை குறித்த ஒரு வினாவிற்கு பதில் அளிக்கும் போது, “சில காவல் அலுவலகங்கள் சித்திரை முதல் நாள் அமையவிருக்கின்றன” என்று பதில் அளித்து இருக்கிறார். கைதிகளின் தண்டனைக் காலத்தை குறைப்பது குறித்து 1990 ஆம் ஆண்டு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் அறிக்கை அளிக்கும் போது, “தமிழ்ப் புத்தாண்டு அன்று அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார். அதாவது, சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதை திரு கருணாநிதியே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

1935 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற கூட்டத்தில், “திருவள்ளுவர் காலம் இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதென்பது எளிதிற் பெறப்படும். கிறிஸ்து பிறப்பதற்கு 30 ஆண்டுகட்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்து கண்ட முடிவாகும்” என மறைமலை அடிகளார் கூறியதாக ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை ஒட்டி வெளியிடப்பட்ட மலரில் சிறுவை நச்சினார்க்கினியன் கூறியிருக்கிறார்.

மறைமலை அடிகளார் தை மாதம் பற்றியோ, தமிழ்ப் புத்தாண்டைப் பற்றியோ குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. இந்தக் கூட்டத்தில், திரு.வி.க. உட்பட மிகப் பெரிய தமிழ் சான்றோர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் எடுத்த முடிவு, திருவள்ளுவர் தினம் வைகாசி அனுஷம் என்பதுதான். உண்மை நிலை இவ்வாறிருக்க, “தைத் திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது ஒட்டுமொத்த எல்லாத் தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மை” என்று பொத்தாம் பொதுவாகக் கூறி தமிழர்களின் மனம் புண்படும் வகையில், தை மாதம் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக சட்டத்தின் மூலம் மாற்றி அமைத்தார் திரு. கருணாநிதி.

யார் கேட்டது இந்தச் சட்டத்தை? இந்தச் சட்டத்தினால் மக்களுக்கு என்ன பயன்? இந்தச் சட்டத்தை இயற்றுவதற்கான காரணத்தை தெளிவுபடுத்தினாரா திரு. கருணாநிதி? இந்தச் சட்ட முன்வடிவு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கொண்டு வரப்பட்ட போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர், என். நன்மாறன், இந்த மாற்றத்திற்கான காரணங்கள் இருந்தால் அதனை தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டாரே! தெளிவுபடுத்தினாரா கருணாநிதி? இல்லையே!

இதிலிருந்தே, காரண நோக்கமின்றி, விளம்பர மோகத்தின் அடிப்படையில், இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது என்பது தெளிவாகிறது.

இந்தச் சட்டம் இயற்றிய ஒரு சில நாட்களில், வள்ளுவர் கோட்டத்தில், மிகப் பெரிய பாராட்டு விழா கருணாநிதிக்கு நடத்தப்பட்டது.

விளம்பரத்திற்காக எடுக்கப்படும் இது போன்ற நடவடிக்கைகளை நினைக்கும் போது, தமிழ்ப் புத்தாண்டை மாற்ற எடுத்த நடவடிக்கை தமிழை வளர்க்கவோ, தமிழுக்கு சிறப்பு சேர்க்கவோ எடுத்த நடவடிக்கை என எவரும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். இது போன்ற விளம்பர உத்திகள் வியாபாரத்திற்குதான் உகந்ததே தவிர, தமிழ் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. விளம்பரத்திற்காக எடுக்கப்படும் இது போன்ற நடவடிக்கைகளை நினைக்கும் போது, எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு சிற்றூரில் கோபாலன் என்பவர் மளிகைக் கடை நடத்தி வந்தார். அவர் தனது வியாபாரத்தை நேர்மையுடன் நடத்தி வந்தார். தன் கடையில் பொருட்களை வாங்க வருவோர் விலையை குறைத்து கேட்டால், அந்த பொருட்கள் என்ன விலைக்கு வாங்கப்பட்டன என்பதையும்; தனக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதையும் அவர் தெரிவித்து விடுவார். வியாபார நுணுக்கம் தெரியாததால் கடையில் எதிர்பார்த்த லாபம் அவருக்கு கிட்டவில்லை.

எனவே, பக்கத்து ஊரில் வியாபார நுணுக்கம் தெரிந்து அதிக லாபம் ஈட்டும் அம்பலம் என்பவரை அணுகி, வியாபார நுணுக்கங்களை தன் மகன் கண்ணனுக்கு கற்றுத் தருமாறு கேட்டார் கோபாலன். அம்பலமும், அவனுக்கு வியாபார நுணுக்கங்களை கற்றுத் தருவதாக கூறினார். இதன்படி, தன் மகன் கண்ணனை அம்பலம் கடைக்கு அனுப்பி வைத்தார் கோபாலன்.

வியாபார ரகசியத்தை கற்றுக் கொள்ள வந்த கண்ணனிடம், “என்னுடைய ஒவ்வொரு செயலையும் உற்றுப் பார். எதையும் மற்றவர் முன் கேட்காதே. யாரும் இல்லாத போது கேள்”, என்று அறிவுரை வழங்கினார் அம்பலம்.

சற்று நேரத்தில் அம்பலத்தின் கடைக்கு ஒரு வாடிக்கையாளர் வந்தார். அவர் கண்ணனிடம், “உயர் ரக புளியின் மாதிரியைக் காட்டு” என்றார். உடனே கண்ணன், உயர் ரக புளியின் மாதிரியைக் காட்டினான். வாடிக்கையாளரின் முகம் மாறியது. “இதைவிட நல்ல புளி இருக்கிறதா? விலை அதிகமாக இருந்தாலும், பரவாயில்லை” என்று கேட்டார் வாடிக்கையாளர். அதற்கு கண்ணன், “இது தான் மிகவும் உயர் ரக புளி. இதைவிட உயர் ரகம் வேறு இல்லை” என்றான்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த அம்பலம், கண்ணனிடம் “இவர் இந்த ஊரில் மிகப் பெரிய மனிதர். இவருக்கு எப்பொழுதும் மிக உயர்ந்த ரக பொருட்கள்தான் பிடிக்கும். விலையைப் பற்றி அவருக்கு கவலை இல்லை” என்று கடிந்து கொண்டு, “அந்த எவர்சில்வர் டிரம்மில் உள்ள புளியை அவருக்கு எடுத்துக் காட்டு” என்று கூறினார்.

கண்ணன் குழப்பத்துடனே உள்ளே சென்று, எவர்சில்வர் டிரம்மில் இருந்த புளியை எடுத்துக் காட்டினான். இதைப் பார்த்ததும், அந்த வாடிக்கையாளரின் முகம் தாமரை போல் மலர்ந்தது. பின்னர், அவர் தனக்கு தேவையான புளியை வாங்கிச் சென்றார்.

வாடிக்கையாளர் சென்றதும், கண்ணன் அம்பலத்திடம், “இரண்டு புளியும் ஒரே ரகம்; ஒரே விலை தான். வேறு, வேறு டிரம்களில் இருந்தன அவ்வளவு தானே?” என்று கேட்டான். அதற்கு அம்பலம், “நல்ல புளி என்பதை வாடிக்கையாளர் மனதில் நான் பதிய வைத்தேன். இது தான் வியாபார தந்திரம்” என்று கூறினார்.
இந்த வியாபாரி செய்தது வியாபார தந்திரம். அரசியலில், இது போல் தந்திரம் செய்பவர்கள் தமிழுக்கு தொண்டு செய்வது போல் காட்டிக் கொள்கின்றனர்.

கருணாநிதி சொல்வதைப் போல், தமிழ் அறிஞர்கள் எல்லாம் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாக இருக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருப்பார்களேயானால், பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்ற உடனேயே, அதனை நிறைவேற்றியிருப்பார். ஏன்? கருணாநிதியே கூட 2008-க்கு முன்பு இதை நிறைவேற்றவில்லையே!

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்று தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட சட்டத்தை தமிழக மக்கள் விரும்பவில்லை. எனவேதான், நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு பொதுமக்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், வானியல் வல்லுநர்கள், தமிழ் அறிஞர்கள் ஆகியோர் விடுத்த வேண்டுகோள்களை கருத்தில் கொண்டும்; சித்திரைத் திங்கள் முதல் நாளையே கோடான கோடி தமிழ் மக்கள் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி வருகிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டும்; தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வண்ணம் இருந்த 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டு விளம்புகைச் சட்டத்தினை நீக்கம் செய்தேன்.

தமிழ் மொழியை உலகம் முழுவதும் பரப்பும் வகையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் மதுரையிலும்; எனது ஆட்சிக் காலத்தில் தஞ்சையிலும்; உலகத் தமிழ் மாநாடுகள், நடத்தப்பட்டன. தமிழ் மொழிக்கென தஞ்சையில், தமிழ்ப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்தில் தான். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தான் அரசவைக் கவிஞர் பதவி உருவாக்கப்பட்டு, தமிழ் மொழியை சிறப்பித்தவர்கள் கௌரவிக்கப்பட்டனர். எனது ஆட்சிக் காலத்தில், புது டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை நிறுவ 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

தமிழ் மொழியின் சிறப்பினை மேலும் வெளிப்படுத்தும் வகையிலும்; தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடுபவர்களை ஊக்குவிக்கும் வகையிலும்; கல்வெட்டுகள், அகழாய்வுகள், ஓலைச் சுவடிகள், அரிய கையெழுத்துப் படிகள், கிடைத்தற்கரிய நூல்கள், முதலியவற்றை வெளிக் கொணர்ந்தும்; தமிழுக்கு வளம் சேர்க்கும் வகையில், பதிப்புப் பணிகளை மேற்கொள்ளும் அறிஞர் ஒருவருக்கு சங்க கால இலக்கியங்களை தமிழ் மக்களுக்காக அளித்த, “தமிழ் தாத்தா” என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் திரு. உ.வே.சா. அவர்கள் பெயரில் ஒரு விருதும்; தற்காலத்தில் பழந்தமிழ், தொன்மை, வரலாறு, நாகரிகம் ஆகியவை புலப்படும் வகையில், தமிழுக்கு உயிரூட்டும் படைப்புகளை புனைந்து வழங்கும் அறிஞர் ஒருவருக்கு, சங்க இலக்கியத்தில் தனக்கென ஒரு தனித்துவத்தை அமைத்து, அதிக அளவு பாடல்களை பாடிய இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த “குறிஞ்சிக் கபிலர்” என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் கபிலர் பெயரில், ஒரு விருதும்; தமிழ் மொழி, இலக்கியம், கலை ஆகியவற்றை வளர்க்கும் பணியில் ஈடுபடும் அமைப்புகளை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்த்தாய் விருதும், இந்த ஆண்டு முதல் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த விருதுகளுக்காக தெரிந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இன்று பரிசுகளை வழங்குவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அதே போன்று, சிறந்த பெண்மணிக்கு ஆண்டுதோறும் ‘ஒளவையார் விருது’ வழங்கப்படும் என்று உலக மகளிர் தினத்தன்று நான் அறிவித்தேன். இந்த விருதை இன்று வழங்குவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இனி ஒவ்வொரு ஆண்டும், இவ்விருது உலக மகளிர் தினத்தன்று வழங்கப்படும். மேலும், இந்த விழாவில் சிறந்த நூல்களை படைத்த நூலாசிரியர்கள்; அவற்றைப் பதித்த பதிப்பகத்தார்; திருக்குறள் ஒப்புவிப்பு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர் ஆகியோருக்கு பரிசுகளை வழங்குவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

சித்திரைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடும் பழமை வாய்ந்த, பாரம்பரியம் மிக்க மரபினை மீட்டெடுத்த பிறகு நடைபெறும் இந்த தமிழ்ப் புத்தாண்டு விழா, சீரும் சிறப்புமாக நடைபெற உறுதுணையாக இருந்த அமைச்சர் பெருமக்களுக்கும்; அரசு அதிகாரிகளுக்கும்; கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகளை சிறப்புடன் நடத்திக் கொடுத்த தமிழ் அறிஞர்களுக்கும்; இங்கு குழுமியுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுதல்களைத், தெரிவித்துக் கொண்டு; உழைப்பால் உயரும் தமிழரின் வாழ்வெல்லாம் வசந்த காலமாய் ஒளிரட்டும்; தமிழினம் அனைத்திலும் வெற்றி வாகை சூடட்டும் என்று வாழ்த்தி; மீண்டும் ஒரு முறை என் இனிய சித்திரைத் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்…

– இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா உரையாற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe