ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப் படும் விவகாரத்தில் அமைச்சர் விளக்கம்!

3 மாதங்கள் தொடர்ந்து ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கவில்லை என்றால் ரேசன் கார்டுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் ஓர் அறிவுறுத்தலை வழங்கியிருந்தார்.

பொருள்கள் வாங்கவில்லையானால் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்ட விவகாரத்தில் உணவுத் துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.  ரேசன் கடைகளில் 3 மாதம் பொருட்கள் வாங்கவில்லை என்றால் ரேசன் கார்டு ரத்து செய்யப்பட மாட்டாது என உணவுத் துறை அமைச்சர் காமராஜ் சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார்.

3 மாதங்கள் தொடர்ந்து ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கவில்லை என்றால் ரேசன் கார்டுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் ஓர் அறிவுறுத்தலை வழங்கியிருந்தார். அந்த அறிவிப்பை தமிழக அரசு பின்பற்றக் கூடாது என திமுக எம்.எல்.ஏ., மா.சுப்பிரமணியன் பேரவையில் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதில் அளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், 3 மாதம் தொடர்ச்சியாக ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கவில்லை என்றால், முறைகேட்டைத் தடுக்க ரேஷன் கார்டை ரத்து செய்யலாம் என்பது மத்திய அமைச்சரின் அறிவுரைதான் என்றும், அது அரசின் கொள்கை முடிவு அல்ல என்றும் கூறினார்.

மேலும், தமிழகத்தில் 4, 5 மாதங்கள் வரை தொடர்ச்சியாக ரேஷன் கடைகளில் உணவுப் பொருள்கள் வாங்காமல் இருந்தாலும், சம்பந்தப்பட்ட நபர்கள் அந்தந்தப் பகுதியில் வசிப்பதை உறுதி செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு மீண்டும் ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்ட அமைச்சர், வருங்காலங்களிலும் அந்த நடைமுறையே தொடரும் என்று விளக்கமளித்தார்.