சூதாட்டங்களை சட்ட பூர்வமாக்கலாம்: வரி வருவாய் கிடைக்கும்! மத்திய அரசுக்கு சட்ட கமிஷன் பரிந்துரை!

கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகளை முன்வைத்து, பலரும் பந்தயம் கட்டுதல், சூதாட்டம் மேற்கொள்ளுதல் என முறைகேடான வருமானத்தைப் பார்க்கின்றனர். எனவே அவற்றை சட்டப்பூர்வமாக்கி, அந்த வருமானம் மீது வரிகளை வசூலித்தால், அரசுக்கு வரிவருவாய் கிடைக்கும் என, மத்திய சட்ட கமிஷன் அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.

ஐபிஎல், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் போன்றவற்றின் போது, சட்டவிரோத சூதாட்டங்கள் நடைபெறுகின்றன. இது தொடர்பாக பல்வேறு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு சிலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.  ஐபிஎல்.,லில் இரு அணிகள் சூதாட்ட புகார் காரணமாக போட்டிகளில் தடை விதிக்கப்பட்டும் இருந்தது. சில வீரர்கள் குற்றச்சாட்டுக்கு ஆளாகி போட்டித் தொடர்களில் இருந்து நீக்கப் பட்டார்கள். எல்லாவற்றுக்கும் காரணம், சட்டவிரோத சூதாட்டம்.

இந்நிலையில், இத்தகைய சூதாட்டம், பந்தயம் கட்டுதல் ஆகியவற்றை வரைமுறைப்படுத்தி வரி வரம்புக்குள் கொண்டு வரும் பட்சத்தில் சூதாட்டத்தின் மூலம் அனைத்து மாநிலங்களுக்கும் கூடுதல் வரி வருவாய் கிடைக்கும் என மத்திய சட்ட கமிஷன் பரிந்துரைத்துள்ளது.

வரி ஏய்ப்பைத் தடுக்கும் வகையில் பான் கார்டு, ஆதார் அட்டை போன்றவற்றைப் பயன்படுத்தி சூதாட்டத்தில் ஈடுபடுவோரின் கணக்கை இணைக்கும்படி சட்ட ஆணையம் யோசனை தெரிவித்துள்ளது.  கடுமையான சட்டங்களைக் கொண்டு கிரிக்கெட் சூதாட்டத்தை சட்ட பூர்வமாக்க வேண்டும் எனவும் இதற்காக நாடாளுமன்றம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.

குதிரைப் பந்தயங்கள் போன்றவை நடைபெறும் போது, போட்டி பந்தயங்களும் இதனால் சூடு பிடிக்கக் கூடும்.. மேலும், வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்கும் வகையில் கேசினோ சூதாட்டங்கள், ஆன்லைன் ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் அனுமதிக்கலாம் என சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது. வெளிநாடுகள் சிலவற்றில் சூதாட்டங்கள் சட்ட பூர்வமாக்கப் பட்டுள்ளன.