காவிரிக்காக அனைத்துக் கட்சிக் கூட்டம்: என்ன சொல்கிறார் எடப்பாடி?

சென்னை : சட்டமன்றத்தில் காவிரி விவகாரம் குறித்த விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது திமுக சார்பில் பேசிய துரைமுருகன், காவிரி விவகாரத்தில் முடிவு எடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

சென்னை : சட்டமன்றத்தில் காவிரி விவகாரம் குறித்த விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது திமுக சார்பில் பேசிய துரைமுருகன், காவிரி விவகாரத்தில் முடிவு எடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

தமிழக சட்டப் பேரவையில் பேசிய, எதிர்க் கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க கர்நாடகாவில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் குறித்து சுட்டிக் காட்டினார். அதேபோல் தமிழகத்திலும் முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்துப் பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தமிழக பிரதிநிதிகளை அழைத்துக் பேசி எவ்வாறு செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. காவிரி ஆணையம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு 15 ஆண்டுகளுக்கு பொருந்தும்.

காவிரி ஆணையத்தின் செயல்பாடுகளை பொறுத்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட நடவடிக்கை எடுக்கப்படும். உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் இன்றைய கூட்டத்தில் அனைத்து பிரச்னைகளும் பேசித் தீர்க்கப்படும். தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரை கர்நாடகத்திடம் இருந்து பெற்று வரும் வகையில் முதல் ஆலோசனைக் கூட்டம் அமையும்.

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை நிச்சயம் நிலைநாட்டப்படும்… என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப் பேரவையில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், காவிரி மேலாண்மை ஆணையம் எவ்வாறு செயல்படுகிறது, தீர்ப்பு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பனவற்றை எல்லாம் பார்த்தபிறகு, அவசியம் ஏற்பட்டால் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.