தமிழகத்தில் மோடி ஆட்சி! கொண்டு வருவோமா… கொண்டு வருவீர்களா..?!

சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற பாஜக., பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா. அப்போது அவர், தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பாணியில், கூட்டத்தில் திரண்டிருந்த தொண்டர்களைப் பார்த்து கேள்வி கேட்டு பதில் வாங்கும் ஸ்டைலை பின்பற்றினார்.

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிய அமித் ஷா, சொட்டு நீர் பாசனத்திற்காக ஆயிரம் கோடி ரூபாய்
உள்பட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது என்று பட்டியலிட்டார். கடந்த 4 ஆண்டுகளில் 5 லட்சத்து பத்தாயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு தரப்பட்டுள்ளது என்று கூறிய அவர், ஆட்சியில் இருந்த போது
தமிழகத்துக்கு அவர்கள் என்ன செய்தார்கள் என எதிர்க்கட்சியினர் கணக்கு சொல்ல வேண்டும் என்றார். செப்டம்பர், அக்டோபருக்கு பிறகு கூட்டணி பற்றி முடிவெடுப்போம், தூய்மையான நல்லாட்சி தருகின்ற வலிமையான கூட்டணி இங்கே அமைக்கப்படும் என்றார்.

பொதுக்கூட்டத்தில் திரண்டிருந்த தொண்டர்களைப் பார்த்து உற்சாகம் அடைந்த அமித் ஷா, தமிழகத்திற்கு மோடி அரசு அதிக நிதி வழங்கியுள்ளது. ஆனால் கடந்த காலத்தில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி மத்திய ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு என்ன செய்தது என மக்களாகிய நீங்கள் கணக்கு கேட்பீர்களா,
கேட்பீர்களா? எனக் கேட்டார். தமிழகத்தில் மோடி ஆட்சியைக் கொண்டு வருவோமா? கொண்டு வருவீர்களா? தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய முயற்சி மேற்கொள்வோமா? வெற்றியின் உறுதிமொழியை உரக்க சொல்லுங்கள்… என்று பேசினார்.

கூட்டணி குறித்து இப்போதல்ல அக்டோபரில் ஒரு முடிவு செய்வோம் என்றும், ஊழல் ஒழிப்பு, சட்டம் ஒழுங்கு அடிப்படையில் தமிழகத்தில் வலிமையான கூட்டணி அமைக்கப்படும் என்றும், ஊழலில் ஈடுபடாத கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் என்றும் அமித் ஷா பேசினார்.

மோடி அரசு, சாதியவாதத்தை, ஊழலை, வாரிசு அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது என்று கூறிய அவர், தமிழகத்தில் அனைத்து மட்டங்களிலும் ஊழலை ஒழிக்கும் முயற்சியில் பா.ஜ.க. நிர்வாகிகள்  ஈடுபடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலத் தலைவர்  தமிழிசை உள்ளிட் பலர் கலந்து கொண்டனர். அமித் ஷாவின் பேச்சை பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா மொழிபெயர்த்துக் கூறினார்.