நதிகள் இணைப்பு பணிகளை விரைவுபடுத்த முதல்வர் எடப்பாடி கோரிக்கை!

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு தன்னுடைய பணிகளை உடனடியாக தொடங்கவேண்டும் ; நதிகள் இணைப்பு பணிகளை துரிதமாக செயல்படுத்தவேண்டும் என்று  நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

தில்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ”தமிழகம் தனது நீராதாரத் தேவைக்கு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீரையே நம்பி இருக்கிறது. எனவே, உச்சநீதிமன்ற உத்தரவின் படி அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

இ – நாம் (E Nam) எனப்படும் தேசிய விவசாய இணைய வழிச் சந்தைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிலுவைத் தொகை 13.50 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க வேண்டும். மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் என்ற மருத்துவக் காப்பீடுத் திட்டம், தமிழக அரசு ஏற்கனவே செயல்படுத்தி வரும் முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு திட்டத்தை பெருமளவு உள்ளடக்கிய அம்சங்களுடன் உள்ளது.

இதுவரை 26 லட்சம் பேர் பயனடைந்துள்ள மாநில அரசின் இந்தத் திட்டத்தை பலவீனப் படுத்தாமல், எப்போதும் போல செயல்படுத்தி வர அனுமதிக்க வேண்டும்.

தமிழகத்தின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களான ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 14 ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைப் படி மாநிலங்களுக்கான வரிவருவாய் பகிர்வு கணிசமாக குறைந்திருக்கிறது, இதனால் தமிழகத்திற்கு ஆண்டு வருவாயில் 6 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி திட்ட ஒதுக்கீடுகளை 15 ஆவது நிதிக்குழு பரிந்துரைப்பது தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு அநீதி இழைப்பதாகும்., 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படியே ஒதுக்கீடுகள் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

ஜிஎஸ்டி அமலுக்குப் பின்னர் மாநிலங்கள் தங்களது நிதி ஆதாரங்களை விரிவு படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு குறைந்திருக்கிறது. இதற்கான மாற்று வழிமுறைகள் குறித்து ஆலோசிக்க வேண்டும்.

வளர்ந்த நாடுகளில் இருப்பதைப் போல, மறைமுக வரி வசூல் உரிமை மாநில அரசுகளிடமும், நேரடி வரி வசூல் அதிகாரம் மத்திய அரசிடமும் இருக்கும் வகையில் தற்போதைய நடைமுறையை எளிமைப் படுத்தலாம்.

முக்கிய மாற்றாக தனிநபர் வருமானவரி வசூல் அதிகாரத்தை மாநில அரசிடம் ஒப்படைப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்று  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதி ஆயோக் கூட்டத்தில் கூறினார்.

இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தி இருக்கிறேன். 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைப்படி நிதி ஒதுக்கீடு செய்வதை ஏற்க முடியாது என்று கூட்டத்தில் தெரிவித்தேன் என்றார்.

மேலும்,  100 நாள் வேலைத் திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன். முதலமைச்சர் காப்பீடு திட்டத்திற்கு நிதி வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

ராமநாதபுரம்,விருதுநகர் மாவட்டக்களில் மருத்துவக் கல்லூரி தொடங்க வலியுறுத்தினோம். நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் புதிய கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம்.

விருதுநகர் மாவட்டத்தில் விரைவில் பல் மருத்துவக் கல்லூரி அமைக்க அனுமதி கேட்டுள்ளோம் . தமிழகத்திற்கு என்னென்ன தேவை என்பதை பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளேன்.

மதுரை காந்தி அருங்காட்சியகத்திற்கு 10 கோடி நிதி வழங்கி மேம்படுத்த கோரியுள்ளோம்.  1971 – ம் ஆண்டு மக்கள் தொகையை கணக்கில் கொண்டு நிதி பங்கீடு கோரியுள்ளோம்.

நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் அதிகளவில் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. விவசாயிகளுக்கான பல்வேறு நலத்ததிட்டங்கள் குறித்த கோரிக்கைகளை நிதிஆயோக் கூட்டத்தில் முன்வைத்துள்ளேன்.

குடிமராமத்து பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்க மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். காவிரி மேலாண்மை ஆணையம் உடனடியாக செயல்பாட்டுக்கு வர பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.. என்று கூறினார் எடப்பாடி பழனிசாமி.