spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்அடுத்தடுத்து அதிர்ச்சி: ஸ்ரீரங்கத்தில் காலணி வீச்சு; சமயபுரத்தில் மதம் பிடித்த யானை மிதித்து பாகன் பலி!

அடுத்தடுத்து அதிர்ச்சி: ஸ்ரீரங்கத்தில் காலணி வீச்சு; சமயபுரத்தில் மதம் பிடித்த யானை மிதித்து பாகன் பலி!

- Advertisement -


திருச்சி: திருச்சிக்கு அருகில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மதம் பிடித்த யானை பாகனை மிதித்துக் கொன்றது பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது!

தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சக்தி தலங்களில் முதன்மையானது திருச்சிக்கு அருகில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில். இங்கு எப்போதுமே திருவிழா களை கட்டும். அனைத்து நாட்களிலுமே உள்ளூர், வெளியூர் பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்கிறார்கள்.

செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ள இந்தக் கோவிலில் மசினி என்ற பெண் யானை உள்ளது. 10 வயதாகும் இந்த யானை, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் சமயபுரம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டதாம். தினமும் பூஜா காலத்திலும், அம்மன் உத்ஸவ மூர்த்திக்கு நடைபெறும் அபிஷேக காலங்களில் இந்த யானை கோவில் வளாகத்திற்குள் அழைத்து வரப்படும். மற்ற நேரங்களில் அங்குள்ள அறையில்  கட்டி வைக்கப்பட்டிருக்கும்.

இந்நிலையில் இன்று காலை யானை மசினியை பாகன் கஜேந்திரன் கோவில் வளாகத்திற்குள் அழைத்து வந்தார். உத்ஸவர் அம்மனுக்கு எதிரே உள்ள இடத்தில் யானை வழக்கம் போல் நின்றிருந்தது.  அங்கு வந்த பக்தர்கள் யானைக்கு காணிக்கை மற்றும் பழங்களை அளித்து ஆசீர்வாதம் பெற்று சென்று கொண்டிருந்தனர். அப்போது வெளியூர் பெண் பக்தர் ஒருவர் யானைக்கு காணிக்கை அளித்தார். அந்நேரம் யானை திடீரென அந்தப் பெண்ணை தும்பிக்கையால் தள்ளி விட்டது. இதனால்  அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் அங்கிருந்து பயத்துடன் சென்று விட்டார்.

ஆனால்,  அடுத்த சில நிமிடங்களில் யானையின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. பலத்த சத்தத்துடன் யானை பிளிறத் தொடங்கியது. உடனே பாகன் தான் கையில் வைத்திருந்த அங்குசத்தால் யானையை கட்டுப்படுத்த முயன்று, லேசாக அடித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த யானை மதம் பிடித்து அங்குமிங்கும் ஓடியது.

யானைக்கு மதம் பிடித்த செய்தி அறிந்து, கோவில் வளாகத்தில் இருந்த பக்தர்கள் அலறி அடித்து ஓடினர். கோயில் வளாகத்தை விட்டு அவர்கள் வெளியேறினர்.

இதனிடையே, யானையை அடக்க முயன்ற பாகன், அங்குசத்தால் யானையை அடித்துக்  கொண்டே இருந்ததால், ஆத்திரமடைந்த யானை, திடீரென தன் அருகே நின்றிருந்த பாகனை தும்பிக்கையால் தூக்கி வீசியது. இதில் சுவரில் மோதி பலத்த காயமடைந்த பாகன், சுதாரித்து எழுந்து கொண்டு, மீண்டும் யானையை தன் பிடிக்குள் கொண்டு வர முயற்சி செய்தார்.

இந்நிலையில், யானையின் காலில் பிணைக்கப்பட்டிருந்த சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார் பாகன். ஆனால், அதற்குக் கட்டுப்படாத யானை, பாகனைத் தன் கால்களால் மிதித்ததில் பாகன் கஜேந்திரன் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின்னும் கோபம் அடங்காமல் கோவில் வளாகத்தைச் சுற்றி வந்த யானை, பின்னர், உயிரிழந்து கிடந்த பாகனின் அருகில் நின்றது.

இந்தக் களேபரத்தில் பக்தர்கள் சிதறி ஓடியதில், 8 பேர் காயம் அடைந்தனர். யானைக்கு மதம் பிடித்த செய்தி அறிந்து அங்கே ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அவர்களில் பலர் பயத்தின் காரணத்தால் அங்கிருந்த உயரமான கட்டடத்தில் ஏறி நின்றனர். பாகன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கோவில் நடை உடனடியாக சாத்தப் பட்டது.

இதனிடையே சம்பவம் குறித்து அறிந்து அந்த இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் வனத்துறையினர், கோவில் பின்புற நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்று யானையை அமைதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். நீளமான கயிறு மூலம் யானையின் கால்களைக் கட்டி அதனை அழைத்து வர முயற்சி செய்தனர். ஆனாலும், யானை பாகன் அருகிலேயே நின்றது.

இதை அடுத்து யானையை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக ஜெயா என்ற மற்றொரு பெண் யானை கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது.  வனத் துறையினரின் நீண்ட போராட்டத்தின் பின் யானை கட்டுக்குள் வந்தது. அதன் பின்னர், பாகனின் உடலை அதிகாரிகள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக, நேற்றுதான் ஸ்ரீரங்கத்தில் நாத்திக நக்சல் இயக்கத்தின் தூண்டுதலில் ஒரு நபர் கருவறை அருகே சென்று, காலணியை கருவறைக்குள் வீசி எறிந்ததாகக் கூறப்பட்டு, சர்ச்சை ஆனது. இதனால் உடனடியாக கோவில் நடை சாத்தப் பட்டு, பரிகார பூஜைகள் நடைபெற்றன. ஆனால், கோவில் நிர்வாகமோ, யாரோ மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர், அழுக்குத் துணு மூட்டைப் பையை குலசேகரன் வாசல் படியில் போட்டு விட்டுச் சென்றதாகவும், அதனால் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒரு சமாதானத்தைச் சொல்லிக் கொண்டிருந்தது.

ஸ்ரீரங்கம் கோயிலும் சமயபுரம் கோவிலும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்ட வரலாற்றுத் தொடர்பு கொண்டது. ஸ்ரீரங்கத்தின் காவல் தேவதையாகக் கருதப் பட்ட வைஷ்ணவி தேவியின் உக்கிரம் தாங்க இயலாமல், அப்போதிருந்த ஜீயர் கொள்ளிடக் கரையின் மறு புறத்தில், ஸ்ரீரங்கம் ஊருக்கு வடக்கே இருந்து வரும் ஆபத்துக்களைத் தவிர்ப்பதற்காக மந்திர சக்தி ஏற்றப்பட்ட அம்மன் விக்கிரகமாக இங்கே நிறுவியதாக புராண வரலாறு கொண்டது. வரலாற்றுக் காலத்தில் கண்ணனூர் என்று பெயர் பெற்ற இந்த இடம் இப்போது சமயபுரம் என்று அழைக்கப் படுகிறது.

இப்போதும் ஸ்ரீரங்கத்தில் இருந்து சமயபுரம் மாரியம்மனுக்கு சீர் கொண்டு வந்து கொடுப்பதும், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருபவர்கள் சமபுரம் மாரியம்மனை வந்து வணங்கி அருள் பெற்றுச் செல்வதும் இந்த இரு தலத்தின் பிணைப்பினை உணர்த்தும்.

இந்த நிலையில், நேற்று காலை ஸ்ரீரங்கம் கோயிலில் ஏற்பட்ட அசம்பாவிதமும், அதன் பின்னர் நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்யப் பட்டதும், இன்று காலை சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பாகனின் மரணமும் தொடர்ந்து நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜைகள் மேற்கொள்ளப் படுவதும் பக்தர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீரங்கம் கோயில் விவகாரத்தில் நடந்த உண்மைகளை சரியான விசாரணை மூலம் வெளிப்படுத்தி, கருவறைக்குள் காலணி வீசிய கும்பலைக் கண்டறிந்து தகுந்த தண்டனை பெற்றுத் தந்து, இது போல் மீண்டும் இறை இகழ்வு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவிரிக்கும் ஸ்ரீரங்கத்துக்கும் தொடர்பு உண்டு என்பதால், காவிரி அன்னைக்கு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் கோயில் எழுப்பியுள்ளனர். அண்மைக் காலமாக ஸ்ரீரங்கம் கோயிலை வைத்து மேற்கொள்ளப் படும் தவறான பிரசாரங்களாலும், நக்ஸல்கள், நாத்திகர்கள் இவர்களாலும்  பூஜை நடைமுறைகளை சரிவர மேற்கொள்ளாமல் இருப்பவர்களாலும், திருச்சி நகருக்கு வறட்சி, காவிரி பிரச்னை, மாநிலத்தில்  அமைதியின்மை, ஆள்பவர்களுக்கு ஆபத்து என பல்வேறு சிக்கல்களை மாநிலம் சந்தித்து வருகிறது என்று பக்தர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe