காவிரியின் வடிகாலா தமிழகம்?: கர்நாடக குமாரசாமியை ஒரு பிடி பிடித்த பாமக., ராமதாஸ் !

சென்னை: தமிழகம் என்ன காவிரியின் வடிகாலா என்று கேள்வி எழுப்பியுள்ள பாமக., நிறுவுனர் ராமதாஸ், கர்நாடக முதல்வர் குமாரசாமியை ஒரு பிடி பிடித்துள்ளார். காவிரியில் தமிழகம் உரிமை மாநிலம் என்பதை குமாரசாமி உணரவேண்டும் என்று கூறியுள்ளார்.

இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், காவிரி மேலாண்மை ஆணையத்தை எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என்று கர்நாடகம் துடிக்கிறது.

கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டு விட்டது. கபினி அணைக்கு வினாடிக்கு 35,000 கன அடிக்கு கூடுதலாக தண்ணீர் வந்தபோது மட்டும் தான் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன் பின்னர் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு விட்டது. இதன் மூலம் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பையோ, உச்சநீதிமன்றத் தீர்ப்பையோ மதித்து கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடவில்லை; அணையின் பாதுகாப்பு கருதி தான் தண்ணீர் திறக்கப்பட்டது என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 அணைகளின் மொத்தக் கொள்ளளவு 104 டி.எம்.சி ஆகும். அதில் பாதிக்கும் மேல், 56 டி.எம்.சி அளவுக்கு கர்நாடக அணைகளில் தண்ணீர் உள்ளது. ஆனால், தமிழகத்திற்கு கர்நாடகம் திறந்து விடும் தண்ணீரின் அளவு ஒரு நாளுக்கு அரை டி.எம்.சி கூட இருக்காது. இது பெரும் அநீதி.

கர்நாடக அணைகளில் கடந்த ஆண்டு இதே நாளில் இருந்ததை விட இப்போது 10 மடங்குக்கும் கூடுதலாக நீர் இருப்பு உள்ளது. ஆனாலும், தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடகம் மறுப்பதிலிருந்தே நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மதிப்பதில்லை என்பது தெளிவாகிறது.

தமிழகத்தை வடிகாலாகத் தான் கர்நாடகம் பார்க்கிறதே தவிர, காவிரியில் சம உரிமை கொண்ட மாநிலமாகப் பார்க்க மறுக்கிறது. கர்நாடகத்திடமிருந்து தண்ணீரைப் பெறுவது தமிழகத்தின் உரிமை. ஆனால், கர்நாடகமோ தமிழகத்திற்கு தண்ணீரை பிச்சை தருவதாக நினைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலை தொடர அனுமதிக்கக் கூடாது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு முழு வடிவம் கொடுக்கப்படும் போது தான், இச்சிக்கலை ஓரளவாவது தீர்க்க முடியும். எனவே, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடகத்தின் சார்பிலான உறுப்பினரை உடனடியாக நியமிக்க மத்திய அரசு ஆணையிட வேண்டும்.

இம்மாத இறுதிக்குள் ஆணையத்தின் கூட்டத்தைக் கூட்டி, குறுவை பாசனத்திற்கு தேவையான தண்ணீர் தமிழகத்திற்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்… என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் திமுக., பாமக., விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் உள்ளிட்ட அமைப்புகள் எல்லாமே, காவிரியை வெறும் அரசியல் நோக்கத்துடனேயே பார்த்து வருகின்றன என்பது அவற்றின் அண்மைக்கால செயல்பாடுகளில் இருந்து தமிழக மக்களுக்குத் தெளிவாகப் புரியவைத்திருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியத்துக்காக தமிழகத்தை பெரும் பதற்றத்துக்கு உள்ளாக்கி, அதற்கு மத்திய மாநில அரசுகளே காரணம் என்று பிரசாரம் செய்துவந்த இந்தக் கட்சிகள் எல்லாம், இப்போது மத்திய மாநில, நீதித்துறை உதவியுடன் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு விட்டும் கூட, கூட்டணிக் கட்சியின் கூட்டணி ஆட்சி என்ற ஒரே காரணத்துக்காக, கர்நாடக முதல்வரையோ, கர்நாடக காங்கிரஸையோ எதிர்த்து ஒருவார்த்தை கூட பேசவில்லை.

இந்நிலையில், வழக்கம் போல் மத்திய மாநில அரசுகளைக் குற்றம் சாட்டி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டாலும், கர்நாடகத்தின் துரோகத்தையும் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.