தமிழகத்துக்கு உடனடியாக 30 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உத்தரவு: ஆணையத்தின் முதல் கூட்டத்தில் முடிவு!

புது தில்லி: தமிழகத்துக்கு ஜூலை மாதம் திறந்து விட வேண்டிய 34 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாகத் திறந்து விட கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் உத்தரவு இடப்பட்டது.

புது தில்லி: தமிழகத்துக்கு ஜூலை மாதம் திறந்து விட வேண்டிய 30 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாகத் திறந்து விட கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் உத்தரவு இடப்பட்டது.

பலத்த எதிர்பார்ப்புகளிடையே காவிரி ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று ஆணையத் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களின் உறுப்பினர்களுடன் மத்திய அரசுப் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

தில்லியில் மத்திய நீர் வள ஆணையத்தின் தலைமையகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் காவிரி ஆணையத்தின் வரவு – செலவுக் கணக்குகள், மாநிலங்களின் பொறுப்புக்கள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆணையத்துக்கு நிரந்தர அலுவலகம் அமைப்பது, பணியாளர் நியமனம் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிராக கர்நாடகம் வரிந்து கட்டிக் கொண்டு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. கர்நாடகத்தின் தரப்பில் இருந்து உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், ஜூலை மாதத்துக்கான தண்ணீரைத் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு இட்டுள்ளது. அதன்படி தமிழகத்துக்கு 30 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும்.

இந்தக் கூட்டத்தின் போது, ஜூலை 5 ஆம் தேதி காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெறும் என மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.