வாட்ஸ்அப் வதந்திகளால் ஒரே மாதத்தில் 20 பேர் படுகொலை! மத்திய அரசு கடும் எச்சரிக்கை!

தமிழகத்திலும், தெலங்கானா, அசாம், குஜராத், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் குழந்தைகள் கடத்தப்படுவதாகக் கூறி அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டனர்

மும்பை: வாட்ஸ்அப்பில் பரவிய வதந்திகளால் ஒரே மாதத்தில் 20 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வதந்தி மற்றும் பொய்ச் செய்தியைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.

மேலும், பொய்த் தகவல்கள் மற்றும் வெறுப்பு உணர்வைத் தூண்டும் வகையிலான விஷயங்கள் பரவுவதைத் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு ‘வாட்ஸ்அப்’ நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் குழந்தைத் திருடர்கள் இவர்கள் என்று படம் எடுத்து, அவை வாட்ஸ் அப்பில் பரப்பப் பட்டு, அதுபோன்ற தோற்றத்துடன் எவராவது வெளியில் வந்தால், சந்தேகத்தின் பேரில் பலர் அந்தந்த பகுதியைச் சேர்ந்தவர்களால் அடித்துக் கொல்லப்பட்டு விடுகின்றனர். இந்தச் சம்பவங்கள் நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக இவ்வாறு வதந்திகள் பரவுவதே இத்தகைய செயல்களுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

தமிழகத்திலும், தெலங்கானா, அசாம், குஜராத், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் குழந்தைகள் கடத்தப்படுவதாகக் கூறி அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டனர். இத்தகைய குற்றச்சாட்டைக் கூறி, கடந்த வாரம் மகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில் 5 பேர் கிராம மக்களால் அடித்துக் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, வதந்தி மற்றும் பொய்ச் செய்திகளைப் பரப்புவோர் மீது மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வலியுறுத்தியுள்ளார்.

குழந்தை கடத்தல் உள்பட சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகள் மற்றும் போலியான செய்திகளால் பொதுமக்களால் தாக்கப்பட்டு ஒரே மாதத்தில் 20 பேர் உயிரிழந்துவிட்டதாக கிரண் ரிஜிஜு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக மாநில அரசுகளும், தன்னார்வக் குழுவினரும் போதிய விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், வதந்திகளைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளை கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்..

மேலும், மத்திய தகவல் தொடர்புத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வதந்திகளால், பலர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இவை கடும் கண்டனத்துக்கு உரியவை. இதைத் தடுக்க தக்க நடவடிக்கை எடுக்கும்படி வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.