அதிர்ச்சி சம்பவம்! உண்டியல் காணிக்கை தங்கத்தை தன் பாக்கெட்டில் செருகிச் சென்ற கோயில் அதிகாரி!?

கன்னியாகுமரி தேவசம் போர்டில் உண்டியல் காணிக்கைகளை எண்ணிய போது, ஒரு நகைமுடிச்சை தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு கோயில் அதிகாரி நடையைக் கட்டியதாக ஒரு வீடியோ வலம் வந்து கொண்டிருக்கிறது.

கன்னியாகுமரி தேவசம் போர்டில் உண்டியல் காணிக்கைகளை எண்ணிய போது, ஒரு நகைமுடிச்சை தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு கோயில் அதிகாரி நடையைக் கட்டியதாக ஒரு வீடியோ வலம் வந்து கொண்டிருக்கிறது.

வேலியே பயிரை மேயும் சம்பவமாக அமைந்த இது குறித்துக் கூறப்படுவதாவது…

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உண்டியல் எண்ணும்போது உண்டியலில் கிடந்த தங்க நகைகள் இருந்த கைப் பையை தனது பாக்கெட்டில் செருகிச் சென்றுள்ளார் தேவசம் அலுவலக அதிகாரி ஜீவா என்று குற்றம் சாட்டுகிறார்கள். இவர் திருக்கோயில் பணியாளர் சங்க மாநில தலைவரா உள்ளார் என்பது அந்தச் செய்தி.

சமூக வலைத்தளங்களில் இது குறித்த வீடியோ ஒன்று உலா வருகிறது. வாட்ஸ் அப் மூலம் பரவும் அந்த வீடியோவில், கோயில் உண்டியலில் காணிக்கையாகப் போடப் பட்ட நகைகள், பணங்கள் உள்ளிட்டவை எண்ணப் படும் போது, நின்று கண்காணித்துக் கொண்டிருந்த கோவில் அலுவலக அதிகாரி, ஒரு கட்டத்தில் நகைப் பை ஒன்று மஞ்சளாக இருப்பதை எடுத்து, அதனுள் பிரித்துப் பார்த்து, அது என்ன என்று ஆராய்வது போல் காட்டி, அப்படியே அதை மடித்து தனது பாக்கெட்டுக்குள் செருகிக் கொண்டு, பேண்ட் பாக்கெட்டில் கையை உள்ளே மறைத்தபடி, சற்று அங்கும் இங்கும் பார்த்து இயல்பாகக் காட்டியபடி, பின்னர் அங்கிருந்து நகர்ந்து விடுகிறார்.

இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. வேலியே பயிரை மேய்வது போல் அமைந்திருக்கிறது இந்தச் சம்பவம்.  தற்போது தமிழக ஆலயங்களில் திருடி கொள்ளை அடிக்கப் பட்டு வேற்று நாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்ட திருக் கோயில் சிலைகள் ஒவ்வொன்றாக மீட்கப்பட்டு வருகின்றன. இந் நிலையில் பலர் முன்னிலையில் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி நடந்த போது, அதுவும் வீடியோ பதிவு செய்யப் பட்ட நிலையில், இது போன்ற துணிச்சலான திருட்டு சம்பவங்கள் நடக்குமேயானால் இதற்கு முன் எவ்வளவு கொள்ளைகள் நடந்திருக்கும் என்று கேள்வி எழுப்புகின்றனர் பக்தர்கள்.

இது போன்ற திருட்டுக்களை தடுக்க வேண்டும் என்று கூறும் அன்பர்கள், இவை எல்லாம் கணக்கிலேயே வராதவை என்பதால் அதிகாரிகளே திருடிச் செல்ல வசதியாக அமைந்து விடுகிறது என்று வருத்தம் தெரிவிக்கின்றனர். மேலும், லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு குமரி மாவட்ட இந்து சமய அறிநிலைய துறையைக் கண்காணிக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.