கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியையிடம் ‘விடிய விடிய’ விசாரணை: போலீஸார் அதிர்ச்சி!

அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்திய ஏடிஎஸ்பி மதி, தான் மேற்கொண்ட விசாரணை முழுவதையும் வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த விசாரணையில் பலரது பெயர்களை நிர்மலா தேவி கூறியுள்ளதாகவும், இதனால் தொடர்புடைய அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் படிக்கின்ற 4 மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ பதிவு ஒன்று, வாட்ஸ்அப்பில் வைரலாகப் பரவி புகார் தரப்பட்டதை அடுத்து, நடவடிக்கை எடுத்த போலீஸார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே பேராசிரியைக்கு ஆதரவாக மதுரை காமராஜர் பல்கலைகழக துணைவேந்தர் செல்லதுரை கருத்து தெரிவித்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணிதத்துறையில் பேராசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார் நிர்மலாதேவி. இவர் தனது கணவர் மற்றும் இரு மகள்களைப் பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவரது நடவடிக்கைகள் பிடிக்காததால், குடும்பத்தினர் இவரை விட்டு விலகி இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இதனிடையே, மாணவிகள் தெரிவித்த புகாரின் பேரில் கல்லூரி நிர்வாகம், பேராசிரியை நிர்மலா தேவியை பணியிடை நீக்கம் செய்தது. இருப்பினும், அவர் மீது மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப் படாமல், ஒரு மாதமாக இந்த விவகாரம் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், திடீரென பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளிடம் பேசிய ஆடியோ பதிவு வாட்ஸ்அப்பில் வைரலாகப் பரவியது. இது தமிழகம் முழுக்க உலா வந்த நிலையில், பேராசிரியையின் புரோக்கர் தனமான பேச்சுக்கு எதிராக பலரும் கொந்தளித்தனர். இந்நிலையில் அவரிடம் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்திய போது, அதில் உள்ள குரல் தன்னுடையதுதான் என்று அவர் ஒப்புக்கொண்டார். இந்நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாதர் சங்கங்கள், மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் உயர் கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால் உத்தரவிட்டதன் பேரில், கல்லூரி நிர்வாகம் அருப்புக்கோட்டை டவுண் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. பேராசிரியையின் ஆடியோ மற்றும் ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் மீது ஐ.பி.சி 76, 370, 511 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதை அடுத்து, நிர்மலா தேவியைக் கைது செய்ய காவல்துறையினரும் செய்தியாளர்களும் பேராசிரியை வீட்டு முன் குவிந்தனர். ஆனால் செய்தியாளர்களைக் கண்டதும் வீட்டிற்குள் சென்று கதவை உள்பக்கமாகப் பூட்டிக் கொண்டு, வீட்டினுள்ளேயே இருந்தார் பேராசிரியை நிர்மலா தேவி.

இதை அடுத்து அவரிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர், செய்தியாளர்கள் வெளியேறினால் தான் வெளியே வருவதாகக் கூறினார். சுமார் 4 மணி நேர காத்திருப்புக்கு பின்னர் நிர்மலாவின் கோரிக்கையை ஏற்று செய்தியாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீஸார், நிர்மலா தேவியின் வீட்டு வாசல் முன் மறைத்துக் கொண்டு சரியாக ஜீப்பை நிறுத்தி, கேமரா வெளிச்சம் படாமல் நிர்மலாவைக் கைது செய்தனர்.

இதனிடையே, வாட்ஸ்அப் ஆடியோ ஒலிப்பதிவில் பேராசிரியை ஆளுநர் பெயரையும் இழுப்பதால், ஆளுநர் மாளிகை வட்டாரம் அதிர்ச்சி அடைந்தது. எனவே, இந்தச் சம்பவத்தின் உண்மைத் தன்மையை அறிய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷனை அமைத்து தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டார்.

இந்நிலையில் தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை காமராஜர் பலகலை துணை வேந்தர் செல்லதுரை, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட குழுவை அமைத்திருப்பதாகக் கூறினார். மேலும் “நிர்மலா தேவியும் அந்த மாணவிகளும் யார் என்று எங்களுக்குத் தெரியாது. குற்றவாளிகள், தங்கள் தவறுகளை மறைக்க பிரபலங்களின் பெயரைப் பயன்படுத்துவார்கள். அதனால் இதையெல்லாம் நம்பிவிட முடியாது” என்றார்.

கடந்த 2011ல் பல்கலை.,யினால் அளிக்கப்பட்ட நிதியை முறைகேடாக இந்தக் கல்லூரி நிர்வாகம் பயன்படுத்தியதாகவும் அதுகுறித்த பிரச்னை பல்கலையுடன் இருப்பதால், வேண்டுமென்றே கல்லூரி நிர்வாகத்தால் இது போன்று பல்கலை., அதிகாரிகள் மீது குற்றம் சாட்டி பிரச்னை கிளப்பப் பட்டுள்ளதாகவும் பல்கலை., அதிகாரிகள் சிலர் கூறியுள்ளனர்.

இருப்பினும், கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியிடம் காவல்துறையினர் விடிய விடிய விசாரணை நடத்தினர். நிர்மலா தேவி, தனது பேச்சில் ஆளுநருக்கு அடுத்த நிலை வரை செல்லக்கூடிய செல்வாக்கு, உயர் அதிகாரிகள் என்றெல்லாம் பேசியதால், பல்கலைக் கழக துணைவேந்தர், பல்கலை அதிகாரிகள் என பலரில் பெயர்களை இழுத்தது ஏன் என்றெல்லாம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிலர் குறித்து நிர்மலாதேவி கூறியது கேட்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனராம்.

இந்நிலையில், மாணவிகளிடம் நிர்மலாதேவி பேசியது குறித்து விசாரிக்க மதுரைப் பல்கலைக் கழகம் நியமித்துள்ள 5 பேர் கொண்ட குழு இன்று விசாரணையைத் தொடங்க உள்ளது. பேராசிரியை மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை செய்து 15 நாட்களுக்குள் துணைவேந்தரிடம் இந்தக்குழு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.

முன்னதாக, அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்திய ஏடிஎஸ்பி மதி, தான் மேற்கொண்ட விசாரணை முழுவதையும் வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த விசாரணையில் பலரது பெயர்களை நிர்மலா தேவி கூறியுள்ளதாகவும், இதனால் தொடர்புடைய அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த விசாரணை விவரங்களை வெளியில் விடாமல் பாதுகாக்குமாறும், ஒரு நபர் விசாரணைக் கமிஷனில் அதை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப் பட்டதாகக் கூறப்படுகிறது.