கிறிஸ்துவ கடவுள் என்று ஒருவன் இருந்தால் நான் பதவி விலகுகிறேன்: அதிபர் சவால்

மணிலா: கிறிஸ்துவ கடவுள் என்று ஒருவன் இருந்தால் நான் பதவி விலகுகிறேன் என்று பிலிப்பின்ஸ் நாட்டு அதிபர் சவால் விடுத்திருக்கிறார்.

பிலிபின்ஸ் அரசுக்கும் அந்நாட்டு கிறிஸ்துவ சர்ச்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கடுமையான பதற்ற நிலையை அடுத்து, அந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ டுடெர்ட் கிறிஸ்துவர்களிடம் அவர்களின் கடவுள் குறித்து சவால் விடுத்திருக்கிறார்.

டாவோ நகரின் லனங்க் எஸ்எம்எக்ஸ் கன்வென்ஸன் மையத்தில் நடந்த தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வாரக் கொண்டாட்டத்தில் வெள்ளிக்கிழமை அன்று பேசிய அந்நாட்டு அதிபர் டுடெர்ட், கிறிஸ்துவ சர்ச்களுக்கு சவால் விடுத்துப் பேசினார். அப்போது அவர், உங்கள் கடவுள் என்று ஒருவர் இருப்பதாக காட்டுக் கத்தல் கத்தி சத்தம் போட்டுக் கொண்டு இருக்கிறீர்களே அப்படி ஒருவரை, சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்வார் என்று கூவுகிறீர்களே அப்படி ஒருவரை…. தனிப்பட்ட வகையில் நேரில் பார்த்ததாகவும் இருப்பதாகவும் கூறுகிறீர்களே அப்படி ஒருவரை… உண்மையில் உங்களில் யாராவது ஒருவர் பார்த்திருந்தால் அல்லது அப்படி ஒருவர் உண்மையில் இருந்தால்… நான் என் அதிபர் பதவியில் இருந்து இன்று இரவே விலகுகிறேன் என்று கூறியுள்ளார்.

இருப்பினும் தான் ’கடவுள் மிகப் பெரியவர்’ என்பதை நம்புவதாகவும், மதக் குழுக்களுக்கு இடையே மேற்கொள்ளும் செயல்பாடுகளையே கேள்வி கேட்பதாகவும் கூறியுள்ளார் டுடெர்ட்.

மேலும், நீங்கள் மக்களுக்கு உதவி செய்வதாகக் கூறுகிறீர்கள். அப்படி எனில் நாங்கள் ஏன் உங்களுக்கு பணம் பொருள் கொடுக்க வேண்டும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தாங்கள் தரும் நிதி உதவிகளை ‘அரண்மனை’களை பராமரிக்கவே சர்ச்கள் பயன்படுத்துகின்றன என்று குற்றம் சாட்டினார் பிலிப்பின்ஸ் அதிபர்.

ஜூலை 9ம் தேதி நாளை பிலிப்பின்ஸ் கத்தோலிக் பிஷப்களின் மாநாட்டில் அதிபர் டுடெர்ட் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அதில், தனது அரசுக்கும் மற்ற மதக்குழுக்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை குறித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.

அண்மைக் காலமாகவே சர்ச்களின் நடவடிக்கை குறித்து பலத்த விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், கடந்த ஜூன் 24ம் தேதி அன்று டுடெர்ட் ‘முட்டாள் கடவுள்’ என்று கூறியிருந்தது மேலும் பதற்றத்தை அதிகரித்தது.

97% கிறிஸ்தவம் திணிக்கப்பட்ட பிலிப்பின்ஸில் மிஷனரிகளால் வறுமை, பாலியல் வன்கொடுமை, அராஜகம் இவை அதிகரித்துவிட்டதாக நாட்டின் அதிபர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.