சிலை திருட்டில் சிக்காமல் 11 ஆண்டுகள் டபாய்த்தவர்… சீக்ரெட்டாக சுற்றி வளைத்து கைது செய்த போலீஸ்!

சென்னை: பல கோடி ரூபாய் மதிப்பு சிலைகள் திருடப்பட்ட வழக்கில் சிக்காமல் 11 ஆண்டுகள் போலீஸாரை சுற்ற விட்டு ஏமாற்றிக் கொண்டிருந்தவரை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் சென்னையில் கைது செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் பழவூரில் உள்ள நாறும்பூநாத ஸ்வாமி கோயிலில் இருந்து கடந்த 2005ஆம் ஆண்டு 13 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டன. இது தொடர்பாக சுபாஷ் சந்திர கபூர், வல்லப பிரகாஷ், ஆதித்ய பிரகாஷ், தீனதயாளன் உள்ளிட்ட 17 பேரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஏற்கெனவே கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து நாறும்பூநாத ஸ்வாமி கோயிலின் ஆடல்வல்லான் நடராஜர் விக்ரஹம் உள்பட சிவகாமி அம்பாள், காரைக்கால் அம்மையார், மாணிக்கவாசகர், கிருஷ்ணர், அஸ்திரதேவர், வெயில்காத்த அம்மன், கோமதி அம்மன், சுப்பிரமணியர் என 9 விக்ரஹங்கள் மீட்கப்பட்டன.

இந்தத் திருட்டு வழக்கில் தொடர்புடைய நெல்லை மாவட்டம் தாழையூத்தைச் சேர்ந்த பரமதுரை என்பவரை கடந்த 11 ஆண்டுகளாக போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், ரகசிய தகவலின் பேரில் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரமதுரையைக் கைது செய்தனர்.

அதன் பின்னர் அவர் கும்பகோணம் கூடுதல் தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப் பட்ட பரமதுரை, 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.