மக்கள் சேவகன் நான்; எனைக் காண மக்கள் ஓடி வருகின்றனர்; எதிர்க் கட்சிகளோ சுயலாபம் கருதி ஒன்றிணைகின்றனர்: மோடி!

ஆன்லைன் இணையதள இதழான ஸ்வராஜ்யா மேக் #Swarajyamag கடந்த ஜூன் 30 ஆம் தேதி பிரதமர் மோடியை பேட்டி கண்டது. அதில் பல கருத்துகளை மோடி மனம் திறந்து வெளிப்படுத்தியுள்ளார்.


  • மக்களின் அன்பில் இருந்து ஒதுங்கி இருக்க நான் ஒன்றும் மஹாராஜாவோ அல்லது சர்வாதிகாரியோ இல்லை
  • மக்கள் மத்தியில் இருப்பதும், அவர்களுடன் கலந்துரையாடுவதுமே எனக்கு பலத்தை தருகிறது.
  • நான் பயணிக்கும் போதெல்லாம், அனைத்து வயதினர் மற்றும் பல்வேறு சமுதாய மக்கள், தெருக்களில் எனக்காகக் காத்திருந்து வரவேற்பதை நான் பார்க்கிறேன்.
  • அவர்கள் காட்டும் அன்பை ஏற்காமல், காரில் அமர்ந்து பயணிக்க என்னால் இயலாது
  • அதனால் தான் காரில் இருந்து இறங்கி அவர்களுடன் கலந்துரையாடுகிறேன்

ஆன்லைன் இணையதள இதழான ஸ்வராஜ்யா மேக் #Swarajyamag கடந்த ஜூன் 30 ஆம் தேதி பிரதமர் மோடியை பேட்டி கண்டது. அதில் பல கருத்துகளை மோடி மனம் திறந்து வெளிப்படுத்தியுள்ளார்.

மோடிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மோடி எதிர்ப்பு என்ற ஒரே கொள்கையை முன்வைத்து மகாகட்பந்தன் என்ற பெயரில் ஒன்றிணைவது, தேர்தல் 2019, அதன் பின்னணி, தேஜகூ.ட்டணிக்கும் கட்சிகளுக்குமான பிரச்னைகள், காஷ்மீர் பிரச்னை, பாஜக.,வில் அறிவுஜீவிகள் பற்றாக்குறை, பிரதமர் அலுவலக அதிகார விவகாரங்கள், அரசியல் ரீதியான சவால்கள் என பலவற்றுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

குறிப்பாக, பிரதமர் மோடியின் பாதுகாப்பு கருதி, அவரது பாதுகாப்பை பலப்படுத்தும்படி உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியது. இதனால், சாலை வழியான பயணத்தை தவிர்க்கும்படி பிரதமரை உளவுத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இந்தப் பின்னணியில், தன்னால் அவ்வாறு ஒதுங்கியிருக்க இயலாது என்றும், தான் மக்கள் சேவகன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தப் பேட்டியில் மோடி குறிப்பிட்டவற்றில் சில…

பாஜக., அரசு மக்கள் நலனில் மட்டுமே அக்கறை செலுத்தி வருகிறது. நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தேவையான திட்டங்களையே மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது.

நான் ஒரு மஹாராஜா இல்லை.. வெறும் சாதாரண ஒரு குடிமகன். மக்களின் சேவகனான என்னைக் காண்பதற்காக, மக்கள் ஆர்வத்துடன் ஓடி வருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சிகளோ சுயநலன் கருதி, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக கொள்கையற்று பாஜக,வுக்கு எதிராக வேலை செய்யவே ஒருங்கிணைகின்றனர்.

‘வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடியை நீக்குவோம்’ என்று மட்டுமே குரல் எழுப்பி வரும் எதிர்க்கட்சிகள், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கத்துடன் மட்டுமே செயல்படுகின்றன.

காங்கிரஸ் தலைவர் ராகுல், தானே  பிரதமர் ஆக பதவியேற்கத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் பிரதமர் பதவி மீது கண் உள்ளது. சமாஜ்வாதி கட்சிக்கோ தங்கள் தலைவரைத் தவிர வேறு யாருக்கும் பிரதமராகத் தகுதி இல்லை என்ற நினைப்பு.

சுய லாபத்திற்காகவும், தங்களை நிலை நிறுத்திக்கொள்ளவும், ஆட்சி அதிகாரத்துக்காகவும் மட்டுமே, மத்தியில், ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் எதிர்க் கட்சிகளால், மக்களுக்கு என்ன நன்மை விளையப் போகிறது..?

கருத்து ஒறுமை சிறிதும் இல்லாத இவர்கள், மோடியை எதிர்ப்பது என்ற கருத்தில் மட்டுமே ஒன்று கூடுகின்றனர். இவர்களால் வெகு காலத்திற்கு இணைந்து செயல்பட முடியாது.

கர்நாடக மக்கள் பாஜக., மீது நம்பிக்கை வைத்து எங்களுக்கு அதிக இடங்களில் வெற்றியை பெற்றுத் தந்தனர். ஆனால் மூன்றாவது இடத்திற்கு வந்த ஒருவர், முதல்வர் ஆகியுள்ளார். பாஜக.,வைத் தடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக காங்கிரஸ் கட்சி குமாரசாமியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.

இதுபோல் எதிர்க்கட்சிகளின் கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணியாகத்தான் உள்ளது. நாங்கள், வளர்ச்சியை முன்வைத்தும் மக்கள் நலத் திட்டங்களை முன்வைத்துமே வாக்காளர்களை சந்திக்க உள்ளோம். ஆனால், எதிர்க் கட்சிகளிடம் எவ்வித ஆக்கப்பூர்வமான திட்டங்களும் இல்லை, மோடி எதிர்ப்பு என்ற ஒற்றை ஆயுதம் மட்டுமே கைவசம் உள்ளது.

பாஜக., தலைமையிலான, தேஜ கூட்டணியில் இருபதுக்கும் மேற்பட்ட கட்சிகள், ஓர் அழகான அன்பான குடும்பமாக இடம் பெற்றுள்ளன. கூட்டணிக் கட்சிகளுக்கு தேவையான முக்கியத்துவமும் அங்கீகாரமும் அளிக்கப்படுகிறது. எங்கள் கூட்டணி உண்மையை அடிப்படையாகக் கொண்டது. இதில் சந்தர்ப்பவாதம் கிடையாது. யாரையும் கட்டாயப்படுத்தி கூட்டணியில் இடம் பெறச் செய்வதுமில்லை.

காஷ்மீரில் நல்லாட்சி, வளர்ச்சி என்பதே எங்கள் குறிக்கோளாக உள்ளது. மத்தியில், இதற்கு முன் ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் தீவிரம் காட்டவில்லை. எனவே, பயங்கரவாதத் தாக்குதல், எல்லை அத்துமீறல்கள் அதிகம் நடந்தன. தற்போது, அதுபோன்ற சம்பவங்கள் கடந்த கால வரலாறு ஆகிவிட்டன.

பல மாநிலங்களில் நக்சலைட் ஆதிக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது. அப்பகுதிகளில் வளர்ச்சி அதிகரித்துள்ளது. நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில், பாஜக., அரசு எவ்வித சமரசமும் செய்வதில்லை.

சாலை மேம்பாடு, கிராமப்புற வளர்ச்சி, வட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில், மத்திய அரசு அதிக கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. அதற்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நாட்டு மக்களின் நலனை மட்டுமே முன்வைத்து ஆட்சி செய்து வரும் பாஜக., மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது…

ஆங்கில பேட்டியின் முழு வடிவம்: